.

Showing posts with label மோசடி. Show all posts
Showing posts with label மோசடி. Show all posts

Sunday, August 26, 2007

ரூ 2.30 கோடி கள்ள நோட்டுகள் - ஹைதராபாத்தில் பிடிபட்டன.

ஹைதராபாத் நகரில் கள்ள நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்து இருந்தது.

ஹைதராபாத் விமான நிலையத்தில் துபாயை சேர்ந்த ஒபைது அலி (31) என்பவன் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டான்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை துபாய் வழியாக மும்பை கொண்டு வந்து அங்கிருந்து ஹைதராபாத்தில் புழக்கத்தில் விட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக ஒபைதுவை போலீசார் கைது செய்தனர். மேலும் ஹைதராபாத்தை சேர்ந்த கலியா, முகமது நஜாத், செய்யது கவுஸ்பாசா ஆகியோரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.30 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை 500, 1000 ரூபாய் நோட்டுகள் ஆகும்.

கடந்த ஏப்ரல் மாதம் கள்ள நோட்டுகளை அவர்கள் ஹைதராபாத்துக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது.

ஹைதராபாத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு இந்த கள்ள நோட்டு கும்பல் பிடிப்பட்டது.

இது தொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் பல்வீந்தர்சிங் கூறும் போது, இந்த கள்ள நோட்டுகள் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவை. ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடல் வழியாக இந்தியா வந்துள்ளது என்றார்.

பிடிபட்ட ஒபைது 3 முறை பாகிஸ்தான் சென்று வந்துள்ளான். அங்கிருந்து கள்ள நோட்டுகளை வாங்கி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக மும்பைக்கு கொண்டு வந்துள்ளான். தாவூத் இப்ராகிமின் கும்பலை சேர்ந்தவனில் இவனும் ஒருவன்.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி:மாலைமலர்

Friday, August 24, 2007

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;

ரஷியாவில் 10 நாகை இளைஞர்கள் கைது;
17 பேர் கதி என்ன? - குடும்பத்தினர் பரிதவிப்பு!

ஆகஸ்ட் 24, 2007

திருச்சி: ரஷியா வழியாக ஜெர்மனிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கூறி தமிழகத்தைச் சேர்ந்த 10 பேரை ரஷிய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதனால் 10 பேரும் கடந்த 17ம் தேதி முதல் ரஷியாவில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சியில் உள்ள பிராந்திய பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தின் நாகப்பட்டணம் மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர் உள்ளூர் வேலைவாய்ப்பு நிறுவனத்தை அணுகியுள்ளனர். வெளிநாட்டில் வேலை கோரி அவர்களை இவர்கள் அணுகியுள்ளனர்.

அந்த ஏஜென்சி, 27 பேரிடமும் பெரும் பணத்தை வாங்கிக் கொண்டு முகம்மது ஷியாம் என்கிற இலங்கை நபர் மூலம் ரஷியாவுக்கு அனுப்பியுள்ளது. முகம்மது ஷியாம் ரஷிய பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

டூரிஸ்ட் விசா மூலம் 27 பேரும் ரஷியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு போன பின்னர் அவர்களை இரு பிரிவாக பிரித்துள்ளனர். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது.

ரஷியா வரை கூடவே வந்த ஷியாம், அங்கு போன பின்னர் தலைமறைவாகி விட்டார். காரணம், இவர்களை ரஷிய காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தது தெரிய வந்ததால். தான் கூட்டி வந்த அனைவரையும் ரஷியாவில் பரிதவிக்க விட்டு விட்டு அவர் தப்பி விட்டார்.

இந்த நிலையில் இரு பிரிவாக பிரித்து அனுப்பப்பட்டவர்களில் 17 பேரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மற்ற 10 பேரும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தை அணுகினர். அங்கு துணைத் தூதர் ஜோர்டானா பாவேலை சந்தித்து தங்களது நிலையைக் கூறியுள்ளனர்.

அவர் உடனடியாக 10 பேரையும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்க ஏற்பாடு செய்தார். பின்னர் திருச்சி பிராந்திய பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.பாலச்சந்திரனை தொடர்பு கொண்டு விவரத்தைக் கூறியுள்ளார்.

இதையடுத்து பாலச்சந்திரன், சம்பந்தப்பட்டவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த சிக்கல் குறித்து பாலச்சந்திரன் கூறுகையில், விதிமுறைப்படி, இதுபோல பிடிபடுவோர், ஊர் திரும்புவதற்கான விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை வைத்திருக்க வேண்டும். ஆனால் சில சமயங்களில் விசேஷ சந்தர்ப்பங்களில் இந்திய அரசே அந்த செலவுகளை ஏற்றுக் கொள்ளும்.

தற்போது ரஷியாவில் பரிதவிக்கும் நாகை இளைஞர்கள் விஷயத்தைப் பொருத்தவரை, டெல்லி திரும்புதவற்குத் தேவையான ரூ. 30,000 பணத்தை தயார் செய்யுமாறு இந்தியத் துணைத் தூதர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும் தெரிவித்துள்ளோம்.

இதையடுத்து நேற்று அவர்களின் பெற்றோர்கள் ரூ. 3 லட்சம் பணத்தை இங்கு வந்து செலுத்தியுள்ளனர். நாங்கள் இதை உடனடியாக ரஷியாவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்குத் தெரிவித்து விட்டோம்.

இதையடுத்து 10 பேரும் ஊர் திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அனைவரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். தாஷ்கண்ட் வழியாக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.

ஆனால் அவர்களை நாடு திரும்ப ரஷிய போலீஸார் அனுமதிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்தைத் தாண்டி அவர்கள் ரஷியாவில் தங்கியுள்ளதாக கூறி கைது செய்து விட்டனர். விடுதலையான பின்னர்தான் 10 பேரும் நாடு திரும்ப முடியும் என்றும் ரஷிய போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய தூதரகம் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ரஷிய காவல்துறை ஏற்கவில்லை. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் ஹோட்டல்களில் போலீஸ் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார் பாலச்சந்திரன்.

இந்த விவகாரத்தில் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, மாஸ்கோவில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம் கைது செய்யப்பட்டுள்ள நாகை இளைஞர்ள் ஊர் திரும்ப வழி செய்ய வேண்டும் என்று அவர்களின் உறவினர்ளும், குடும்பத்தினரும் கோரியுள்ளனர்.

இதற்கிடையே, ரஷியாவில் சிக்கித் தவிக்கும் இளைஞர் ஒருவரின் உறவினர்கள் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மணி சங்கர் அய்யரிடம் உதவி கோரி அணுகியுள்ளனர்.

ரஷியாவில் சிக்கியுள்ள அனைவரும் நாகை மாவட்டம் சீர்காழி மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

www.thatstamil.com

Wednesday, August 1, 2007

பிரிட்டிஷ் ஏர்வேஸ் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், தனது பயணச்சீட்டு விலைகளில் மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஐநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள் அபராதமாக கட்டவேண்டும் என்று அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் ஒழுங்குமுறை ஆணையங்கள் தீர்ப்பளித்துள்ளன.

இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள வான்போக்குவரத்து போட்டி விதிமுறைகளில், இதுவே மிக மோசமான விதிமீறல் என்று இவர்கள் இதை வர்ணித்துள்ளன.

கொரியாவின் தேசிய வானூர்தி நிறுவனமான கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது இதேபோன்ற குற்றச்சாட்டுகள் காரணமாக அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையம் முன்னூறு மில்லியன் டாலர் அபராதத்தை விதித்திருந்தது.

பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் கட்டணங்களில் கூடுதல் விலையை வசூலித்ததாக கொரியன் ஏர் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

2004 ஆம் அண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தோடு சேர்ந்து, கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாக ஒப்புகொண்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் நடந்த பெட்ரோலிய விலையேற்றம் காரணமாகவே இந்த கூடுதல் கட்டணங்களை வசூலித்ததாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் கூறியுள்ளது.

BBC Tamil

British Airways fined $550 million for ripping off passengers - TIME
How Branson got out of a pickle | Special reports | Guardian Unlimited: "If only British Airways, instead of Virgin Atlantic, had picked up the phone to inform the authorities of the illegal price fixing activities, it might have escaped scot-free. But its arch-rival Virgin Atlantic got there first and, as whistleblower, earned itself immunity from penalties on both sides of the Atlantic."

Wednesday, July 11, 2007

கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: என்.வரதராஜன்

தமிழகத்தில் முறைகேடாக நடத்தப்பட்டுள்ள கூட்டுறவுத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும். ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் என்.வரதராஜன் வலியுறுத்தினார்.

மேலும் கூட்டுறவுத் தேர்தலில் திமுகவுடன் மார்க்சிய கம்யூனிஸ்ட் தொகுதி உடன்பாடு செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கூட்டுறவுத் தேர்தல் முறைகேடுகளைக் கண்டித்து அக்கட்சி சார்பில் மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதற்குத் தலைமை வகித்து அவர் பேசியது:

தமிழ்நாட்டில் கூட்டுறவுத் தேர்தல் 90 சதவீத இடங்களில் முறைகேடாக நடந்துள்ளது. ஆளும் கட்சியினருடன் அதிகாரிகள் இணைந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர். நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் தமிழக அரசுதான் இத் தேர்தலை நடத்துகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி அளித்த பேட்டி சரியல்ல. என்னோடு தொடர்புகொள்ள முடியவில்லை என அவர் கூறியிருப்பது தவறு செய்துவிட்டு தப்பிக்க நினைக்கும் செயலாகும்.

கூட்டுறவுத் தேர்தலை ஜனநாயக ரீதியாக நடத்துங்கள் எனக் கூறியபோது முதல்வர் தலையசைத்தார். ஆனால் படிப்படியாக வளர்ந்து ஜனநாயக விரோதத்துக்குள் திமுக சிக்கிக்கொண்டுள்ளதோ? என நினைக்கத் தோன்றுகிறது. மத்திய அரசின் ஆன்லைன் வர்த்தகத்தில் திமுக தலையீடு, மின்சார உற்பத்தியில் தனியார் கூடாது என்பது, மக்களவை, சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு, சென்னை விமான நிலைய விஸ்தரிப்பை தனியாரிடம் தரக் கூடாது ஆகியவற்றில் திமுக செயல்பாட்டை வரவேற்றோம். ஆனால் இந்த ஆதரவு ஜனநாயகத்தை அழிப்பதற்கான அனுமதியாக திமுக கருதக் கூடாது என்றார் வரதராஜன்.

தினமணி

CPM alleges DMK 'high-handedness' in Coop Elections

Monday, July 9, 2007

BSNL: தயாநிதி காலத்து மோசடி கண்டுபிடிப்பு - ராஜா

இதுபற்றி இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி:

இந்தியாவின் மிகப்பெரிய, அரசுசார் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4.55 கோடி புதிய இணைப்புகளுக்கான கருவிகள் பெறுவதற்காக போடப்பட்ட டெண்டரில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மத்திய அமைச்சராக இருந்த போது நடந்த இந்த ஊழல் குறித்து விசாரிக்கவும், டெண்டரை மீண்டும் கோரவும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

மொபைல் போன் மற்றும் சாதாரண போன் இணைப்புகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல்., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், எம்.டி.என்.எல்., நிறுவனம் டில்லி மற்றும் மும்பையிலும், நாட்டின் பிற பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் சேவை அளித்து வருகின்றன. இந்தியா முழுவதும் மேலும் 4.55 கோடி மொபைல் போன்(ஜி.எஸ்.எம்.,) இணைப்புகள் வழங்க அதற்கான புதிய கருவிகள் வாங்க பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில் உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இதற்கு எரிக்சன், மோட்டரோலா, நோக்கியா, சிமென்ஸ், இசட்.டி.இ., ஆகிய ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகளை இந்நிறுவனங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆலோசனை செய்தது. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகள் திருத்தப்பட்டன. இதன் பிறகு தொழில்நுட்பக் காரணம் காட்டி மோட்டரோலா, இசட்.டி.இ., நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த தயாநிதி இருந்தார். இத்துறையின் அமைச்சராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பொறுப்பேற்றார். பி.எஸ்.என்.எல்., நிறுவனம் விடுத்த டெண்டரை செயல்படுத்தியதை நிறுத்தி வைத்தார்.

ஆறு மாதகாலமாக இது நிலுவையில் உள்ளதால் தனியார் மொபைல் போன் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்., நிறுவனமும் இது போல புதிய இணைப்புகளுக்கான கருவிகள் கேட்டு டெண்டர் விட்டது. அந்நிறுவனத்துக்கு இரண்டாம் தலைமுறை(2 ஜி) மற்றும் மூன்றாம் தலைமுறை (3 ஜி) கருவிகள் சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக எம்.டி.என்.எல்., நிறுவனம் ஒரு இணைப்புக்கு ரூ.2,845 மட்டுமே செலுத்த வேண்டும்(இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 41 என்ற அளவில் இருந்தது). ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் போட்டுள்ள டெண்டர் படி ஒரு இணைப்புக்கு ரூ.4,940 செலுத்த வேண்டும். மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கான கருவிகளை பெற வேண்டும். ஒரு இணைப்புக்கு ரூ.4,940 என்றால் 4.55 கோடி இணைப்புகளுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக தான் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் பி.எஸ்.என்.எல்., தேவையில்லாமல் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழக்க வேண்டி உள்ளது. எனவே தான் டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் காலதாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

நாட்டின் தகவல் தொடர்பு இணைப்புகளை அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாண்டி இந்த காலதாமதம் செல்லாது. இந்த விஷயத்தில் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுடனும் பேசப்படும். எம்.டி.என்.எல்., நிறுவனத்துக்கு, "2ஜி' மற்றும் "3ஜி' கருவிகளை மோட்டரோலா நிறுவனம் தான் சப்ளை செய்ய உள்ளது. இந்நிறுவனம் உலகளவில் தலைச்சிறந்த ஒன்று. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இந்நிறுவனம் தகுதி பெறவில்லை என்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நிராகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார்.ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் டெண்டருக்கு பதிலாக புதிய டெண்டர் விடுவது குறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு அமைச்சர் ராஜா அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி: தினமலர்

Sunday, July 8, 2007

விசா மோசடி: விமான நிலைய ஊழியர் கைது.

திருவனந்தபுரம் அருகே உள்ள பாலராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது43). இவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இதனால் அவருக்கு விமான நிலைய அதிகாரிகளுடன் பழக்கம் ஏற்பட்டது.

இதைப்பயன்படுத்தி திருவனந்தபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பலரிடம் வெளிநாடு செல்ல விசா வாங்கி தருவதாக கூறி உள்ளார். அவர் விமான நிலைய ஊழியராக இருந்ததால் அவரை நம்பி 100க்கும் மேற்பட்டோர் பணம் கொடுத்து உள்ளனர். ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.1 லட்சம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனால் விசா வாங்கியவர்கள் விமான நிலையம் சென்றதும் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் அவை போலி விசா என்பது தெரியவந்தது அவர்கள் இது குறித்து விஜயகுமாரிடம் கேட்டால் கஸ்டம்ஸ் அதிகாரியாக தற்போது உள்ளதாகவும் மீண்டும் விரைவில் விசா ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரிடம் விசா வாங்கி ஏமாந்த ஒருவர் இதுகுறித்து திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து போலி ரப்பர் ஸ்டாம்பு போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...