.

Thursday, July 26, 2007

இந்தியா: மீண்டும் உயருமா பெட்ரோல் டீசல் விலைகள்?

இந்தியாவின் நடுவண் அரசு கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பெட்ரோலுக்கு 2 ரூபாயும், டீசலுக்கு ஒரு ரூபாயும் விலை குறைப்பு செய்தது. அதன் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பாரல் ஒன்றுக்கு 14 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

ஆனால் கடந்த 6 மாதங்களாக இவற்றின் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 193 கோடி ரூபாயும், ஆண்டுக்கு 53 ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகமாகவும் நஷ்டம் ஏற்படுகிறது. இப்படி நீண்ட நாட்களுக்கு இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்டுவது சிரமமாக இருக்கும் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்எண்ணை ஆகியவற்றின் விலையை உயர்த்தியே ஆகவேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது. எனவே விரைவில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.



இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி முரளி தியோரா நேற்று டெல்லியில் கூறும்போது, "நீண்ட காலமாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்படாமல் இருக்கிறது. குறைந்த விலையில் இவற்றை விற்பதன் காரணமாக ஒரு நாளைக்கு 193 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சுமையை நாம் எவ்வளவு நாள்தான் சுமந்து கொண்டிருப்பது?.. எனவே பெட்ரோல் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாததாகி விட்டது.

எண்ணை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பு தொடர்பாக மத்திய நிதி மந்திரியுடன் பேச்சு வார்த்தையும் நடத்தினேன்'' என்று சொன்னார்.

வேறு ஏதேனும் இது தொடர்பாக யோசனைகள் தெரிவிக்கப்பட்டதா? என்று முரளி தியோராவிடம் கேட்டபோது, "இறக்குமதி வரியை குறைப்பது மற்றும் நிலையான விலையை நிர்ணயித்தல் போன்றவை பற்றி பேசப்பட்டது. எனினும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஆலோசனை தொடர்ந்து நடத்தப்படும். இது பற்றி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தகவல் கூறப்பட்டுள்ளது. மேலும் இடது சாரி தலைவர்களிடமும் தொடர்பு கொள்ளப் பட்டிருக்கிறது'' என்று கூறினார்.

நன்றி: தினத்தந்தி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...