.

Friday, August 3, 2007

'என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும்': டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியை பொறுத்தவரை நாட்டின் இன்றைய அவசர, அவசியமான தேவை ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான். இதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி, விருதுநகர் மாவட்டத்திலும் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளது. மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து சாலை மறியல் நடத்தி ஆசிரியர்களை நியமிக்க கோரும் நிலைமை இருக்கக்கூடாது.

ஆரம்பக்கல்வி சீரான தரமான கட்டாய கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மொத்த கல்விக்கும் ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதம் ஆரம்பக்கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆரம்பக்கல்விக்கு தனிக்கவனம் செலுத்தவும், தரத்தை உயர்த்தவும் அர்ப்பணித்துக் கொள்ளும் தனி அமைச்சர், அமைச்சகம் நியமிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ் வழி கல்வியில்

பிளஸ்-2 வரை தமிழ் வழிகல்வியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் தமிழ்வழியில் கொண்டு வரவேண்டும்.

50 சதவீத இடங்களை (மருத்துவம், பொறியியல்) பிளஸ்-2 வரை தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். விடுதி முதல் இலவச கல்வியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை பற்றி நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். எங்களது எம்.எல்.ஏ.க்களை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை கடிதமாக எழுதியுள்ளேன். இதுபற்றி அதிகாரிகளோடு, முதல்-அமைச்சர் கருணாநிதி அதிக நேரம் பேசியதாக அரசு தரப்பு செய்தியில் வெளியாகி உள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் இது போன்ற கருத்துக்களை கடிதம் மூலமாகவும், செய்தியாளர்களை சந்தித்தும் தெரிவித்து வருகிறேன்.

1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சரளமாக பேசும் படியான ஆங்கில மொழியை கற்றுத்தர வேண்டும். இது மாணவ, மாணவிகளுக்கு போதுமானது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வீரமணி கருத்து

பின்னர் நிருபர்கள் டாக்டர் ராமதாசிடம், 'தி.மு.க. கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் தோழமை கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என திராவிடர் கழகம் வீரமணி கூறியிருக்கிறாரே?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு டாக்டர் ராமதாஸ் பதிலளிக்கையில், 'வீரமணி அறிக்கையை நானும் படித்தேன். முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது அடக்குமுறை அவர்கள் மீது ஏவி விடப்பட்டது. அனைத்து கட்சிகளும் கண்டித்தன. ஆனால் நண்பர் வீரமணி மட்டும் அரசு ஊழியர் போராட்டத்தை அடக்கி ஆண்ட பெருமை படைத்தார் என்றும்,அவரை போன்று நிர்வாக திறன் படைத்தவரும் வேறு எவரும் இல்லை என்றும் அப்போதைய முதல்வரை பாராட்டினார். இன்று மாறி இருக்கிறார்' என்றார்.

முழுவதும் படிக்க: தினத்தந்தி

1 comment:

Anonymous said...

After college will they be working in Doctor's Garden?

-o❢o-

b r e a k i n g   n e w s...