.

Thursday, June 21, 2007

பாமக பொதுச்செயலாளராக தலித் பெண்.

பாமகவின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ஊட்டியில் உள்ள படுகர் அரங்கில் நடந்தது. இக்கூட்டத்தில் பாமக தலைவராக மீண்டும் ஜி.கே.மணி போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். பொதுச் செயலாளராக ஈரோடு மாவட்டம் வெள்ளக்கோவிலைச் சேர்ந்த தலித் பெண்மணி, பாலசுந்தரி தேர்வு செய்யப்பட்டார்.

பாமக நிர்வாகியாக ஒரு பெண் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாளராக மன்சூர் தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பின்னர் கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார். அவர் கூறுகையில், பாமக மக்கள் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக் கொண்டு போராட வேண்டும். கட்டப் பஞ்சாயத்து நமக்கு வேண்டாம்.

டெண்டர் எடுப்பவர்களுக்கு கட்சியில் இடம் இல்லை. அதேபோல மது காய்ச்சுபவர்கள், குடிப்பவர்களுக்கும் கட்சியில் இடம் இல்லை.

இங்கு வெளியிடப்பட்ட ஊட்டி பிரகடனத்தில், 2020ம் ஆண்டில் தமிழகத்தில் சமூகம், பொருளாதாரம், கல்வி, பண்பாடு, கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதை சொல்லியுள்ளோம்.

தமிழ் மக்கள் தமிழ் மொழிக்காகவும், தமிழக நலனுக்காகவும் பாடுபட வேண்டும். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. தைலாபுரத்தில் 5 நாட்களும், பிற ஊர்களில் 30 நாட்களும் பயிற்சி தரப்படும்.

தமிழகத்தில் தமிழர்களின் நிலங்கள் பிற மாநிலத்தவரால் அபகரிக்கப்படுகின்றன. இதைத் தடுக்க நம்மிடம் ஆட்சிப் ெபாறுப்பு இருக்க வேண்டும். 2011ம் ஆண்டு பாமக ஆட்சியைப் பிடிக்கும். இதுவரை இல்லாத சிறந்த ஆட்சியை பாமக வழங்கும்.

இப்படிச் சொல்வதை சிலர் கேலி செய்தாலும் நமக்குக் கவலை இல்லை. அப்படி கேலி செய்யும் தகுதியும் யாருக்கும் கிடையாது. எதிர்ப்பவர்கள் எப்போதும் எதிர்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

தமிழகம் எல்லா நிலையிலும் தற்போது பின்தங்கியுள்ளது. சினிமாவால் கலாச்சார சீரழிவு அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது என்றார்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் உள்ள மதுக் கடைகளைக் குறைக்க வேண்டும், பார்களை மூட வேண்டும், நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்,

சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களை நுழைய விடக் கூடாது, கூட்டுறவு சங்கத் தேர்தலில் அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும், இலங்கை இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீலுக்கு ஆதரவு அளிப்பது எனவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...