.

Sunday, September 2, 2007

எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...