.

Monday, July 9, 2007

இந்தியா-வங்கதேசம் இடையிலான ரயில் சோதனை ஓட்டம்

இந்தியா-வங்கதேசம் இடையிலான பயணிகள் ரயிலின் சோதனை ஒட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருநாடுகளுக்குமிடையே முறையான ரயில் போக்குவரத்து அடுத்த மாதம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

'இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவு எக்ஸ்பிரஸ்' என்னும் பொருள்படும் 'இண்டர் கண்ட்ரி மாய்ட்ரி (Moitree) எக்ஸ்பிரஸ்' ரயில், கோல்கத்தாவிலிருந்து வங்கதேசத்தின் மேற்கு தர்ஷனா மாகாணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு சென்றடைந்தது.

நீல நிறத்துடன், பளபளப்பான 6 புதிய பெட்டிகள், ஒரு ஆய்வு பெட்டியுடன் சென்ற இந்த ரயிலில் இந்திய கூடுதல் உள்துறை செயலாளர் அஹ்மத் மற்றும் 31 அதிகாரிகள் பயணம் செய்தனர். நட்புறவு ரயில் இரண்டு நிலையங்களில் ஓய்வுக்குப் பிறகு டாக்கா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்கு சென்று சேரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா-வங்கதேசம் இடையே ஆகஸ்டு மாத மத்தியிலிருந்து, தொடர்ந்து நேரடி பயணிகள் ரயில் இயக்குவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும், திங்கள்கிழமை டாக்காவில் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தையில் வங்கதேசத்தின் சார்பில் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டி.எம்.இஸ்மாயில் கலந்து கொண்டு, ரயில் போக்குவரத்தை முறைப்படுத்துவது மற்றும் தீவிரவாதிகள் ரயில் மூலம் ஊடுருவுவதைத் தடுப்பது குறித்து பேசுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

குடியேற்றத்துறை அலுவலகத்தை இந்திய எல்லையில் உள்ள ஜீடே மற்றும் வங்கதேச எல்லையில் தர்ஷனா பகுதியில் அமைக்கலாம் என்று புதுதில்லி வட்டாரங்கள் தெரிவித்ததாகவும், பயணிகளுக்கு வசதியாக இருப்பதற்காக ரயில்கள் புறப்படும் இடத்திலேயே இந்த அலுவலகங்களை அமைத்துக் கொள்ளலாம் என்று வங்கதேச தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரயிலின் பயணிகள் பெட்டிகள் இந்தோனேசியாவிலிருந்து வரவழைக்கப்பட்டு, ஷெட்பூர் ரயில்வே பணிமனையில் அவை இணைக்கப்பட்டது. இதில் ஏ.சி. வகுப்பு, ஏ.சி. படுக்கை வசதி, பொதுவகுப்பு, தூங்கும் வசதி கொண்ட பெட்டி, இரு புறத்திலும் மின்சாதன பெட்டி, சமையலறை மற்றும் பிரார்த்தனை செய்வதற்கான பெட்டிகள் உள்ளன.

இந்த பெட்டிகள் ரூ.1.80 கோடி முதல் 3 கோடி வரையிலான மதிப்புள்ளவை என்று ரயில்வே பொறியாளர்கள் தெரிவித்தனர். பயணக்கட்டணம் ரூ.320, ரூ.480 மற்றும் ரூ.800 என மூன்று விதங்களில் இருக்கும் என்றும், இந்த வருவாயில் சுமார் 78 சதவீதத்தை வங்கதேசமும் மீதமுள்ளதை இந்தியாவும் பங்கிட்டுக் கொள்ளும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

11 மணி நேர பயணம் இந்த ரயில் பாதையானது 120 கிலோமீட்டர் தூரத்தை இந்தியாவிலும், 418 கிலோமீட்டர் தூரத்தை வங்கதேசத்திலும் கொண்டுள்ளது. 10 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயிலில் 760 பயணிகள் செல்ல முடியும்.

இந்த ரயில் தினமும் டாக்காவிலிருந்து காலை 7.45 மணிக்கும், மறுமுனையில் இந்தியாவிலிருந்து 7 மணிக்கும் புறப்படும். இதன் மொத்த பயண நேரம் 11 மணி நேரமாகும். இதில் குடியேற்ற அதிகாரிகளின் சோதனை நேரமும் அடங்கும்.

கடந்த 2001-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா வங்கதேச பிரதமராக இருந்தபோது இருநாடுகளுக்கு இடையிலான ரயில் போக்குவரத்துத் திட்டம் கையெழுத்தானது. ஆனால் கலீதா ஜியா பிரதமராக இருந்தபோது இத்திட்டம் கைவிடப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி

BBC NEWS | South Asia | First India-Bangladesh train link

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...