.

Sunday, July 8, 2007

20-20 உலகக் கோப்பை: சச்சின், திராவிட், கங்குலி இல்லை

தென் ஆஃப்ரிக்காவில் நடைபெற உள்ள 20-20 சுற்று உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இந்திய அணியின் முன்னணி ஆட்டக்காரர்களான சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் விலகியுள்ளனர். இங்கிலாந்து தொடரில் புறக்கணிக்கப்பட்ட சேவக், ஹர்பஜன் சிங் மீண்டும் உத்தேச அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக காயம் மற்றும் மோசமான திறன்நிலை (ஃபார்ம்) காரணமாக அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்த இர்பான் பதான், சுரேஷ் ரெய்னா, முனாப் படேல், முகமது கைப், ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்கள் தவிர, மகேந்திர சிங் தோனி, யுவராஜ் சிங் உள்ளிட்டவர்கள் தங்களது இடத்தை உறுதி செய்துள்ளனர்.

உத்தேச அணியில் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த வீரர்கள் அதிகம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனிருதா ஸ்ரீகாந்த்(தமிழகம்), யூசுஃப் பதான் (பரோடா), நீரஜ் படேல்(குஜராத்), கரன் கோயல்(பஞ்சாப்), நிரஞ்சன் பெஹேரா (ஒரிசா), பிரவீன் குமார் (உத்தரபிரதேசம்), அபிஷேக் ஜுன்ஜுன்வாலா(பெங்கால்), சட்டீஸ்வர் புஜாரா(சவுராஷ்டிரா) ஆகிய இளம் வீரர்கள் தங்களது சிறப்பான செயல்பாடுகளின் காரணமாக அணியில் அறிமுக வீரர்களாக வாய்ப்பு பெற்றுள்ளனர். தொடருக்கான 15 பேர் கொண்ட இறுதி அணி வரும் ஆகஸ்ட் 6 ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளது.

அணியில் அறிமுக வீரர்களுக்கு அதிக வாய்ப்பு குறித்து தேர்வுக் குழு தலைவர் வெங்சர்க்கார் கூறுகையில்,"" இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில், சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் தாமாகவே விருப்பப்பட்டு விலகியுள்ளனர். தமது விருப்பத்தை இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட் என்னிடம் தெரிவித்தார். தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார்

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...