இடதுசாரி கட்சிகளின் கோபத்தை அடக்கவும், அவர்களை சமாதானப்படுத்தவும் சோனியா மூன்று அம்ச திட்டத்தை உருவாக்கியுள்ளார். இந்த திட்டம் என்ன என்பது மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மன்மோகன், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத் ஆகியோர் மட்டுமே இதை அறிந்துள்ளனர். பிரதமரை சந்தித்த பிறகு காங்கிரஸ் உயர் மட்ட கூட்டத்திலும் சோனியா பங்கேற்றார். இதில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் பங்கேற்றனர்.
அணுசக்தி ஒப்பந்த விஷயத்தில் தற்போது வரை நடந்துள்ள சம்பவங்கள் குறித்து இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரியுடன் நடத்திய பேச்சு குறித்து அமைச்சர் பிரணாப் முகர்ஜி விரிவாகவும், முக்கிய கருத்துக்களையும் விளக்கினார். இடதுசாரி கட்சிகள் தங்கள் நிலைப்பாட்டில் இருந்து தற்போது சற்று இறங்கி வந்திருப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இடது சாரி கட்சிகளிடம் காணப்படும் இந்த மாற்றம் குறித்து சோனியா மகிழ்ச்சி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானங்கள், மத்திய அரசை கவிழ்க்கும் அளவுக்கோ அல்லது அபாய எச்சரிக்கை செய்யும் அளவுக்கோ இல்லை என்பதும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நிலைப்பாடு இருப்பதுபோல இடதுசாரி கட்சிகளுக்கு என்று தனிப்பட்ட நிலைப்பாடு உள்ளது நியாயமே என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது. தவிர இடதுசாரி கட்சிகளுக்கு இருக்க கூடிய நிர்பந்தங்களும், அதை ஏற்க வேண்டிய அவசியம் குறித் தும் கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்களை சோனியா உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். தனது நிலை குறித்து அவர் எதையும் கூறவில்லை.
மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட முக்கிய காரணம் சோனியா தான். அவருக்கு ஏழு மொழிகள் தெரியும் என்ற தகவல் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். கூட்டணி ஆட்சி பிரச்னை ஏற்படும் போதெல்லாம், பிரச்னையை ஏற்படுத்தும் கூட்டணி கட்சிகளுடனும், இடதுசாரி கட்சிகளுடனும் நயமாக பேசி பிரச்னைக்கு தீர்வு கண்டு வருபவர் சோனியா தான். அந்த வகையில் அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தையும் சோனியா சிறப்பாக கையாளுவார் என்றே காங்கிரசார் நம்பிக்கை கொண்டுள்ளனர். ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கூடாது என்று இடதுசாரி கட்சிகளும், ஒப்பந்தத்தை அமல்படுத்தியே தீர வேண்டும் என்று பிரதமர் மன்மோகனும் தங்கள் நிலையில் மிகவும் தீர்மானமாக உள்ளனர். இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற வேண்டும் என்றால், சர்வதேச அணுசக்தி ஏஜென்சி மற்றும் அணுசக்தி சப்ளை குழுவுடன் இந்தியா பேச்சு வார்த்தை நடத்தி அவற்றுடன் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதை செய்யக் கூடாது என்பது தான் இடது சாரி கட்சிகளின் நிலை.
இந்த கட்டத்தில் தான் தனது 3 அம்ச திட்டத்தை சோனியா செயல்படுத்த உள்ளார்.
1. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதை மெதுவாக மேற்கொள்வது,
2. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் பேச்சு வார்த்தையை முடிந்தஅளவுக்கு ஒத்திப்போடுவது 3. இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களைய தீர்வுக்காண வழியை கடைப்பிடிப்பது என்பது சோனியாவின் மூன்று அம்ச திட்டம்.
இந்த திட்டத்தை மேற்கொண்டால், பிரதமர் மன்மோகன் சிங் தனது நிலையில் இருந்து சற்று இறங்கி வர வேண்டியதாக இருக்கும். இருப்பினும், இடதுசாரி கட்சிகளை சமாதானப்படுத்தி அதன்பிறகு ஒப்பந்தத்தை அமல்படுத்தலாம் என அவருக்கு சோனியா எடுத்து கூறுவார் என்றே கருதப்படுகிறது.
இடதுசாரி கட்சிகளுடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாட்டை களைய மேற்கொள்ள வேண்டிய தீர்வுக்காண வழியில் முதல் இடத்தை பெறுவது பார்லிமென்ட்டில் நடக்க உள்ள விவாதம்.
இந்த விவாதத்தின் போது அமெரிக்காவின் ஹைட் சட்டத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படுமா உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் ஒப்பந்தம் குறித்த கவலைக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும். இந்த விவாதத்தின்போது பா.ஜ., உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் எம்.பி.,க்கள் காரசாரமாக பேசுவர். அவர்களுக்கு இணையாக காங்கிரஸ் எம்.பி.,க்கள் பேச வேண்டும் என்றால், அவர்கள் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து நன்கு அறிந்து இருக்க வேண்டும். எனவே, அவர்களுக்கு இந்த ஒப்பந்தம் குறித்து விளக்கி கூறும்பணியை அணுசக்தி நிபுணர்களிடம் பிரதமர் மன்மோகன் சிங் ஒப்படைத்துள்ளார்.
இதன் அடுத்த கட்டமாக இடதுசாரி கட்சி தலைவர்களுடன் சோனியாவே நேரிடையாக பேச்சு நடத்த உள்ளார். அடுத்த சில நாட்களில் இந்த பேச்சு வார்த்தை நடக்க உள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தேர்தல் வருவதை யாரும் விரும்பவில்லை. எனவே காங்கிரசுக்கு சாதகமான தேர்தல் சூழ்நிலை வரும் வரை ஆட்சியை தொடர வேண்டும் என்பதே சோனியாவின் எண்ணம். அதற்காக இடதுசாரி கட்சிகளை சமாதானப்படுத்தும் பணியில் அவர் தீவிரமாக இறங்கி விட்டார் என்றே காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர்.
Monday, August 27, 2007
சோனியாவின் மூன்று அம்சத் திட்டம்
Posted by வாசகன் at 6:21 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
1 comment:
இந்த 3 திட்டத்தில் என்ன இருக்கின்றது? . மீண்டும் இழுபறி நிலைதான்.
இடதுசாரிகளூக்கும் காங்கிறஸ்காரர்களை விட்டால் ஒதுங்க வேறு இடம் கிடையாது. மன்மோகன் சுயமாக முடிவெடுக்க முடியவில்லை. ஸோனியாஜி அரசியல் படிக்க 100 கோடி மக்களூடன் ஒரு பெரிய நாடு கிடைத்திருப்பதுதான் துர்ரதிஸ்டம்.
புள்ளிராஜா
Post a Comment