.

Wednesday, April 4, 2007

ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ரத்து: முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்பு ஏதும் இல்லை: ரயில்வே புது உத்தரவு

சென்னை, ஏப். 4: நாடு முழுவதும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் விழாக்காலங்கள் மற்றும் சாதாரணக் காலங்களில் பயணக் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படும் என்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

சாதாரணமாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி முதல் வகுப்புகளில் விழாக் காலங்களில் 3 சதவீதமும், சாதாரண காலங்களில் 6 சதவீதமும் குறைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது. 102 இருக்கைகள் வசதி கொண்ட ஏசி சேர் காரில் விழாக் காலத்தில் 4 சதவீதமும், சாதாரண காலத்தில் 8 சதவீதமும் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதேபோல ஏசி 2 அடுக்கு, ஏசி 3 அடுக்கு பெட்டிகளுக்கும் பயணக் கட்டணத்தில் தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது நாடு முழுவதும் இயக்கப்படும் 90 சதவீதம் முக்கிய ரயில்களில் இக் கட்டணக் குறைப்பு அல்லது சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

எனினும் சில குறிப்பிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டும் இச் சலுகை வழங்கப்படும் என்று ரயில்வே உத்தரவிட்டுள்ளது. வைகை, பல்லவன், பிருந்தாவன், லால்பாக், சென்னை-பெங்களூர் இடையே மாலையில் இயக்கப்படும் சதாப்தி, சப்தகிரி உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்தச் சலுகை வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.

எனினும், பாண்டியன், மலைக்கோட்டை, நெல்லை, கன்னியாகுமரி, தமிழ்நாடு, திருக்குறள், இன்டர்சிட்டி, நீலகிரி, கோவை உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் கட்டணக் குறைப்புச் சலுகை ஏதும் வழங்கப்படாது என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...