.

Monday, July 9, 2007

BSNL: தயாநிதி காலத்து மோசடி கண்டுபிடிப்பு - ராஜா

இதுபற்றி இன்றைய தினமலரில் வந்துள்ள செய்தி:

இந்தியாவின் மிகப்பெரிய, அரசுசார் தொலைத்தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் 4.55 கோடி புதிய இணைப்புகளுக்கான கருவிகள் பெறுவதற்காக போடப்பட்ட டெண்டரில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி மத்திய அமைச்சராக இருந்த போது நடந்த இந்த ஊழல் குறித்து விசாரிக்கவும், டெண்டரை மீண்டும் கோரவும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

மொபைல் போன் மற்றும் சாதாரண போன் இணைப்புகள் வழங்குவதில் பொதுத்துறை நிறுவனங்களான எம்.டி.என்.எல்., மற்றும் பி.எஸ்.என்.எல்., நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், எம்.டி.என்.எல்., நிறுவனம் டில்லி மற்றும் மும்பையிலும், நாட்டின் பிற பகுதிகளில் பி.எஸ்.என்.எல்., நிறுவனமும் சேவை அளித்து வருகின்றன. இந்தியா முழுவதும் மேலும் 4.55 கோடி மொபைல் போன்(ஜி.எஸ்.எம்.,) இணைப்புகள் வழங்க அதற்கான புதிய கருவிகள் வாங்க பி.எஸ்.என்.எல்., திட்டமிட்டது. இதற்காக, கடந்த ஆண்டு மார்ச்சில் உலகளாவிய டெண்டர் விடப்பட்டது. இதற்கு எரிக்சன், மோட்டரோலா, நோக்கியா, சிமென்ஸ், இசட்.டி.இ., ஆகிய ஐந்து நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகளை இந்நிறுவனங்களால் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆலோசனை செய்தது. டெண்டரில் குறிப்பிட்டு இருந்த தொழில்நுட்ப நிபந்தனைகள் திருத்தப்பட்டன. இதன் பிறகு தொழில்நுட்பக் காரணம் காட்டி மோட்டரோலா, இசட்.டி.இ., நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டன. இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தமிழகத்தைச் சேர்ந்த தயாநிதி இருந்தார். இத்துறையின் அமைச்சராக சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ராஜா பொறுப்பேற்றார். பி.எஸ்.என்.எல்., நிறுவனம் விடுத்த டெண்டரை செயல்படுத்தியதை நிறுத்தி வைத்தார்.

ஆறு மாதகாலமாக இது நிலுவையில் உள்ளதால் தனியார் மொபைல் போன் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக அதிருப்தி ஏற்பட்டது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல்., நிறுவனமும் இது போல புதிய இணைப்புகளுக்கான கருவிகள் கேட்டு டெண்டர் விட்டது. அந்நிறுவனத்துக்கு இரண்டாம் தலைமுறை(2 ஜி) மற்றும் மூன்றாம் தலைமுறை (3 ஜி) கருவிகள் சப்ளை செய்ய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதற்காக எம்.டி.என்.எல்., நிறுவனம் ஒரு இணைப்புக்கு ரூ.2,845 மட்டுமே செலுத்த வேண்டும்(இந்த டெண்டர் இறுதி செய்யப்பட்ட போது ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 41 என்ற அளவில் இருந்தது). ஆனால், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் போட்டுள்ள டெண்டர் படி ஒரு இணைப்புக்கு ரூ.4,940 செலுத்த வேண்டும். மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கான கருவிகளை பெற வேண்டும். ஒரு இணைப்புக்கு ரூ.4,940 என்றால் 4.55 கோடி இணைப்புகளுக்கு எவ்வளவு செலுத்த வேண்டும் என்று கணக்கிட்டு பார்த்தால் மலைப்பாக தான் தோன்றுகிறது. இந்த விஷயத்தில் பி.எஸ்.என்.எல்., தேவையில்லாமல் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழக்க வேண்டி உள்ளது. எனவே தான் டெண்டரை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் காலதாமதம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.

நாட்டின் தகவல் தொடர்பு இணைப்புகளை அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்ட காலத்தை தாண்டி இந்த காலதாமதம் செல்லாது. இந்த விஷயத்தில் விரைவில் மறுபரிசீலனை செய்யப்படும். பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு விண்ணப்பித்த ஐந்து நிறுவனங்களுடனும் பேசப்படும். எம்.டி.என்.எல்., நிறுவனத்துக்கு, "2ஜி' மற்றும் "3ஜி' கருவிகளை மோட்டரோலா நிறுவனம் தான் சப்ளை செய்ய உள்ளது. இந்நிறுவனம் உலகளவில் தலைச்சிறந்த ஒன்று. ஆனால், தொழில்நுட்ப ரீதியாக இந்நிறுவனம் தகுதி பெறவில்லை என்று பி.எஸ்.என்.எல்., நிறுவனம் நிராகரித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இவ்வாறு அமைச்சர் ராஜா கூறினார்.ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை ஏற்படுத்தும் டெண்டருக்கு பதிலாக புதிய டெண்டர் விடுவது குறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு அமைச்சர் ராஜா அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றி: தினமலர்

1 comment:

Boston Bala said...

முன்பெல்லாம் ஆட்சி மாறினால்தான் மீண்டும் கப்பம் கட்ட வேண்டும். இப்போதெல்லாம், மந்திரிகள் மாறினாலே போதுமானது.

-o❢o-

b r e a k i n g   n e w s...