.

Tuesday, August 7, 2007

புதிய பெரிய கோள் கண்டுபிடிப்பு

அண்டவெளியில் இதுவரை இல்லாத அளவில் பெரியதொரு கோளைக் கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

புவியிலிருந்து 1,400 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் ஹெர்குலஸ் எனப்படும் நட்சத்திரக் கூட்டத்தில் இந்தக் கோள் உள்ளது. நமது சூரிய மண்டலத்திலுள்ள வியாழனை விட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த கோள் எழுபது மடங்கு பெரியது என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விண் பௌதிகப் பத்திரிகை ஒன்றில் வெளியாகியுள்ளது.

டிரெஸ்-4 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள்தான் மனித வர்க்கத்தால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கோளாகும். மூன்று தொலை நோக்கிகளை கொண்டு இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் இரண்டு அமெரிக்காவிலும் ஒன்று கனேரித் தீவிலும் உள்ளன. இந்தக் கோள் அருகாமையிலுள்ள நட்சத்திரத்தை கடந்து செல்லும் போது, அந்த நட்சத்திரத்தின் ஒளியை எவ்வாறு மறைக்கிறது என்பதை அளந்து அதன் அடிப்படையில் இந்தப் புதிய கோளின் அளவை கணித்துள்ளார்கள்.

ஆனாலும் டிரெஸ்-4 எனப்படும் இந்தப் புதிய கோள் வியாழனிடமிருந்து பலவகையில் மாறுபடுகிறது. அது அளவில் பெரியதாக இருந்தாலும் எடை குறைந்தே காணப்படுகிறது. வியாழன் ஒரு குளிர்ந்த கோள். ஆனால் இந்தப் புதிய கோளின் வெப்பநிலை 1300 டிகிரி செல்சியஸ் அளவிலுள்ளது.

இந்தப் புதிய கோளானது அதனைச் சுற்றியுள்ள காற்று மண்டலத்தின் மீது குறைந்த அளவே ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்துவதால், அந்தக் காற்றுப் பகுதி அண்டவெளியில் ஒரு வால் நட்சத்திரம் போன்று வளைந்து வெளியேறக் கூடும் எனவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்

தமிழ் பிபிசி

BBC NEWS | Science/Nature | Team finds largest exoplanet yet
ScienceDaily: Largest Transiting Extrasolar Planet Found Around A Distant Star
ABC News: Scientists Discover Largest Known Planet Outside of Solar System

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்

இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, மேற்கிந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் இருக்கும் சடாரா மாவட்டத்தில், தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் புதுமண தம்பதிகளுக்கு, இரண்டாவது தேனிலவுக்கான நிதி உதவி செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் முப்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் இருபத்தையாயிரம் தம்பதிகள் புதிதாக திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்களில் சுமார் 85 சதவீத புதுமண தம்பதிகள் திருமணமான முதல் ஆண்டு முடிவதற்குள்ளாகவே தங்களின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த போக்கை மாற்றவே இந்த புதிய திட்டம் முயற்சி செய்வதாக தெரிவித்தார் மாவட்ட சுகாதார அதிகாரி வி.எச்.மொஹிதே.

தமிழ் பிபிசி

BBC NEWS | South Asia | Honeymoon offer to delay babies
Delay a baby and win a second honeymoon - India - The Times of India
Honeymoon at state's expense - Pune

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு தொற்று நோய்களால் அபாயம்

தெற்காசியாவில் சமீபத்தில் பெய்த அடைமழை மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அவசரகால உதவிகள் கிடைக்காவிட்டால், பல லட்சக்கணக்கான மக்கள் மலேரியா, டெங்குக் காய்ச்சல் போன்ற பல விதமான நோய்களால் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கியுள்ள பல கிராமங்கள், மிகப் பெரிய சுகாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக இந்தியாவில் இருக்கும் ஐ நா சபையின் குழந்தைகள் நிதியத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்திய மாநிலமான பீஹாரில் மட்டும், நிவாரணப் பணிகளைச் செய்வதற்கு மேலும் பல ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதாகவும், வயிற்றுப்போக்கை தடுக்கக்கூடிய வாய்வழி திரவ மருந்துப் பாக்கெட்டுகள் குறைந்தது பத்து லட்சம் தேவை என்றும் ஐ நா சபை தெரிவித்துள்ளது.

வங்கதேசம் மற்றும் நேபாளத்தில் வெள்ளத்தின் உயரம் குறையத் துவங்கியிருந்தாலும், பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து மேடான பகுதிகளில் சிக்கித் தவித்து வருகிறார்கள்.

தமிழ் பிபிசி

U.N. sees health crisis risk from South Asia floods | Top News | Reuters
Monsoon health crisis 'days away' - Weather - MSNBC.com
South Asian Flood Death Toll Hits 311
India, Nepal bicker over cause of flood

மதுரை வன்முறை: டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

தினகரன் நாளிதழ் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. உள்பட 17 பேர் மீது சிபிஐ சார்பில், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் திங்கள்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மே 9-ம் தேதி மதுரையில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தில் 3 ஊழியர்கள் இறந்தனர். இதுதொடர்பாக ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ் வழக்கு தொடர்பாக 'அட்டாக்' பாண்டி உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வழக்கில், 20-வது குற்றவாளியாக தலைமறைவாக உள்ள திருமுருகன் என்ற காட்டுவாசி முருகனும், 21-வது குற்றவாளியாக ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராமும் சேர்க்கப்பட்டனர். இவ் வழக்கில் சம்பந்தப்பட்ட ஊருஇருளாண்டி, டைகர் பாண்டி, மாரி, இருளாண்டி ஆகிய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த 4 பேரைத் தவிர அட்டாக் பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும், மே 9-ம் தேதி சம்பவத்தின்போது பணியில் மெத்தனப் போக்குக் காட்டியது, கலவரத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட காரணத்தால் ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீதும் சிபிஐ அதிகாரிகள், மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த குற்றப்பத்திரிகை 86 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 32 பக்கங்கள் உள்ளடங்கியதாகும்.

முந்தைய சற்றுமுன்: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் - விவாதம்

தினமணி

IBNLive.com > Top cop, 15 others charged for Dinakaran attack
DNA - India - 16 chargesheeted in Dinakaran attack case - Daily News & Analysis

உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் 4 இந்திய கல்வி நிறுவனங்கள்

உலகின் தலைசிறந்த 200 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐஐடி (இந்திய உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள்), ஐஐஎம் (இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள்), ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் தில்லி பல்கலைக்கழகம் ஆகிய 4 கல்வி நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

ஹார்வார்டு, கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்கள் முதல் 3 இடத்தைப் பிடித்துள்ளன.

ஐஐடி 57-வது இடத்தையும், ஐஐஎம் 68-வது இடத்தையும், ஜவாகர்லால் நேரு பல்கலை. 183-வது இடத்தையும் பிடித்துள்ளன.

உலகம் முழுவதும் உள்ள 3703 கல்வி நிறுவனங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் தரப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. தலைசிறந்த தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 3-வது இடத்தையும், தலைசிறந்த 100 அறிவியல் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் 33-வது இடத்தையும் ஐஐடி பிடித்துள்ளது. கலைப் படிப்புகளைப் பொருத்தவரையில், தலைசிறந்த பல்கலை.கள் பட்டியலில் தில்லி பல்கலைக்கழகம் 75-வது இடத்தைப் பிடித்துள்ளது.

தினமணி

Deccan Herald - Four Indian institutions in world university rankings
IITs 57th in list of world's top varsities :: Economic Times

கங்கையில் படகு மூழ்கியது: 80 பேர் பலி

பிகாரில் கங்கை ஆற்றில் 130 பேருடன் சென்ற படகு திங்கள்கிழமை மூழ்கியது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேர் பலியாகினர். இன்னும் 100 பேரைக் காணவில்லை. அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

சைதாபாதிலிருந்து பதர்காட் நோக்கி படகு சென்று கொண்டிருந்தது. அப்போது கிழக்கு நோக்கி கடுமையான காற்று வீசியது. இதில் நிலைகுலைந்த படகு, நடு ஆற்றில் அப்படியே மூழ்கியது என சமஸ்திபூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் தெரிவித்தார்.

தினமணி

The Hindu : Front Page : 80 feared drowned in boat tragedy

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள 'தமிழ் மையம்' என்ற அமைப்பு "சென்னை சங்கமம்' என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை 'தமிழ் மையம்' நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

தினமணி

The Hindu : Tamil Nadu / Chennai News : ‘Chennai Sangamam’ surplus funds to be utilised for NGO projects

இலக்கியத்தை மக்களிடம் கொண்டுசென்ற புத்தகங்கள் - அவ்வை நடராஜன்

ஈரோடு, ஆக. 7-
ஈரோடு வஉசிமைதானத்தில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் கடந்த 27ம் தேதி முதல் நேற்று வரையிலும் 11 நாட்களாக புத்தக திருவிழா நடந்தது. இதன் நிறைவு விழா நேற்று மாலை நடந்தது. இதில் தலைவர் ஸ்டாலின்குணசேகரன் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வைநடராஜன் பேசியதாவது:
மக்களின் சிந்தனையை வளர்க்க நூல் பயன்படுகிறது. இந்தியாவை காட்டிலும் சிறிய நாடாக இருக்கும் ஜெர்மனி நாட்டில் பெரும் தொழிற்புரட்சியும், அறிவுப்புரட்சியையும் புத்தகங்களே ஏற்படுத்தியது. முன்பெல்லாம் அரசவைகளில் மட்டுமே இலக்கியம் வளர்ந்தது. இதனால் அரசர்களும், அறிவார்ந்தவர்களும் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியம் இருந்தது. பாமர மக்களுக்கும், நூல்களுக்கும் தொடர்பு இல்லாமல் இருந்தது. ஆனால் புத்தகம் அச்சிட தொடங்கி அனைத்து தரப்பினரும் படிக்கத்துவங்கிய பிறகே மக்கள் மத்தியில் அறிவு சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டது. படைப்பவன், பதிப்பவன், படிப்பவன் என பலத்தரப்பினருக்கும் பயன்படும் அறிவுப்பெட்டகம் புத்தகம் மட்டுமே. நம்மை விட்டு மறைந்தவர்களை நாம் பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் விட்டு சென்ற எழுதி தந்த புத்தகங்கள் நம்மை தொடர்ந்து வழி நடத்தி செல்லும்.

‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி பார்த்தார்.


தங்கர்பச்சான் இயக்கியுள்ள ‘பள்ளிக்கூடம்’ படத்தை முதல்வர் கருணாநிதி தனது துணைவியார் ராஜாத்தி அம்மாள், மகள் கனிமொழி எம்.பி ஆகியோருடன் பார்த்தார். முதல்வரை தங்கர்பச்சான், அவரது மனைவி தமிழ்ச்செல்வி, தயாரிப்பாளர் விஸ்வாஸ் வி.சுந்தர் ஆகியோர் வரவேற்றனர்.

மருதமலை கோயிலில் ராஜகோபுர பணி - தலவிருட்சம் நடப்பட்டது



தொண்டாமுத்தூர், ஆக.7-

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலில் தலவிருட்சம் இல்லாதது கண்டறியப்பட்டது. இதையடுத்து தலவிருட்சம் நடப்பட்டது.

மருதமலை சுப்பிரமணியசாமி கோயில் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ராஜகோபுரம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியது. பல்வேறு காரணங்களால் இந்தப் பணி பாதியோடு நிற்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக பணி நடக்கவில்லை.

இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வேதனையடைந்தனர். ராஜகோபுரம் கட்டும் பணிக்குத் தேவையான அரசு மற்றும் தனியார் நிதி ஊக்குவிப்பு இல்லாதது முக்கிய காரணமாக உள்ளது.

ராஜகோபுரம் கட்டும் பணி தொடர்ந்து தடை பட்டு வருவதற்குக் கார ணம் என்னவென்று பக்தர்கள், அறங்காவலர் குழுவினர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது கோயிலுக்கென பிரத்யேக தல விருட்ச மரமான மருதமரம் இல்லாதது தெரியவந்தது. கோயில் வளாகத்தில் இந்த மரம் இல்லாதததே கோயில் ராஜகோபுரம் கட்டும் பணி தொய்வுக்குக் கார ணம் என்று கருதினர்.

அதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் அறங்காவலர் குழு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கூட்டம் நடந்தது. அதில் ஆடிக்கிருத்திகையன்று கோயில் வளாகத்தில் தல விருட்ச மரம் நட்டு, அக்குறையைப் போக்குவது, தனியார் நன்கொடை பெற்று கோயில் கோபுரம் கட்டும் பணியை ஆகஸ்ட் இறுதிக்குள் துவங்குவதென்று முடிவெடுக்கப்பட்டது.
ஆடிக்கிருத்திகை நாளான நேற்று கோயில் வளாகத்தில் தலவிருட்சமான மருத மரக்கன்றை நட்டனர். சென்னை வட பழனி கோயில் அறங்காவலரும், பாடகருமான சீர் காழி சிதம்பரம் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழுத் தலைவர் நல்லா பழனிச்சாமி, உறுப்பினர்கள் சுகன்யா ராஜரத்தினம், ரவிச்சந்திரன், கோயில் துணை ஆணையர் அன்பு மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சாலை விபத்தில் மூன்று 'கன்வாரியா'க்கள் மரணம்: கலவரம்

சிராவண மாதத்தில் ( நமது ஆவணி) வட இந்தியாவில் தோளின் மீது ஒரு கம்பில் இருமுனைகளிலும் 'கன்வார்' எனப்படும் நீர்கலசங்களைக் கட்டி கால்நடையாக சிவன் கோவில்களுக்குச் சென்று வழிபடுவது வழக்கம். பல சாலைகளிலும் நடந்தாலும் தில்லி- ஹரித்வார் சாலை இதற்கு பிரசித்தி பெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் சாலையையே அடைத்துப் போவது நமது தைப்பூசத்திற்கு மதுரையிலிருந்து பழனி செல்லும் பக்தர்கள் கூட்டம் போலிருக்கும். கன்வார் எடுத்துச் செல்லும் இவர்களை கன்வாரியாக்கள் என்றழைப்பர்.

செவ்வாயன்று குட்கான்வ் அருகே இக்கூட்டத்தினர் சென்று கொண்டிருந்தபோது வேகமாக வந்த டிரக் ஒன்று மோதி மூன்று கன்வாரிகள் இறந்தனர்;பலர் படுகாயமடைந்தனர். காலை 8 மணிக்கு நிகழ்ந்த இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த கன்வாரியாக்கள் சாலையை வழிமறித்து தில்லி- ஜெய்பூர் சாலையில் வண்டிகளை கொளுத்தி ஆர்பாட்டம் செய்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலை 8 இல் 10 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. துணை காவல் ஆணையரின் வண்டியையும் காவல்நிலைய வண்டியையும் தீயிட்டு கொளுத்தினர்.
இறந்தவர்களுக்கு நட்டைஇடு வழங்கும்வரை போராட்டத்தைத் தொடருவோம் எனவும் இனி இத்தைகைய விபத்துக்கள் நிகழாவண்ணம் அரசு உறுதி தர வேண்டும் எனவும் கன்வாரியா ஒருவர் கூறினார்.

Accident Kills Three 'kanwarias', Pilgrims Turn Violent

ஜோத்பூர்- ஹௌரா விரைவுவண்டி கான்பூரில் தடம் புரண்டது


செவ்வாய் மதியம் கான்பூர் சென் ட் ரல் இரயில்நிலையத்தில் ஜோத்பூர் - ஹௌரா விரைவு வண்டியின் இஞ்ஜினும் முதல் இரு பெட்டிகளும் தடம் புரண்டது. இதில் 12 பேர் காயமடைந்ததாக இரயில்வே செய்திகள் கூறுகின்றன. இரயில் போக்குவரத்து இந்த பகுதியில் தடைபட்டுள்ளது.
IBNLive.com > Jodhpur-Howrah Express derails near Kanpur : Train, derail, howrah-jodhpur express

தில்லியில் மற்றொமொரு சாலை வன்முறை

தலைநகர் தில்லியில் சாலைகளில் செல்லும் மோடார் பைக் ஓட்டிகள் அத்துமீறி வன்முறையில் இறங்குவது தொடர்கிறது. இவ்வாறான மூன்றாவது நிகழ்வில், நேற்று, பிற்பகல் மூன்றுமணிக்கு தெருவில் 28 வயதான அர்விந்த் தனது மகனுக்கு மருந்து வாங்கிக் கொண்டு செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நரேந்திர சிங் எழுப்பிய ஹாரன் ஒலியை கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த நரேந்திர சிங் அவரை ஒரு செங்கல்லால் தலையில் அடித்து உதைத்தார். மூன்று குழந்தைக்களுக்கு தந்தையான அர்விந்த் படுகாயமடைந்து குரு தேக் பகதூர் மருத்துவமனையில் அனுமதிக்க செல்லும் வழியிலேயே இறந்தார்.

ஜூலை 16 அன்று ஜிதேந்திர பவார் என்பவர் சாகேத் என்ர இடத்தில் நான்கு பைக்கர்களால் அடிபட்டு இறந்தார். அதற்கு இருநாட்கள் முன் தேசிய பாதுகாப்புப் படையை சேர்ந்த இருவர் 22 வயது இளைஞனை ஒரு தெருச் சண்டையில் கொன்றனர்.

தில்லியில் சாலை மரணங்களுக்கு விபத்துக்கள் மட்டுமே காரணமாயமைவதில்லை.

IBNLive.com > Road rage again! Biker beats man to death in Delhi : delhi, road rage

தாவூத் இப்ரஹாம் மீது கொலை முயற்சி:கராச்சியில் வதந்தி ?

இந்தியாவில் தீவிரவாதத்திற்காகவும் பிற குற்றங்களூக்காகவும் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ரஹாமை அவரது ஓட்டல் காவிஷ் க்ரௌன் பிளாசா அருகே கொலைசெய்ய முயன்றதில் அவர் தப்பியதாக கராச்சி நகரெங்கும் வதந்தி பரவியுள்ளது. சிந்து மாகாண தலைமைக் காவலர் இதனை மறுத்துள்ளபோதிலும் அரசின் 'தாவூத் பாகிஸ்தானில் இல்லை' என்ர கூற்றிற்க்கு ஒப்ப அவர் கூறியுள்ளதாக விதயமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

DNA - World - Karachi abuzz with rumours of attack on Dawood - Daily News & Analysis

அ.தி.மு.க.-தி.மு.க. கோரிக்கை நிராகரிப்பு - விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. தொகுதி புதிதாக உருவாகிறது

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.

மாலைமலர்

தொகுதி சீரமைப்பு பட்டியல் திருவள்ளூர்-காஞ்சீபுரம் புதிய எம்.பி.தொகுதி - 11 தொகுதிகள் பெயர் மாற்றம்

மக்கள் தொகை அடிப் படையில் நாடு முழுவதும் பாராளுமன்ற, சட்டசபை தொகுதிகளை மாற்றியமைக்கும் பணி கடந்த 1 வருடமாக நடந்தது. தேர்தல் கமிஷன் நியமித்துள்ள தொகுதி சீரமைப்பு ஆணையம் இதற்கான பணிகளை மேற்கொண்டது.

தமிழ்நாட்டை பொறுத்த வரையில் 2001-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை எண்ணிக்கை 6 கோடியே 24 லட்சத்து 5 ஆயி ரத்து 679 பேர் உள்ளனர். ஒரு தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691பேர் என்ற அடிப்படையில் தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகள் மற்றும் 39 பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்ற மும் இல்லை.

மாற்றாக உருவாகும் எம்.பி. தொகுதி களின் பெயர்களும், அதில் அடங்கி உள்ள எம்.எல்.ஏ. தொகுதிகளும் வருமாறு:

1. காஞ்சீபுரம் (தனி)
செங்கல்பட்டு, திருப் போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திர மேரூர், காஞ்சீபுரம்.

2. திருவண்ணாமலை
ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம் (தனி), திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (பழங்குடி தொகுதி).

3. திருவள்ளூர் (தனி)
கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவாலங்காடு (தனி), திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர்.

4. ஆரணி
போளூர், ஆரணி, செய் யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம்.

5. விழுப்புரம் (தனி)
திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.

6. கள்ளக்குறிச்சி (தனி)
சின்னசேலம், கள்ளக்குறிச்சி (தனி) கங்காவள்ளி (தனி), ஆத்தூர், வாழப்பாடி (தனி), திட்டக்குடி (தனி).

7. நாமக்கல்
வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (தனி- பழங்குடி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.

8. ஈரோடு
குமாரபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.

9. தேனி
சமயநல்லூர் (தனி), உசி லம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரிய குளம் (தனி), போடி நாயக்கனூர், கம்பம்.

10. தூத்துக்குடி
விளாத்திக்குளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

11. கன்னியாகுமரி
கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், திருவட் டாறு, விளவங்கோடு, கிள்ளியூர்.

நீக்கப்பட்ட பெயர்
11 தொகுதி புதிய பெயர்களு டன் உருவாக்கப்பட்டுள்ளதால் நீக்கப்பட்ட தொகுதி பெயர்கள் வருமாறு:

1. செங்கல்பட்டு
2. திருப்பத்தூர்
3. வந்தவாசி
4. திண்டிவனம்
5. ராசிபுரம்
6. திருச்செங்கோடு
7. பழனி
8. பெரியகுளம்
9. மயிலாடுதுறை
10. திருச்செந்தூர்
11. நாகர்கோவில்

மாலைமலர்

ஜெயேந்திரர் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

ஜெயேந்திரரின் தீவிர பக்தன் என்பதால் அவர் தொடர்பான வழக்கை விசாரிக்கப் போவதில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி பி.கே. பாலசுப்பிரமணியன் இன்று நீதிமன்றத்தில் அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிபதிகள் ஜி.பி. மாத்தூர் மற்றும் பி.கே.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி பி.கே.பாலசுப்பிரமணியம், தான் ஜெயேந்திரரின் பக்தன் என்பதால் இந்த வழக்கை விசாரிக்கப்போவதில்லை என்றார்.மேலும் ஜெயேந்திரர் மனு மீது புதிய பெஞ்ச் விசாரணை நடத்தும் என்ரும் அவர் அறிவித்தார்.

இதையடுத்து ஜெயேந்திரரின் மனு மீதான விசாரணை மூன்று வாரத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீதான வழக்கு காஞ்சீபுரம் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. ஜெயேந்திரரின் கோரிக்கைக்கு ஏற்ப இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கறிஞர்கள் வாதாடினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயேந்திரர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MSN Tamil
தமிழக வக்கீல் வாதாட தடை : சங்கராச்சாரியார் வழக்கு 3 வாரத்துக்கு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும்: ஆதர்டன்

டிரன்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் ஒழுங்கீனங்களில் ஈடுபட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் ஆதர்டன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகள் கிரிக்கெட் போட்டியின் உன்னதத் தன்மையை பாதிக்கும் வகையில் உள்ளது என்றார்.

கேப்டன் வான் தோள் பட்டை மீது இடித்ததற்காக மட்டுமே நடுவர்கள் ஸ்ரீசாந்துக்கு அபராதம் வித்தித்துள்ளதாகவும், அவரது பந்துவீச்சு வெறுப்புடன் வீசப்பட்ட ஒன்று என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஸ்ரீசாந்தின் செயலை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை என்றும், இந்திய கேப்டன் டிராவிட் இதற்கு பொறுப்பேற்று ஓவலில் நடக்கும் 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ஸ்ரீசாந்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆதர்டன் கேட்டுக் கொண்டுள்ளார்.

MSN Tamil

NDTV.com: Sreesanth must be banned: Atherton
Cricinfo - Sreesanth must be banned for beamer: Atherton

விசுவ இந்து பரிசத் குஜராத் மோடியை தேர்தலில் ஆதரிக்காது

இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்தில் நடைபெறவி ருக்கும் தேர்தலில் அம்மாநில விசுவ இந்து பரிசத் ஒதுங்கி யிருக்க முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ. கட்சியின் முதல் அமைச்சராக இருக்கும் நரேந்திர மோடிக்கு எந்தவித உதவியும் தமது தொண்டர்கள் செய்யக் கூடாது என்று வி.இ. பரிசத்தின் பொதுச்செயலாளர் பிரவீன் டொகாடியா தெரிவித்துள்ளார். 2002 தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதிலிருந்தே சங்பரிவாரைச் சேர்ந்த வி.எச்.பி. தன் அரசியல் கூறான பா.ஜ.க. வுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளாமல் விலகியே இருக்கிறது.
யாரும் தன்னை மிகப் பெரும் சக்தி வாய்ந்த மனிதன் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது என்று மோடியைப் பற்றி பிரவீன் டொகாடியா பேசியுள்ளார். ஆனால் மோடியின் பெயரைக் குறிப்பிடாமலே பேசியுள்ளார்.

விடுதலை

The Hindu : National : VHP not to support Modi in elections
Zee News - RSS admits ‘Parivar’ not united
Modi govt not pro-Hindu: Togadia - Ahmedabad - Cities - The Times of India

சாலமன் பாப்பையாவை கண்டித்து துண்டுப் பிரசுரம்

விழுப்புரத்தில் கம்பன் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பட்டிமன்றத்துக்கு தலைமை வகிக்க சாலமன் பாப்பையா வந்தார். இந்த விழாவில் தமிழ் ஆர்வலர் ஜோதி நரசிம்மன் தலைமையிலான குழுவினர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

சிவாஜி திரைப்படத்தில் நடித்த சாலமன் பாப்பையா, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாரியின் மகள்கள் அங்கவை, சங்கவை ஆகியோரை அவமதிக்கும் வகையில் வசனம் பேசியதாகவும், இதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து தமிழ் ஆர்வலர்கள் ஜோதி நரசிம்மன், கோ.பாபு, கோ.கணேசன், ஆனந்தன் உள்ளிட்ட 8 பேரை சப் இன்ஸ்பெக்டர் குமார் கைது செய்தார்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...