.

Wednesday, June 27, 2007

சென்னை விமான நிலையம்: நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள்.

சென்னை விமான நிலையத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் புதிய முறையில் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஒப்புதலுக்காக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு முறைப்படி சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதி, விமான நிலைய சுற்றுப்புற வேலி, பயணிகள் வந்து போகும் பகுதி, விமான நிலைய ஊழியர்கள் இருக்கும் பகுதி, விமான பொருட்கள் வைக்கப்படும் பகுதி, வந்து போகும் வாகனங்களை கண் காணிக்கும் பகுதி என 6 விதமாக பிரிக்கப்படும்.


இந்த பகுதிகள் நவீன தொழில் நுட்பத்துடன் கணிப்பொறி மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக விமான நிலையத்தின் முக்கிய 60 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதன் மூலம் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடமாடும் மனிதர்கள், மிருகங்கள், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும். தேவையானவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

விமான நிலைய ஊழியர்களுக்கு வானொலி அலை தொழில்நுட்பம் கொண்ட அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான ஊழியர்கள் தவிர யாரும் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடியாது.

இது போல பயணிகள், வாகனங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்துவதற்கான நவீன கருவிகளும் பொருத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான அனைத்து நவீன தொழில்நுட்ப கருவிகளையும் அமைக்க ரூ. 100 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இந்த நவீன முறை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்போது ஒரே இடத்தில் இருந்து விமான நிலையம் முழுவதுக்கும் நவீன முறையில் துல்லியமான பாதுகாப்பு அளிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...