இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்தில் இருக்கும் சிலாவத்துறை எனும் பகுதியை விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கைப் படையினர் கைப்பற்றி விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

அண்மையில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பகுதிகளில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த பகுதிகளை இலங்கைப் படையினர் கைப்பற்றியிருந்தனர்.
அதன் பின்னர் கடந்த சில நாட்களாக இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது இலங்கைப் படையினர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
"புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டது போல் சிலாவத்துறையையும் மீட்டுள்ளோம்" என்றார் ஜனாதிபதி ராஜபக்ச.
இப் பகுதிகளில் இருந்த விடுதலைப் புலிகளின் சில கடற்படைத் தளங்களையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கைப் படையினர் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகள் பாரிய எதிர்ப்பு எதனையும் காட்டாது பின்வாங்கி விட்டனர் எனவும் படையினர் தெரிவித்திருந்தனர்.
இது இவ்வாறிருக்க, மன்னாரில் உள்ள முஸ்லிம் கிராமத்தில் வசிக்கும் 50 க்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பத்தினரை மனிதக் கேடயங்களாகப்[human shields ] பயன்படுத்தி இலங்கை இராணுவம் இப் பகுதிகளில் நுழைந்திருக்கிறது என தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் சிலாபத்துறை இராணுவ நடவடிக்கையால் பல தமிழ்மக்கள் தமது வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற்றப்படுகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பிச் சென்ற மக்கள் மீது இலங்கைப் படையினரின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியினர் கிளைமோர் தாக்குதல் நடாத்தியதில் 9 தமிழ் பொதுமக்கள், குழந்தைகள் உட்பட , கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத தாக்குதல்கள் பற்றி விடுதலைப் புலிகள் இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை.
ஆதாரம் : BBC, Tamilnet, Reuters
No comments:
Post a Comment