.

Tuesday, May 8, 2007

ச: வங்கதேசம் - நாடு திரும்பினார் ஷேக் ஹசீனா

தாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நேற்று நாடு திரும்பினார். அவரது வருகையை ஒட்டி, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது, வங்கதேச இடைக்கால அரசு கொலை வழக்குப் பதிவு செய்தது. 15 நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த ஹசீனா, அங்கிருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் வங்கதேசம் திரும்ப திட்டமிட்டிருந்தார். ஆனால், திடீரென அவர் வங்கதேசம் திரும்புவதற்கான பயணச் சீட்டை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தர மறுத்துவிட்டது. ஹசீனா வங்கதேசம் திரும்பினால், வன்முறைகள் ஏற்படும் என கருதி, இடைக்கால அரசு வற்புறுத்தியதின் பேரிலேயே அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதற்கிடையே உலக நாடுகளின் நெருக்கடி காரணமாக ஹசீனா வங்கதேசம் திரும்புவதற்கு இடைக்கால அரசு அனுமதி அளித்தது. நேற்று அவர் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து எதிகாட் ஏர்வேஸ் விமானம் மூலம் தாகா வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வரவேற்றனர். ஹசீனா நாடு திரும்புவதையொட்டி, நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாகா விமான நிலையத்திலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முன்னதாக லண்டன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஹசீனா, ""நாட்டில் ஜனநாயகம் மீண்டும் மலர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். எனது செயல்பாடுகளை முடக்கும் வகையில் பொதுக் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசு என்னை கைது செய்யலாம். நாடு திரும்புவதற்கு எனக்கு ஆதரவு அளித்த உலகத் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.

=தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...