.

Monday, September 3, 2007

அ தி மு க - பா ஜ க மீண்டும் கை கோர்க்கும்?

அ.தி.மு.க.- பா.ஜனதா மீண்டும் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. சமீபத்தில் 3-வது அணி அமைத்து தீவிரமாக மத்திய அரசியலில் ஈடுபட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால் இந்த அணி எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எனவே அ.தி.மு.க. 3-வது அணியை விட்டு விலகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 முறை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் கணிசமான பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட் டணி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பா.ஜனதா அணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட செகாவத் பாலமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. 3-வது அணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் செகாவத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டார்கள். இது பா.ஜனதாவுடன் ஏற்பட இருக்கும் கூட்டணியின் தொடக்கம் தான் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.

3-வது அணியில் அ.தி.மு.க. தவிர முலாயம்சிங் யாதவ் கட்சி, சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் உள்பட 7 மாநில கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 70 இடங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வுக்கு தற்போது தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அ.தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயார் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் இருந்தால் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியாது. எனவே, இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகி பாரதீய ஜனதா அணியில் சேரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளிலும் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மாலைமலர் தெரிவிக்கிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...