.

Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Tuesday, September 4, 2007

கலக்கும் சென்னை - தபால் துறையில் GPS - வீடியோ.

தபால் பட்டுவாடா செய்யும் வாகனங்களில் GPS பொருத்தி தபால்களை சரியான நேரத்தில் சென்றடைய சென்னைத் தபால் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

மேலும் செய்திக்கு "CNN - IBN TV..."


விடுதலைப் புலிகளின் புத்தகங்களை வைத்திருந்தவர் கைது

சென்னையிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லவிருந்த சுரேஷ் என்கிற 29வயது இளைஞர், விடுதலைப் புலிகள் பிரசுரித்த புத்தகங்களை வைத்திருந்ததால் க்யூ பிரிவு காவால்துறையினரால் கைது செய்யப்பட்டார். சுரேஷ் திருவாரூர் மாவட்டத்தின் மன்னார்குடியைச் சார்ந்தவர்.

Passenger carrying pro-LTTE books held - The hindu

தமிழ்நாட்டில் இன்டெல் நிறுவனம் 1800 பள்ளிகளுக்கு உதவி

கணீனி சிப்களை உருவாக்கும் இன் டெல் நிறுவனத்தின் இந்தியப்பிரிவு தமிழக அரசுடன் ஒப்பிட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் 1800 உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி சோதனைச்சாலைகளில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வி சம்பந்தமான பொருளடக்கத்தை கைக்கொள்ள வகை செய்து தர முன்வந்துள்ளது. கல்விச்சாலைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் உடல்நலமையங்களை இணைக்கும் கணினி வலையமைப்பை இரு தரப்பும் ஒத்துழைத்து உருவாக்கும்.
இது பற்றிய மேல்விவரங்களுக்கு...The Hindu News Update Service

Monday, September 3, 2007

தமிழகம் முழுவதும் பலத்த காவல்துறை கண்காணிப்பு

ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தால் இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய தலைநகரங்களில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்திற்கு அடுத்தப்படியாக தீவிரவாதிகள் தமிழகத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் மார்க்கெட், கோயில்களில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி

அ தி மு க - பா ஜ க மீண்டும் கை கோர்க்கும்?

அ.தி.மு.க.- பா.ஜனதா மீண்டும் கூட்டணி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட அவை வெற்றி பெறவில்லை. சமீபத்தில் 3-வது அணி அமைத்து தீவிரமாக மத்திய அரசியலில் ஈடுபட அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முடிவு செய்தார்.

ஆனால் இந்த அணி எதிர்பார்த்த அளவு வெற்றிகரமாக அமையவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. எனவே அ.தி.மு.க. 3-வது அணியை விட்டு விலகும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.

2 முறை பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்து இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டில் கணிசமான பாராளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்றால் அ.தி.மு.க.வுடன் கூட் டணி அமைக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே கூட்டணி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா மேலிட தலைவர்கள் அ.தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான முயற்சிகளைத் தொடங்கியுள்ளனர். இதற்கு பா.ஜனதா அணி சார்பில் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்ட செகாவத் பாலமாக இருந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. 3-வது அணியில் இருந்தாலும், ஜனாதிபதி தேர்தலில் செகாவத்துக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டார்கள். இது பா.ஜனதாவுடன் ஏற்பட இருக்கும் கூட்டணியின் தொடக்கம் தான் என பா.ஜனதா வட்டாரங்கள் கூறுகின்றன.

3-வது அணியில் அ.தி.மு.க. தவிர முலாயம்சிங் யாதவ் கட்சி, சந்திரபாபு நாயுடு தலை மையிலான தெலுங்கு தேசம் உள்பட 7 மாநில கட்சிகள் உள்ளன. பாராளுமன்ற தேர்தல் வந்தாலும் இந்த கட்சிகள் எல்லாம் சேர்ந்து 70 இடங்களில் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அ.தி.மு.க.வுக்கு தற்போது தமிழ்நாட்டில் செல்வாக்கு அதிகரித்துள்ளது என்று சமீபத்திய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. எனவே அ.தி.மு.க. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தயார் ஆகி வருவதாக கூறப்படுகிறது. 3-வது அணியில் இருந்தால் மத்திய அரசில் முக்கிய பங்கு வகிக்க முடியாது. எனவே, இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகி பாரதீய ஜனதா அணியில் சேரும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற வேண்டும் என்றால் முக்கிய கட்சிகளை கூட்டணியில் சேர்த்து கூட்டணி பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் கருதுகிறது.

எனவே தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் மீண்டும் பா.ஜனதா கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்கான தீவிர முயற்சிகளிலும் பா.ஜனதா இறங்கியுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வும் பச்சைக்கொடி காட்டி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக மாலைமலர் தெரிவிக்கிறது.

நக்சல்களினால் பாதிக்கப்பட்ட இடத்தில் கால்-சென்டர் துவக்கம்

கிருஷ்ணகிரியின் சனசந்திரம் கிராமத்தில் ஊராட்சித்துறை அமைச்சர் முக ஸ்டாலினால் 'அழைப்பு மையம்' வெள்ளிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டது. ஃபாஸ்டரா (FOSTERA -fostering technologies in rural areas) அமைப்பின் உதவியுடன் இந்த கால்-சென்டர் துவங்கியது. இதனால், தமிழகத்தின் கிராமங்களையும் விப்ரோ, காமெட் போன்ற நிறுவனங்களின் வேலை சென்றடையும்.

கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 120 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். நான்கு லட்சம் ரூபாய் அரசு மானியத்தின் உதவியுடன் கேளமங்கலம், தளி, மாத்தூர், பர்கூர், காவேரிப்பட்டணம் போன்ற கிராமப்புற பகுதி மக்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐம்பது லட்சம் ஒதுக்கிடப்பட்டிருக்கிறது.

First rural call centre in naxalite-affected Tamil Nadu district
IndianExpress.com :: Geneva outsources, TN Naxal belt village gets a call centre
DNA - India - From naxal village to BPO hub - Daily News & Analysis

Sunday, September 2, 2007

கலைமாமணி விழாவில் கருணாநிதி பேச்சு.

2006-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா, சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. திரைப்படம், நாடகம், இசை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்று விளங்கும் 69 பேருக்கு கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டன.

கலைமாமணி விருதுகளை ஆளுநர் பர்னாலா வழங்க, பதக்கங்களை முதல்வர் கருணாநிதி அளித்தார். விழாவில், கருணாநிதி பேசியது:

இந்த ஆண்டு சின்னத்திரை கலைஞர்களும் சிறப்பிக்கப்பட்டு இருக்கிறார்கள். முன்னதாக, அவர்களிடத்தில் ஒரு ஆதங்கம் இருந்தது. அவர்களுக்கும், விருது வழங்க வேண்டும் என்று. அதுகுறித்து என்னிடம் முறையிட்டார்கள்.

அதை நிறைவேற்றும் இடத்தில் நான் அப்போது இல்லை. தற்போது, நிறைவேறி இருக்கிறது.

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்பது முன்பு, சங்கீத நாடக சபா என்று இருந்தது. அதற்கு, திமுக ஆட்சியில் தான் இயல் இசை நாடக மன்றம் என பெயர் மாற்றப்பட்டது.

தமிழுக்கு தற்போது செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. செம்மொழி அஸ்தஸ்து குறித்து பெருமை பேச வேண்டுமானால் என்னைத் தான் (கருணாநிதி) பேச வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கடிதம் அனுப்பினார். அதை, புதையலாகப் பாதுகாத்து வருகிறேன்.

இன்று தமிழைக் காப்பாற்ற, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. தமிழைக் காப்பாற்றுகிறவர்கள் எனக் கூறுபவர்களைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது. நாமும் ஏமாற்றி விடக் கூடாது.

கலைஞர் "டிவி'யை தமிழில் நடத்த வேண்டும் என அறிவுரை சொல்கிறார்கள். நன்றியோடு ஏற்றுக் கொள்கிறேன். கலைஞர் "டிவி'யில் தமிழ் வாழுமா எனக் கேட்கிறார்கள். கலைஞர் வாழ்கிறாரோ இல்லையோ? தமிழ் வாழும். அது, மற்றவர்களையும் வாழ வைக்கும்.

பகையைக் கக்கிக் கொண்டு தமிழைக் காப்பாற்ற முடியாது. உள்உணர்வுடன் அனைவரும் ஒருங்கிணைந்து தமிழைக் காப்போம் என்றார் கருணாநிதி.

தினமணி

எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் மையம்

இந்தியாவில் முதல் முறையாக, சென்னை எழும்பூரில் 9 ஏக்கர் பரப்பில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நோயாளிகளுக்கு முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் இந்த புற்றுநோய் நிறுவனத்துக்கு, முதல் கட்டமாக ரூ. 300 கோடி வரை முதலீடு செய்யப்படும்.

இதற்கான பணிகள் 6 மாதத்துக்குள் தொடங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சென்னை எழும்பூரில் உள்ள மத்திய அரசு மருந்து இருப்புக் கிடங்கில் தேசிய புற்றுநோய் நிறுவனம் அமைய இருக்கிறது. மருந்து இருப்புக் கிடங்கை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த கிடங்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மருந்து இருப்புக்கிடங்கு ஏறத்தாழ 18 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. அதில், பாதி அளவுக்கு இடத்தை எடுத்து, தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்படும்.

மருந்து இருப்புக் கட்டடங்கள் 200 ஆண்டுகள் பழமையானவை. இதனால், அனைத்துக் கட்டடங்களும் இடித்து மாற்றி அமைக்கப்படும்.

முதல் தவணையாக ரூ. 300 கோடி: தேசிய புற்றுநோய் நிறுவனம் தொடங்க முதல் தவணையாக ரூ. 300 கோடி செலவிடப்படும். உலகத் தரம் வாய்ந்த புற்றுநோய் மையமாக விளங்கும். நோயாளிகள் மட்டுமல்லாது, புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெறும்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புற்றுநோய் நிறுவனங்களுடன் கூட்டு வைத்து, ஆராய்ச்சிப் பணிகள் நடைபெறும்.

நாட்டில் 10 லட்சம் பேருக்கு புற்றுநோய் புதிதாக வந்திருக்கிறது. புகையிலைப் பொருள்கள் காரணமாக, 60 சதவீதம் பேருக்கு புற்றுநோய் வருகிறது.

10-வது ஐந்தாண்டு திட்டத்தில், புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் பணி உள்ளிட்டவைகளுக்காக ரூ. 250 கோடி ஒதுக்கப்பட்டது. 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் ஏறத்தாழ ரூ.3,000 கோடி ஒதுக்கக் கேட்டு இருக்கிறோம். ரூ. 2,800 கோடி வரை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

அடையாறு புற்றுநோய் மையம், காஞ்சிபுரத்தில் உள்ள அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, புதுவை ஜிப்மர் மருத்துவமனைகளுக்கு ஆகியன மண்டல புற்றுநோய் மையங்கள் என்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அங்கீகாரம் அளிக்க பரிசீலனை செய்து வருகிறோம்
என்றார் அன்புமணி.

தினமணி

Saturday, September 1, 2007

பார்வையற்றோரும் பயன்படுத்த மின்-அஞ்சல் - சாதித்த மாணவியர்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் தொலைபேசி வழி மின் அஞ்சல் வசதிக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் புலத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) பி. ரவிச்சந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் ஜி. ஜெகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் பேராசிரியர் கே. மீனா வழிகாட்டுதலின் கீழ் மாணவிகள் டி. சித்ரா, பி. ரேவதி, ஐ. தென்றல், கே. வித்யா ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.

இம்மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பப் கல்லூரியில் ஆக. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் கணினியில் எழுத்துக்களை ஒலிகளாக மாற்றும் ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் இணையதளத்தில் தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையற்றவர்கள் தொலைபேசி கருவி மூலம் காதால் கேட்டுக் கொள்ளாம். மேலும் இதே முறையில் இ-மெயிலும் அனுப்பலாம். இதற்கென தனியே பயன்படுத்துவோர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த வசதியை பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

"வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இணையதளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பார்வையற்றவர்கள் இணைய தள வசதியை பெற இயலாத நிலையில் உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கருவியை மாணவிகள் செய்துள்ளனர்' என்று கூறி மாணவிகளைப் பாராட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.

நன்றி: தினமணி

குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது

மாநகராட்சியின் குப்பை களையும் பணி முடங்கியிருப்பதால் குமியும் குப்பைகளை எடுக்க முயன்ற அதிமுக எம் எல் ஏ உட்பட அக்கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். தி.நகர் எம் எல் ஏ கலைராஜன் திருவல்லிக்கேணியில் குப்பை வாரும்போது ஆவருடன் 29 கட்சியினரையும் காவலர்கள் கைது செய்தனர். இதேபோல நகரின் பலவேறு பகுதிகளில் , பெண்கள் உட்பட, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக குப்பை வாரும் பணியை கையிலெடுத்தக் கட்சியினரை கைது செய்ததை அதிமுக தலைவர் ஜெ ஜெயலலிதா கண்டித்துள்ளார். குப்பையை களையும் பணியைக் கூட கையாள முடியாத அரசு எவ்வாறு மக்களின் குறைகளை களையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இது பற்றிய The Hindu News Update Service

தலைக்கவசம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் அங்கீகாரம்.

வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தி இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளிலும், ஜுலை 1-ந் தேதி முதல் பிற இடங்களிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை விலக்கம் செய்யவேண்டும் என்று பொறியாளர் நிம்முவசந்த் என்ற பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இரு சக்கர வாகனங்களினால் மிக குறைந்த அளவில் தான் விபத்துக்கள் ஏற்படுவதால் தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

வாகனச்சட்டம் 129ம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டம், சுதந்திரமாகச் செல்ல வழி வகுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 21 க்கு எதிராக அமையவில்லை
என்பது தீர்ப்பின் சாரமாக இருந்தது.

செய்தி மூலம்: மாலைமலர்

பள்ளிக்கல்விக்காக ரூ6000 கோடி தமிழக அரசு திட்டம்

மாநிலத்தின் ஆரம்பக்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஆறாயிரம் கோடிவரை அரசு செலவிட திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை அருகே அலங்காநல்லூரில் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வாயுஅடுப்புக்களையும் வினியோகிக்க நடந்த ஒரு விழாவில் அமைச்சர் பேசும்போது இவ்வாறு கூறினார். இதில் 50 விழுக்காடு வரை நடுவண் அரசின் சர்வ சிக்சா அபியான்(SSA) மூலம் கிடைக்கும் என்றார். தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ் இவ்வருடமே சரியான எல்லைச்சுவர்களும் வகுப்பறைகளும் கட்டித் தரப்படும் என்றார்.

425 பேருக்கு தொலைக்காட்சிப்பெட்டிகளும் 241 பேருக்கு இலவச வாயு அடுப்புக்களும் அமைச்சர் கொடுத்தார்.

The Hindu News Update Service

கார் விபத்தில் அடிகளார் தப்பினார்

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் தலைவரான பொன்னம்பல அடிகளார் திண்டுக்கல் அருகே நடந்த கார்-டிரக் மோதலில் காயமெதுவும் இன்றி தப்பினார்.
திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே இவ்விபத்து நிகழ்ந்ததாக மடத்து அதிகாரிகள் கூறினர். கார் மிகவும் சேதமடைந்தபோதும் அடிகளாருக்கோ உடன் சென்றவருக்கோ ஒட்டுனருக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை எனக் கூறினர். மற்றொரு காரில் அடிகளார் தமது திருப்பூர் பயணத்தை தொடர்ந்தார்.

The Hindu News Update Service

Friday, August 31, 2007

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி - சரத்குமார்


சென்னை : நடிகர் சரத்குமாரின் புதிய கட்சி இன்று சென்னையில் உதயமானது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்று புதிய கட்சிக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சியின் கொடியை இன்று சரத்குமார் அறிமுகப்படுத்தினார். இந்த விழாவிற்கு சரத்குமார் தலைமை வகித்தார். கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி புதிய நிர்வாகிகளின் பட்டியலை வெளியிட்டார். நடிகர் சரத்குமார் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் அவைத் தலைவராக முருகன், துணைத்தலைவராக எர்ணாவூர் நாராயணன், பொருளாளராக கரு.நாகராஜன், துணை பொதுச் செயலர்களாக ஏ.எல்.சுந்தரேசன், சீனியம்மாள், ரவீந்திரன் துரைசாமி, கொள்கை பரப்பு செயலராக மருது.அழகுராஜ், தலைமை நிலைய செயலராக ஜெயபிரகாஷ், நிதிநிலைச் செயலராக ரகுபதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

நன்றி: தினமலர்

விஜயகாந்த் 2 நாள் கெடு

சென்னை, ஆக. 31:

சென்னை நகரில் மலை போல குப்பைகள் குவிந்துகிடப்பதால் முடைநாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, உடனடியாக குப் பைகளை எடுக்காவிட்டால் எனது தலைமையில் 2ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் குப்பைகள் அகற்றப் படும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.


மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது

சென்னை, ஆக. 31:

மூன்றாவது மண்டலத்தில் துப்புரவு பணி செய்ய தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதேபோல மற்ற 3 மண்டலங்களில் இருந்தும் அந்த நிறுவனத்தை வெளியேற்ற மாநகராட்சி சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேயர் கூறினார்.

மேலும் செய்திக்கு "மாலைச் சுடர்" செல்லவும்.

சேதுசமுத்திரம் திட்டத்திற்கு இடைக்கால தடை

உச்சநீதிமன்றத்தில் இன்று சேது சமுத்திரம் திட்டத்தில் ராம் சேது எனப்படும் மணற்பரப்பை பாதிக்காமல்
அகழ்வுப் பணி தொடரலாம் என்று இடைக்கால தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தடை செப்.14வரை இருக்கும். முழுவிவரம் இன்னும் கிடைக்கவில்லை என்கிறது இந்த ரீடிஃப் செய்தி

Thursday, August 30, 2007

சவால் தோழமை கட்சிகளுக்கில்லை - கருணாநிதி.

முதல்- அமைச்சர் கருணாநிதி அளித்துள்ள கேள்வி-பதில் ஒன்று மாலைமலரிலிருந்து..

கேள்வி:- சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 30 ஆம் நாள் நடைபெற்ற தங்களின் மைத்துனர் வீட்டுத் திருமணத்தில் தாங்கள் பேசும்போது, "கழக ஆட்சிக்கு சிலர் அறைகூவல் விடுக்கும் போதெல்லாம் உறுதியான வீர உள்ளம் படைத்த கழகத்தினர் இருக்க பயமேன்'' என்று குறிப்பிட்டதை தி.மு.க.வின் தோழமைக் கட்சிகளுக்கு விடுத்த மிரட்டல் என்பது போல சில ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளனவே?

பதில்:- தோழமை கொண்டோருக்கு யாரும் "சவால்'' அல்லது "மிரட்டல்'' விட மாட்டார்கள்-துரோகிகளுக்கும், எதிரிகளுக்கும் தான் அறை கூவலோ, சவாலோ விடுவார்கள். வேடிக்கை என்ன வென்றால் தி.மு.க. அணியை உடைக்க வேண்டுமெனப் "பகீரத'' முயற்சி செய்து வருகிற சில ஏடுகள், திருமணத் தில் நான் பொதுவாகப் பேசியதை, கழகத்தின் உறுதியை எடுத்துக் கூறியதை, திரித்து வெளி யிட்டுக்கலகம் செய்திடத் துடியாய்த் துடிக்கின்றனவே அது தான் பெரிய வேடிக்கை. இத்தகைய எத்தர்களின் விஷமப் பிரச்சாரத்தில் எல்லோரும் ஏமாந்து விடமாட்டார்கள்.

மூப்பனார் இருந்திருந்தால் என் அரசியல் மாறுபட்டு இருக்கும்: விஜயகாந்த் பேட்டி

சென்னை, ஆக. 30-

மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனார் 6-ம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேனாம்பேட்டையில் உள்ள அவரது நினைவிடத்தில் பல முக்கிய பிரமுகர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

மூப்பனார் சமாதியில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவதுë:-

மூப்பனார் என்னால் மறக்க முடியாத தலைவர். அவர் எனக்கு பல யோசனைகளைச் கூறினார். "தம்பி இப்போது சினிமாவில் இருக்கட்டும், தேவைப்படும் போது பார்த்துக்கொள்ளலாம் என்றார். அவரது குடும்பத்தில் ஒருவனாகவே இருந்தேன். ஒவ்வொரு பிறந்தநாளிலும் தவறாமல் வாழ்த்துச் சொல்வேன்.

இன்னும் அவர் உயிரோடு இருப்பது போலவே உணருகி றேன். மரியாதை, நல்ல பண்புகளை மூப்பனாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அடிக்கடி அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. வாசல்படி வரை வந்து வழியனுப்பி வைப்பார். அவரது பண்பை இன்று ஜி.கே.வாசனும் பின்பற்றி வருகிறார். நான் தற்போது வேறு அரசி யலில் இருக்கிறேன்.

மூப்பனார் இப்போது இருந்திருந்தால் என் அரசியல் வேறு மாதிரி இருந்திருக்கும். எளிமைக்கு மூப்பனார்தான் உதாரணம். மூப்பனார் காமராஜரை பின்பற்றினார். நான் அவரை பின்பற்றிதான் கதர் ஆடை அணிகிறேன்.

மேலும் செய்திக்கு மாலை மலர்

சென்னை: பிரிக்கப்படும் பேருந்து நிலையம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மூன்றாகப் பிரித்து தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூரில் வெளியூர் பேருந்துகளுக்கான நிலையத்தை அமைத்தால், போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுனில்குமார் மாநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டத்தில் யோசனை தெரிவித்திருந்தார்.

இதுபற்றி மாநகர வளர்ச்சிக் குழுமத்தலைவரும் அமைச்சருமான பரிதி இளம்வழுதியிடம் கேட்டபோது,

கோயம்பேடு பஸ் நிலையத்தை பிரித்து சென்னை நகரின் எல்லையில் பேருந்து நிலையங்களை உருவாக்கினால் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைய வாய்ப்புள்ளது என்பது உண்மைதான்.
சென்னை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கண்டிப்பாக மாற்று ஏற்பாடு செய்துதான் ஆக வேண்டும்.எனவே இதுகுறித்து கலந்தாய்வு கூட்டத்தில் எல்லோரும் சொன்ன யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

என்று பரிதி இளம்வழுதி கூறியுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...