.

Wednesday, May 9, 2007

மேலும் 3 ஐ.டி. பூங்காக்கள்: முதல்வர் அறிவிப்பு

தகவல் தொழில்நுட்பத் தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ரூ. 1,400 கோடியில் தமிழகத்தில் சென்னை தரமணி, ஸ்ரீபெரும்புதூர், அம்பத்தூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படுகின்றன. இதுபற்றிய தகவல்களைப் பேரவையில் செவ்வாய்க்கிழமை தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்தபோது முதல்வர் கருணாநிதி அறிவித்தார். விவரம்:

மூன்றாவது டைடல் பூங்கா: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்காகச் சென்னை தரமணியில் மூன்றாவது டைடல் பூங்கா ரூ. 800 கோடியில் அமைக்கப்படும். ஏற்கெனவே அறிவித்தபடி, தரமணியில் 2-வது டைடல் பூங்கா அமைக்கும் பணி நடந்துவருகிறது. தற்போது சர்வதேச கருத்தரங்கு மையம், தங்கும் அறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்சார் சேவைகளுக்கான 3-வது டைடல் பூங்கா அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.

தரமணியில் 25 ஏக்கரில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளுக்கான ஏற்றுமதி மையமாக இது செயல்படும். 21 லட்சம் சதுர அடி பரப்பில், தனியாருடன் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதனால் 12 ஆயிரம் மென்பொருள் வல்லுநர்களுக்கு வேலை கிடைக்கும்.

சென்னை கோட்டூரில் தமிழ் இணைய பல்கலைக்கழகத்துக்கு 2 ஏக்கரில் சொந்தக் கட்டடம் கட்டப்படும்.

தரமணி டைசல் உயிரியல் பூங்கா, ரூ. 250 கோடியில் விரிவுபடுத்தப்படும். இதனால் கூடுதலாக 2 ஆயிரம் உயிரியல் தொழில்நுட்ப -மருந்துத் துறை விஞ்ஞானிகளுக்கு வேலை கிடைக்கும்.

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், பெரும்பாக்கத்தில் 213 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பவியல் நகர் அமையும்.

கோவை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 33 ஏக்கரிலும் சேலம் மாவட்டம் ஜாகிர் அம்மாபாளையத்தில் 100 ஏக்கரிலும் திருச்சி மாவட்டம், நவல்பட்டு கிராமத்தில் 50 ஏக்கரிலும் மதுரையில் வடபழஞ்சி, கிண்ணிமங்கலத்தில் 50 ஏக்கரிலும் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகங்கள் அமையும்.

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் 100 ஏக்கரில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படும். மேலும் 400 ஏக்கரில் ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்ப வளாகம் நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம்: தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடத்திட்ட மேம்பாடு, பயிற்றுநர் உருவாக்கம், கல்விசார் சாதனங்கள் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்காக மாணவர் பொதுத் திறன் பயிற்சியளிக்கும் பொருட்டும் தகவல் தொழில்நுட்பவியல் கல்விக்கழகம் நிறுவப்படும்.

ஸ்ரீபெரும்புதூரில் ரூ. 500 கோடி பூங்கா: சென்னை அருகே ஸ்ரீ பெரும்புதூரில் ரூ. 500 கோடியில் உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா (பயோ ஐ.டி. பார்க்) அமைக்கப்படும். இந்திய மென்பொருள் தொழில் பூங்கா, சிங்கப்பூரில் உள்ள அசெண்டாஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் இந்தப் பூங்காவை 100 ஏக்கரில் அமைக்கும்.

இத்திட்டத்துக்கான முதலீட்டில் 11 சதவீதம் பங்கேற்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்குத் தமிழ்நாடு அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக அமைகிறது என்ற சிறப்பை இந்த உயிரியல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பெறும். இதனால் 8000 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரூ. 80 கோடியில் அம்பத்தூர் பூங்கா: சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்துக்குச் சொந்தமான காலியிடத்தில் 4 லட்சம் சதுர அடி பரப்பில் ரூ. 80 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும். காகித நிறுவனத்தால் அமைக்கப்படும் இந்த பூங்காவின் மூலம் 4 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும்'' என்றார் கருணாநிதி.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...