.

Wednesday, May 9, 2007

ஆள் கடத்தல்: லாலு கட்சி எம்.பி.க்கு ஆயுள் தண்டனை - அப்பீல் செய்வதற்கு 3 மாத அவகாசம்

லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் முகம்மது சகாபுதீன் மீது தொடரப்பட்ட ஆள் கடத்தல் வழக்கில், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சைவான் கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிபதி ஞானேஸ்வர் பிரசாத் ஸ்ரீவாஸ்தவா செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட் கட்சியின் தொண்டர் சோட்டே லால் என்பவரை 1999 பிப்ரவரி 7-ம் தேதி கடத்திச் சென்றது தொடர்பானது இந்த வழக்கு. (சோட்டே லால் இப்போது உயிருடன் இல்லை).

30-க்கும் மேல் வழக்குகள்: சைவான் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சகாபுதீன் மீது 30-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 29 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 8 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

கொலை, கொலை முயற்சி, கொலை செய்வதற்காக ஆளைக் கடத்துதல், ரகசிய இடத்துக்குக் கொண்டு சென்று மிரட்டுவதற்காகக் கடத்துவது, சட்டத்துக்கு விரோதமாக மறைவிடத்தில் ஒருவரை அடைத்து வைப்பது, திருட்டு, கலவரம் செய்தல், ஆயுதங்களுடன் சென்று கலவரம் செய்தல், உரிய அனுமதியின்றி துப்பாக்கிகளை வைத்திருத்தல், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துதல், ஆயுதங்களால் மற்றவர்களுக்குக் காயங்களை ஏற்படுத்துதல் என்று பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

லாலு பிரசாதின் வலது கரம் போன்றவர் என்பதாலும் சிறுபான்மைச் சமூக மக்களிடையே செல்வாக்கு படைத்தவர் என்பதாலும் பத்திரிகைகளும், பிற எதிர்க்கட்சிகளும் சகாபுதீனையே குறிவைத்து செய்திகள் தருகின்றன.

சோட்டே லாலை மட்டும் அல்ல வேறு 18 மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் தொண்டர்களையும் சகாபுதீன் கடத்திக் கொன்றிருக்கிறார். அவருடைய எம்.பி. பதவியை உடனடியாகப் பறிக்கத் தவறினால் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று நந்தகிஷோர் பிரசாத் எச்சரித்தார்.

அப்பீல் செய்வார்: இந்தத் தீர்ப்பை எதிர்த்து சகாபுதீன் அப்பீல் செய்வார் என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாதும், சகாபுதீனின் உதவியாளர் அஜய் குமாரும் தனித்தனியே கூறியிருக்கின்றனர். தீர்ப்பு நகல் கிடைத்ததும் அப்பீல் செய்வார்கள் என்று தெரிகிறது.

தினமணி - முழு விவரங்கள்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...