.

Sunday, July 8, 2007

ரிலையன்ஸ்ஸுக்கு எதிராக இராமதாஸ் அறிக்கை.

ரிலையன்ஸ் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை

தமிழகத்தில் வேளாண்மைக்கு அடுத்த பெரிய தொழிலாக சில்லரை வணிகம் உள்ளது. தங்களது சக்திக்கு எட்டிய வரையில், சிறு சிறு கடைகளை வைத்து வணிகம் செய்யும் சூழலுக்குத் தள்ளப்பட்டவர்கள்தான் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கடைகளில் அவற்றின் அளவைப் பொருத்து மேலும் பலரும் வேலை பார்த்து வருகின்றனர். இதுதவிர கடைகளுக்குச் சரக்குப் போடுவது, பணம் வசூலிப்பது உள்ளிட்ட வேலைகளிலும் ஏராளமானவர்கள் உள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 6 லட்சம் சில்லரை வணிகர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் பல லட்சம் பேர் இந்த சில்லரை வணிகத்துடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.

ரிலையன்ஸ் போன்ற இங்குள்ள நிறுவனங்களும், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு சில்லரை வணிகத்தில் ஈடுபட்டால், தற்ேபாது சில்லரை வணிகத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பறிபோய் நடுத்தெருவுக்கு வரும் நிலை உருவாகும்.

இதைத் தடுத்து நிறுத்தக் கோரி தொடர்ந்து பாமக போராடி வருகிறது. ஆனாலும் தமிழகத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடைகளுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் எழுந்துள்ளது.

கேரளாவில் புதிதாக ரிலையன்ஸ் கடைகளுக்கு அனுமதி அளிப்பதில்லை எனவும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கடைகளை மூடி விடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையை இங்கும் எடுக்க வேண்டும்.

அல்லது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளதுபோல, ரிலையன்ஸ் கடைகளில் உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்ற தடையையாவது விதிக்க வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம் மண்ணின் மைந்தர்களான சில்லரை வணிகர்களையும், அவர்களை நம்பி வேலை பெற்று வரும் பல லட்சம் பேரையும் காக்க அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...