.

Thursday, June 21, 2007

கோவை பெங்களூர் இரயில் எர்ணாகுளம் வரை.

கோவையிலிருந்து பெங்களூர் வரை பகல் நேரத்தில் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வந்தது. கோவையும், பெங்களூரும் தொழில் ரீதியில் மிகவும் நெருங்கிய நகரங்களாக இருப்பதால் இரு நகரங்களிலிருந்தும் ஏராளமான பேர் இந்த ரயிலில் பயணித்து வந்தனர்.

கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் கூடுதலாக ஒரு பகல் நேர ரயில் விட வேண்டும் என்று கோவையில் கோரிக்கை எழுப்பப்பட்டு வந்தது. ஆனால் அதைச் செய்யாமல், கோவை-பெங்களூர் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை, கேரள மாநிலம் எர்ணாகுளம் வரை நீட்டித்து விட்டனர்.

பாலக்காடு கோட்டத்தின் கீழ் கோவை வருவதால், மலையாள அதிகாரிகள் இதைச் செய்துள்ளனர். இதனால் கோவை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எர்ணாகுளம் வரை இந்த ரயிலை நீட்டித்துள்ளதால் கோவை பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 800 இருக்கைகளுக்கு கோவையிலேயே முன்பதிவு செய்யும் வசதி இருந்தது. எட்டு பெட்டிகளைக் கொண்டதாக இந்த ரயில் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் எர்ணாகுளம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் கோவைக்கு தற்போது வெறும் 2 பெட்டி மட்டுமே கிடைத்துள்ளது. அதில் 200 பேர் மட்டுமே செல்ல முடியும். மற்ற பெட்டிகள் அனைத்தும் எர்ணாகுளத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் மட்டுமே கோவையில் ரிசர்வ் செய்ய முடியும்.

கிடைத்துள்ள 200 இருக்கை வசதி கொண்ட பெட்டிகளிலும் கூட எர்ணாகுளத்திலேயே புக்கிங் செய்யப்பட்டு விடுவதால் கோவை மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் அதிக கட்டணம் கொடுத்து படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் கோவை பகுதி பயணிகளுக்கு உண்டாகியுள்ளது.

ஏற்கனவே எர்ணாகுளத்திலிருந்து பெங்களூருக்கு இரண்டு ரயில்கள் வாரத்திற்கு 2 நாட்கள் இயக்கப்படுகின்றன. அந்த ரயில்களை தினசரி ரயில்களாக மாற்றாமல், கோவை ரயிலை கேரள அதிகாரிகள் பறித்துள்ளனர்.

கோவை ரயிலை கேரளா பறித்துள்ள இந்த செயல் கோவை மக்களுக்கு பெரும் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் கிளப்பியுள்ளது. ஆனால் கோவையைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் மகா அமைதியாக உள்ளனர்.

இதுவரை ஒரு வார்த்தை கூட அவர்கள் பேசவில்லை. இப்படியே இருந்தால் கோவையில் உள்ள அத்தனை ரயில்களும் கேரளாவுக்கே போனாலும் போய் விடும் என்று மக்கள் கொந்தளிப்புடன் கூறுகின்றனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...