.

Sunday, July 8, 2007

சினிமாக்காரர்கள் அறிவுஜீவிகள் அல்லர்: ராமதாஸ்

திருவண்ணாமலையில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சனிக்கிழமை நடத்திய "மாற்றுத்திரை குறும்பட, ஆவணப் படத் துவக்க விழாவில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசியதாவது:

இளைஞர்கள் புதிய வேகத்துடன் நல்ல குறும்படங்களை தயாரிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. குறும்பட, ஆவணப் படங்கள் தயாரிக்க அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அரசு நிதியுதவி அளிக்க வேண்டும் .

இன்றைய தமிழ் சினிமாவைப் பற்றி நான் மட்டுமே விமர்சித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவும், சினிமாக்காரர்களும் நம் இளைஞர்களையும், தமிழக மக்களையும் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாக்காரர்கள் யதார்த்தத்தைதான் சொல்கிறோம் என்கிறார்கள். உண்மையில் குறும்பட, ஆவணப் படம் எடுக்கும் படைப்பாளிகள்தான் யதார்த்தத்தை சொல்கிறார்கள்.

குறும்படங்கள் தயாரிக்கிறவர்கள் மாவட்டங்கள் தோறும் குழுக்கள் ஏற்படுத்தி அனைவரும் பார்க்கின்ற வகையில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் குறும்படங்களைத் திரையிட வேண்டும். இந்த முயற்சியில் இறங்கினால் சினிமா மோகத்தில் சீரழியும் இளைஞர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள். பள்ளி, கல்லூரிகளிலும் குறும்படங்களைத் திரையிட வேண்டும்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட பேச்சுத் தமிழ், இயல்புத் தமிழில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல தமிழில் குறும்படங்களைத் தயாரித்து சமுதாய புரட்சியை ஏற்படுத்த வேண்டும்.

இதற்காக இளைஞர்கள் மன்றங்களை அமைக்க வேண்டும். குறும்படங்களை ரசிப்பவர்கள்தான் உண்மையான ரசிகர்கள். சினிமாவுக்கு மன்றங்கள் வைப்பவர்கள் முட்டாள்கள். குறும்பட, ஆவணப் படங்களுக்கு மன்றம் வைத்தால் நானே நேரில் வந்து திறந்து வைக்க தயாராக இருக்கிறேன் என்றார் ராமதாஸ்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...