பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. 
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு முதலில் 100 ரூபாயும் 2வது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் ஒரு இடத்தில் போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தினாலும் சிறிது தூரத்தில் மீண்டும் போலீசாரிடம் மாட்டும்போதும் அபராதம் விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற கம்பெனிகள் தயாரிக்கும் ஹெல்மெட் மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையட்டி, சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் குறித்து டி.ஜி.பி.முகர்ஜி நேற்று கூறியதாவது:
சென்னை உட்பட 6 மாநகராட்சி பகுதிகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஜூன் 1 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் இருப்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் சென்று முதல்முறை பிடிபடும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அரசின் உத்தரவுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் முழு ஆதரவு தரவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க வேண்டும்.
அரசு உத்தரவை முறைப்படி அமல்படுத்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முகர்ஜி கூறினார்.
No comments:
Post a Comment