.

Thursday, July 5, 2007

எனது அடுத்த நாவலும் சர்ச்சைக்குள்ளாகும்: தஸ்லிமா நஸ்ரின்

நாடுகடத்தப்பட்ட வங்கதேசப் பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் 'லஜ்ஜா' என்ற நாவல் 1994-ல் பெரும் சர்ச்சைக்குள்ளானது. அதை தொடர்ந்து அவர் தற்போது 'சரம்' என்ற நாவலை எழுதத் தொடங்கியுள்ளார்.

1994-ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின் வங்கதேச ஹிந்து மக்களுக்கு நடந்த வன்முறை குறித்து தனது 'லஜ்ஜா' என்ற புதினத்தில் வெளிப்படையாக எழுதியிருந்தார். இது குறித்து அப்போது பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவர் நாடுகடத்தப்பட்டார்.

சர்ச்சைக்குள்ளான லஜ்ஜாவுக்குப் பிறகு அதே சம்பவங்களை மையமாக கொண்டு மதவெறியாளர்களை குறித்தும் தற்போது 'சரம்' நாவலில் எழுதி வருவதாக தெரிவித்துள்ளார்.

கோல்கத்தாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் அவர் கூறியது:

நான் எழுதி வரும் "சரம்' நாவலுக்கும் நிச்சயமாக எதிர்ப்புகள் கிளம்பும். அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த ஆண்டு துர்கா பூஜை பண்டிகைக்குள் இந்த நாவலை முடித்து விடுவேன்.

என்னுடைய சுயசரிதையையும் எழுதி வருகிறேன். தற்போது அதன் ஏழாவது பாகத்தை எழுத தொடங்கியுள்ளேன். மேலும் பத்திரிகைகளுக்கு சிறுகதைகளும், கட்டூரைகளும் எழுதி வருவதால் ஓய்வுக்கு நேரமில்லை.

1994-ல் வங்கதேசத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட நான் ஸ்வீடன், ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வசித்தேன். 2005-லிருந்து கோல்கத்தாவில் இருந்து வருகிறேன்.

இந்தியாவில் வசிப்பதற்கான குடியுரிமையை ஒவ்வொரு 6 மாதத்துக்குப் பிறகும் புதுப்பித்து வருகிறேன். ஆகஸ்ட் 17-ம் தேதியில் முடிவடைவதால் இந்தியாவில் தொடர்ந்து குடியிருப்பதற்காக மீண்டும் விண்ணப்பித்திருக்கிறேன். இந்திய அரசாங்கம் அனுமதி அளித்தால் வேறு எந்த இடத்துக்கும் செல்ல மாட்டேன். வங்கதேச அரசாங்கம் என்னை அனுமதிக்காது. அதே சமயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் மீண்டும் என்னால் செல்ல முடியாது என 45 வயதாகும் வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா கூறினார்.

தினமணி

The Hindu :: Taslima penning sequel to Lajja

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...