மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டு ஏமாற்றி விட்டு தற்போது ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்தி துணை நடிகை ஜான்வி கபூர் என்பவர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அபிஷேக்பச்சனுடன் தஸ் என்ற படத்தில் இணைந்து சிறு வேடத்தில் நடித்தவர் துணை நடிகை ஜானகி கபூர். இன்று காலை அவர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்புறம் திடீரென தனது கையின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.
மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் அவர் பேசினார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளார்.
போலிஸில் ஜான்வி கபூர் அளித்த வாக்குமூலத்தில், நானும், அபிஷேக் பச்சனும் காதலித்தோம். என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக அபிஷேக் உறுதியளித்திருந்தார்.
கடந்த ஆண்டு சில நண்பர்கள் முன்னிலையில் எனக்கு அவர் சிந்தூர் (குங்குமம்) வைத்தார். இதனால் எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகத் தான் அர்த்தம்
இதையடுத்து பலமுறை என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.
ஆனால் இப்போது என்னை ஏமாற்றி விட்டு ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார் கபூர்.
ஜான்வி கபூர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது. இவரது நிஜப் பெயர் நைனா ரிஸ்வி.
வெறும் பரபரப்புக்காக அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த விஷயத்தில் பச்சன் குடும்பத்தினர் இதுவரை வாய் திறக்க மறுப்பது தான் மர்ம முடிச்சாக உள்ளது.
நன்றி : தட்ஸ் தமிழ்.காம்