.

Wednesday, July 11, 2007

சிறுநீரகம் பாதித்த சிறுமியை ஆற்றில் வீசிய தந்தை.

மிகவும் அதிர்ச்சி தரும் இச்சம்பவம் பற்றி தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஆறுவயது மகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் விரக்தி அடைந்த தந்தை, மகளை ஆற்று நீருக்குள் வீசி எறிந்து விட்டு தப்பி ஓடினார். வெள்ளத்தில் தத்தளித்த சிறுமியை மீனவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்ந்தனர்.

உ.பி., ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தேவ்காளி என்ற குக்கிராமத்தில் வசிப்பவர் பக்கேரு சோன்கர். இவருக்கு ஆறு குழந்தைகள். கிராமத்தில் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவரது கடைசி குழந்தையான ஆறு வயது சரிதாவிற்கு சிறுநீரக பாதிப்பு இருந்தது. சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் கடந்த வாரம் சரிதாவை சேர்த்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "சரிதாவை குணப்படுத்த ரூ.மூன்று லட்சம் செலவாகும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என சோன்கரிடம் கூறினார். ஏற்கனவே கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி வந்த சோன்கர், இதனால் அதிர்ச்சி அடைந்தார். "யாரிடம் போய் பணம் கேட்பது, நமக்கு உதவ ஒருவரும் இல்லையே' என விரக்தி அடைந்த அவர், சரிதாவை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் ஜான்பூர் திரும்பினார். சரிதாவுடன் அங்கு ஓடும் கோமதி ஆற்றுக்கு சென்றார். ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் இருந்து, கரை புரண்டு ஓடும் ஆற்று நீருக்குள் சரிதாவை வீசி எறிந்து விட்டு திரும்பி பார்க்காமல் நடையை கட்டினார்.

அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், ஒரு சிறுமி நீருக்குள் தத்தளித்துக் கொண்டு இருப்பதையும், அந்த சிறுமி, "அப்பா காப்பாற்றுங்கள், அப்பா கப்பாற்றுங்கள்' என உதவிக் குரல் எழுப்புவதையும் கண்டனர். உடனடியாக சரிதாவை தண்ணீரில் இருந்து மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சரிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுபற்றி ஜான்பூர் மாவட்ட போலீஸ் அதிகாரி யோகேந்திர சுக்லா கூறுகையில்,""சரிதாவை ஆற்றுக்குள் வீசிய சோன்கரை தேடி வருகிறோம். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், தற்போது எங்கள் கவலை எல்லாம் சரிதாவைப் பற்றித் தான். அந்த குழந்தையை எப்படியாவது காப்பற்ற வேண்டும்,''என்றார்.நினைவு திரும்பிய சரிதா, ""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் போட்டார்? உங்களுக்கு தெரியுமா?'' என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, அங்கிருந்த டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மனதை உலுக்கி விட்டது.

7 comments:

நாமக்கல் சிபி said...

//""எங்க அப்பா ஏன் என்னையை ஆற்றுக்குள் துõக்கிப் போட்டார்? உங்களுக்கு தெரியுமா?'' //

:(

G.Ragavan said...

:((((((((((((((((((((((

கண்ணுல தண்ணி வருதுங்க. முருகா... இந்த உலகம் குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கானது. குழந்தைகளுக்கே ஆனது.

Thekkikattan|தெகா said...

....என கள்ளம் கபடம் அறியாத மழலை மொழியில் கேட்டது, அங்கிருந்த டாக்டர் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் மனதை உலுக்கி விட்டது...

இப்ப இதயும் சேர்த்து படிங்க...

சிறுமிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், "சரிதாவை குணப்படுத்த ரூ.மூன்று லட்சம் செலவாகும். உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள்' என சோன்கரிடம் கூறினார். ஏற்கனவே கஷ்டப்பட்டு ஜீவனம் நடத்தி வந்த சோன்கர், இதனால் அதிர்ச்சி அடைந்தார். "யாரிடம் போய் பணம் கேட்பது, நமக்கு உதவ ஒருவரும் இல்லையே' என விரக்தி...

சேதுக்கரசி said...

அட கடவுளே :(

வெற்றி said...

அடடா, அமெரிக்காவில்தான் பல இலட்சக்கணக்கான மக்கள் மருத்துவக் காப்புறுதி இன்றி அவஸ்தைப்படுகிறார்கள் என்றால் இந்தியாவிலுமா?

அறிய வேணும் எனும் நோக்கில்தான் கேட்கிறேன், இந்தியாவில் அரச மருத்துவ மனைகளில் இப்படியான சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்படுவதில்லையா?

வாசகன் said...

ஒரு வாசகனாகச் செயற்பட்டு இத்தகைய செய்திகளை எடுத்தெழுத நேருகையில் மனம் மிகவும் கனத்துப்போகிறது.

அரசு மருத்துவமனைகளின் வரையறுத்த வசதிகளில் இலவச சிகிச்சைக்கான வாய்ப்புகள் மிகவும் மெலிதே எனினும் முறையாக அரசு எந்திரத்தை முடுக்கத்தெரிந்தால் இத்தகைய அவலத்தைப் போக்கலாம்.

வறுமை வித்திட்டாலும் அறியாமை தான் இத்தகு அவலங்களை அதிகப்படுத்துகிறது

Thekkikattan|தெகா said...

உண்மையிலேயே அந்த அறியாத தகப்பனாருக்கு மூன்று லட்சமென்று அதுவும் "உடனடியாக" என்று சொல்ல தெரிந்த டாக்டர்களுக்கு அந்தப் பணத்தை ஈட்டுவதற்கும், எப்படி இந்தப் ப்ரச்சினையை அணுகுவது என்பதனைப் பற்றியும் சற்று ப்ரக்ஞையூட்டி இருக்கலாமல்லவா?

எங்கே போனது அந்த கரிசனமும், டீசன்யியும், சமயோசிதப் புத்தியும். இப்பொழுது மற்ற ஐந்து குழந்தைகளுக்கு தகப்பன் ஆன அந்த மனிதரை சிறையில் அடைத்து வைத்துவிட்டால் பிரச்சினைகள் தீர்ந்ததா?

எந்த ஊடகம் இதற்கு அடிப்படையில் என்ன காரணமென்று ஆராய்ந்து அடுத்த முறை மற்றுமொரு தகப்பனார் இந்த முடிவை எடுக்கக் கூடாது என்று எழுதி விளங்க வைக்க இருக்கிறது? :-(

-o❢o-

b r e a k i n g   n e w s...