.

Tuesday, July 17, 2007

அனைத்து சாதியினரும் அச்சகர் ஆகும் பள்ளி - முடக்க குருக்கள் சதி

திருவண்ணாமலை, ஜூலை 17-

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் வகையில், தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. திருவண்ணாமலை, மதுரை, பழனி, திருச்செந்தூர் ஆகிய இடங்களில் சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும், மயிலாப்பூர், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் வைணவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியும் தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கடந்த மே 11ம் தேதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி தொடங்கப்பட்டது. 40 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். மூன்று ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது தமிழ் ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். வேத பாட ஆசிரியரை நியமிக்க பலமுறை முயன்றும் யாரும் பணியில் சேர முன்வரவில்லை. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு வேதபாட ஆசிரியர் மிகவும் அவசியம். ராசிபுரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(82) என்பவர் கடந்த மாதம் வேதபாட ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மாதம் 14ம் தேதி மர்ம கும்பலால் ஆசிரியர் ராமகிருஷ்ணன் தாக்கப்பட்டார். தொடர்ந்து இங்கு பணி செய்தால் கொலை செய்துவிடுவதாக மர்ம கும்பல் மிரட்டியது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பணியை ராஜினாமா செய்வதாக ராமகிருஷ்ணன் குறிப்பிட்டிருந்தார். அதனால், கோயில் நிர்வாகமும், போலீசாரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் சிறப்பு திட்டத்தை முடக்க நடக்கும் சதியில் ஈடுபடுகிறவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், வேதபாட ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கொடுத்த தகவலின்படி, அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் குருக்கள் ஒருவரின் தூண்டுதலால், இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கிறது என போலீசுக்கு தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயில் குருக்களான பி.டி.ரமேஷ், அவரது நண்பர் காந்தி ஆகியோரிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.

விசாரணை நடந்த தாலுகா போலீஸ் ஸ்டேசன் முன்பு, அண்ணாமலையார் கோயில் குருக்கள் மற்றும் அர்ச்சகர்கள் அனைவரும் குவிந்தனர். இந்நிலையில், நேற்று மாலை 5 மணிக்கு பி.டி.ரமேஷ் குருக்களை போலீசார் விடுவித்தனர்.

பாதிக்கப்பட்ட வேதபாட ஆசிரியர் ராமகிருஷ்ணனிடம் நேற்றிரவு விசாரணை நடத்தப்பட்டது. தன்னை தாக்கியவர்களை அவர் அடையாளம் காட்டினார். அதை தொடர்ந்து இன்று அதிகாலை தி.மலையை சேர்ந்த காந்தி(30), கம்பிராஜா(26), விஜி(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் ஜே.எம். 1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணில் இருநததாக கூறப்படும் அண்ணாமலையார் கோயில் குருக்கள் பி.டி. ரமேஷ் தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக தெரிவித்ததால் தி.மலையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர்.

- நன்றி: மாலை முரசு

4 comments:

சிவபாலன் said...

இது போன்ற தீய சக்திகளை எந்த பாரபட்சமின்றி ஒடுக்க வேண்டும். சமூகநீதியின் நிலைநாட்ட நடக்கும் முயற்சியின் மீது நடத்தப்பட்ட இந்த கேடுகெட்ட செயலை வன்மையா தண்டிக்க வேண்டும்.

கோவி.கண்ணன் said...

//தமிழக அரசின் சிறப்பு திட்டத்தை முடக்க நடக்கும் சதியில் ஈடுபடுகிறவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.//

கைது செய்து குற்றம் நிருபனம் ஆனால் முட்டிக்கு முட்டி தட்டனும்.

Anonymous said...

வர்ணாச்ரம வேதத்தை அனைத்து சாதியினரும் படிப்பதுதான்
பெரியார் கண்ட கனவா?

G.Ragavan said...

// Anonymous said...
வர்ணாச்ரம வேதத்தை அனைத்து சாதியினரும் படிப்பதுதான்
பெரியார் கண்ட கனவா? //

உண்மைதான். வேதம் படித்தால்தான் அர்ச்சகன் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆனால் இன்றைய சூழலில் முதலில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டியது அவசியம். ஆகையால் படிப்பதில் தவறில்லை. First make the thing common to everybody. Then caliber as per need. Thatz the needed approach. ஆகையால அது சரிதான்.

-o❢o-

b r e a k i n g   n e w s...