.

Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, August 27, 2007

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்

கன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர்
பாறை இடையே பாலம் கட்ட பரிந்துரை

ஆகஸ்ட் 27, 2007

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை-விவேகானந்தர் பாறை இடையே பாலம் கட்டுவது குறித்து தமிழக அரசிடம் பரிந்துரைக்கப்படும் என்று சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் முல்லைவேந்தன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,

கன்னியாகுமரி பழத் தோட்டம் மற்ற இடங்களில் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு ஒரு முன் மாதிரி பழத்தோட்டமாக இருந்து வருகிறது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். இது குறித்து பரீசிலிக்கப்படும்.

திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் விதமாக பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்தை அரசுக்கு தெரிவிப்போம் என்றார்.


www.thatstamil.com

Tuesday, August 21, 2007

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும்!

இந்திரா காந்தி உயிரோடு இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்று வைகோ தெரிவித்தார். மேல்மலையனூர் ஒன்றியம் செக்கடிகுப்பம் கிராமத்தில் மதிமுக கிளை சார்பில் தமிழ் மன்னர்களின் கலை இலக்கியப் பண்பாட்டு பெருவிழா நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார். அப்போது, தமிழர்களின் மீது சிங்கள ராணுவம் குண்டு மழை பொழிகிறது. இதற்கு இந்தியா ஆயதங்களையும், விமானங்களையும், ரேடார்களையும் அளிக்கிறது. தமிழர்களுக்கு விரோதமான அரசு மன்மோகன்சிங் அரசு. தமிழர்கள் ஆண்ட ஈழத்தை தமிழர்களுக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் கோரிக்கைவைத்தேன். ஆலோசனை நடத்தி வருவதாக அவர் பதில் அளித்தார். ஆனால் அவர் இறந்து விட்டது துரதிர்ஷ்டமாக போய்விட்டது. அவர் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக தனி ஈழம் ஏற்பட்டிருக்கும் என்று வைகோ தெரிவித்தார்.

Sunday, August 19, 2007

தமிழறிஞர்களுக்கான தொல்காப்பியர் விருது-ரூ.ஐந்து இலட்சம்

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங் இதைத் தொடங்கி வைத்தார். முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் அர்ஜூன் சிங் பேசுகையில்,

செம்மொழித் தமிழில் உள்ள பழம்பெரும் காப்பியங்கள், இதிகாசங்களை தொகுத்து அச்சிடும் பணி கோவையில் நடந்து வருகிறது. அப்பணி இறுதி வடிவத்தில் உள்ளது. அச்சிடும் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் முடிந்து விடும்.

இதுதவிர செம்மொழித் தமிழில் உள்ள படைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களாக உருவாக்கும் திட்டமும் உள்ளது. இவற்றை அடுத்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி முதல்வர் கருணாநிதி தலைமையில் வெளியிடுவோம்.


செம்மொழித் தமிழில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்த விருதுக்கு தொல்காப்பியர் விருது என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த விருதுக்குரிய பரிசுத் தொகையாக ரூ. 1 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இத்தொகை முதல்வர் கருணாநிதியின் கோரிக்கையின் பேரில் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர குறள் பீடம் விருதும் வழங்கப்படும். இந்த விருதுக்கான பரிசுத் தொகையும் ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து இளம் தமிழறிஞர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படும்.

செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவும் தமிழக மக்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. இந்த மையத்தை அமைக்க 29 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த மையத்தில் தமிழ் ஆய்வுகள் தவிர செம்மொழி தமிழ் போதனைகளும் நடத்தப்படும். மேலும் பட்டப் படிப்புகளையும் தமிழக அரசு இந்த மையம் மூலம் நடத்த நான் யோசனை தெரிவித்துள்ளேன்.

கடந்த 2 நூற்றாண்டுளாக சமஸ்கிருதம் குறித்து விரிவாக ஆய்வுகள் நடந்துள்ளன. அதே அளவு சிறப்புடைய, 20 திராவிட மொழிகள் தோன்றக் காரணமான தாய் மொழியான தமிழுக்கும் அந்த அளவுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து உருவாக்கியுள்ள இந்த மையம் அதனை நிறைவு செய்யும்
என்றார்.

Saturday, August 18, 2007

என் ஆசான் ஆர்.எம்.டி. - ஏ.கே.கான்

என் ஆசான் ஆர்.எம்.டி.

ஆகஸ்ட் 18, 2007

-ஏ.கே.கான்

சில நாட்களுக்கு முன் மறைந்து போனார் என் ஆசானும், தினமணியின் முன்னாள் ஆசிரியருமான இராம.திரு.சம்பந்தம்.

திருஞான சம்பந்தம் என்ற தனது பெயரை அவர் சுருக்கியதற்கு அவரது பெரியார் பற்றும் ஒரு காரணம். மிகத் தீவிரமான தமிழ்ப் பற்றாளர்.

ஆர்.எம்.டி என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட அந்த மனிதர், தினமணியில் பல அற்புத மாற்றங்களைக் கொண்டு வந்தவர். கோபத்துக்கு பேர் போனவர். அதே நேரத்தில் மிகச் சிறந்த மனிதாபிமானி. குழந்தைகள் இல்லாத நிலையில், எத்தனையோ பேரை தத்தெடுத்து படிக்க வைத்திருக்கிறார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் நிருபராக தனது இதழியல் வாழ்வைத் தொடங்கியவர். படிப்படியாய் உயர்ந்து தினமணியின் ஆசிரியரானாவர்.

எடிட்டர் என்ற பெயரில் ஏ.சி. அறையில் கதவைப் பூட்டிக் கொண்டு தங்கக் கோபுர ஜர்னலிஸம் செய்யாமல் நிருபர்களோடும், புகைப்பட கலைஞர்களோடும், உதவி ஆசிரியர்களோடும் கலந்து உறவாடும் ஆசிரியர் அவர்.

பிற பத்திரிக்கைகளை வரி விடாமல் படித்து அதில் தினமணி செய்தியாளர்கள் தவற விட்ட செய்திகளோடு தான் அலுவலகத்துக்கே வருவார். வந்த கையோடு தவறு செய்தவர்களை பிடி பிடித்துவிட்டுத் தான் அடுத்த வேலைக்கே போவார்.

அவரது வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இளம் பத்திரிக்கையாளர்கள் கூட தவிப்பதுண்டு. வயதை மீறிய வேகம் காட்டியவர்.

நிருபர்கள் என்றால் ஜுப்பாவும் கசங்கிய உடைகளுமாய் இருந்தாக வேண்டும் என்று (யார் கொண்டு வந்த ரூலோ, இன்னும் அதை சினிமாவில் தான் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள்) நியதியை தூக்கி எறிந்து மிடுக்காக இருக்க வேண்டும் என்று சட்டமே கொண்டு வந்தவர்.

தினமணியில் நான் சேர்ந்த புதிதில் செருப்புடன் அவர் அறைக்குள் நுழைய, என்னப்பா டாய்லெட்ல இருந்து நேரா இங்க வந்துட்டியா என்று கேட்டு அதிர்ச்சி தந்தார்.

அவரது தாயார் மறைந்த நேரத்தில் நான் பெங்களூர் தினமணி பதிப்பில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அவரிடம் தொலைபேசியில் தாயார் மறைவு குறித்து விசாரித்தபோது, ஆமாம்பா.. இன்னிக்கு அங்க என்ன முக்கியமான நியூஸ், என்ன நியூஸ் பைல் பண்ண போறே என்றார் பதிலுக்கு.

வேலையில் அவ்வளவு தீவிரம் அந்த மனிதருக்கு. ஓய்வு பெறும் வரையில் வேலை.. வேலை என்றே வாழ்ந்தவர். வார விடுமுறை என்றெல்லாம் அவர் ஏதும் எடுத்ததில்லை. ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் பணியில் இருப்பார்.

பெங்களூரில் இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்காக நடத்தப்பட்ட ஒரு விடுதியுடன் கூடிய பள்ளிக்கு அரசின் உதவி நின்றுவிட அங்கு படித்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பசி, பட்டினியால் தவிப்பது குறித்து அவரிடம் தெரிவித்தபோது உடனே அதை மிகப் பெரிய அளவில் செய்தியாக்கச் சொன்னார்.

அவர் சொன்ன கோணத்தில் நாங்கள் வெளியிட்ட அந்த செய்திக்கு மிகப் பெரிய பலன் கிடைத்தது. கிட்டத்தட்ட ரூ. 1 கோடி வரை நன்கொடை வந்து குவிந்தது. அதை தமிழக அரசிடம் தந்து அந்தப் பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டுகோள் விடுத்தார்.

கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர் ஆர்.எம்.டி. ஆனாலும் அந்த அகதிக் குழந்தைகளுக்கு உணவளித்து உதவ பங்காரு அடிகளார் முன் வந்தபோது, அடிகளாரின் மனிதாபிமானத்தைப் பாராட்டி, நன்றி சொல்லி கடிதம் எழுதிய பண்பாளர்.

நான் வெளியூர் பதிப்பில் பணியாற்றிய நிலையில் அவரை சந்திக்கச் சென்றபோது காலை 10.45 மணிக்கு வந்தார். ஸாரிப்பா வழக்கமா 10.30க்கு வந்துருவேன். இன்னிக்கு லேட் ஆயிருச்சு என்றார்.

இதே நேரம் தவறாமையையும் ஒழுக்கத்தையும் வேலையில் அதி தீவிரத்தையும் அனைவரிடமும் எதிர்பார்த்த ஆர்.எம்.டிக்கு அபிமானிகளை விட எதிர்ப்பாளர்களே அதிகம்.

யார் என்ன நினைச்சாலும் சரி, எனக்கு வேலை தான் முக்கியம் என்பார். கோபத்தில் வார்த்தைகளை கொட்டுவார். தேள் கடித்தது போல் இருந்தாலும், யோசித்துப் பார்த்தால் நம் பக்கமே தவறு இருப்பது புரியும். அவருக்கு யார் மீதாவது கோபம் வந்தால் நீண்ட நாளைக்கு விலகாது.

நான் தினமணியை விட்டு விலகியபோது அவருக்கு வந்தது அதே போன்ற கோபம்.

என்னிடம் பேசவே மறுத்தார். அவரிடம் பேச எனக்கும் பயம்.

ஆனாலும் என்னை உருவாக்கிய ஆசானிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை.. அவரை ஒரு முறை மீண்டும் சந்தித்துவிட வேண்டும் என்று அவ்வப்போது நினைத்துக் கொள்வேன்.

ஆனால், அவரது கோபம் என்னை தடுத்தது. அவர் மறையும் வரை.

ஏ.கே.கான்
ஆசிரியர்,
தட்ஸ்தமிழ்

http://thatstamil.oneindia.in/news/2007/08/18/rmt.html

Thursday, August 16, 2007

சிங்கப்பூரில் 'புதிய நிலா' 10ம் ஆண்டு விழா

சிங்கப்பூர்: சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் புதிய நிலா மாத இதழின் 10வது ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.

மஸ்கட் தெருவில் (அரபு தெரு அருகில்) உள்ள சுல்தான் பள்ளிவாசல் இணை மண்டபத்தில் மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது.

தமிழறிஞர் டாக்டர் சுப.திண்ணப்பன் தலைமை தாங்குகிறார். சிங்கப்பூர் நாணய மாற்று வணிகர் சங்க பொதுச் செயலாளர் எம்.ஒய். முகம்மது ரபீக், மா.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்வேள் நற்பணி மன்ற பொதுச்செயலாளர் எம். இல்யாஸ் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

புதிய நிலா பத்தாம் ஆண்டு நிறைவு தொகுப்பு நூலை திராவிடர் கழக தலைவர் டாக்டர் கி.வீரமணி வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துகிறார்.

தொலைக்காட்சிப் படைப்பாளர் அ. முகம்மது அலி , சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக ஆங்கில இலக்கிய பேராசிரியர் டாக்டர் சித்ரா சங்கரன், பன்னூலாசிரியர் டாக்டர் சையத் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்துகின்றனர்.

கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குகிறார்.

புதிய நிலா இதழின் சிறப்பாசிரியர் மு.ஜகாங்கீர் ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நிகழ்த்துகிறார்.

இந்த விழா தொடர்பாக முதல்வர் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தியில், இதழ் பணி என்பது மிகுந்த பொறுப்பு வாய்ந்தது. உண்மைச் செய்திகளை சமுதாய நன்மைக்காக நெஞ்சுரத்துடனும், நடுவு நிலையுடனும் வெளியிடுவது நாட்டில் நேர்மையும் நியாயமும் நிலைக்கச் செய்யும் திருப்பணியாகும். அற வழியில் மக்களை ஆற்றுப்படுத்திடும் அறப்பணியாகும்.

இப்பணியில் பத்தாண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பது இதழ் நடத்துவோருக்கு பெருமை சேர்ப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய நிலா இதழின் முகவரி : புதிய நிலா
390 விக்டோரியா தெரு
#01 - 11 கோல்டன் லேண்ட்மார்க் எஸ் சி
சிங்கப்பூர் 188061
தொடர்புக்கு : 9007 2961

Wednesday, August 8, 2007

சிண்டிகேட் வங்கி: இந்தி தெரிந்தால் தான் வேலை

இந்தி மொழி படித்தவர்களுக்கு மட்டுமே வேலை என்ற சிண்டிகேட் வங்கியின் அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால், போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அமைப்பின் பொதுச் செயலாளர் திருமாவளவன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

சிண்டிகேட் வங்கி நானூறு எழுத்தர்கள், முன்னூறு அதிகாரிகளை பணியமர்த்த அறிவிப்பு செய்தது. எழுத்துத் தேர்வு இல்லாமல், நேரடியாக நேர்முகத் தேர்வு மூலம் பணியாளர்களை தேர்வு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பில் இந்தியை ஒரு பாடமாக எடுத்துப் படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இந்தியை கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்திருப்பது இதுவே முதல் முறை. இது தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இருமொழிக் கொள்கைக்கு எதிரானது.

தினமணி

Friday, August 3, 2007

'என்ஜினீயரிங், மருத்துவ படிப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வரவேண்டும்': டாக்டர் ராமதாஸ்

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வியை பொறுத்தவரை நாட்டின் இன்றைய அவசர, அவசியமான தேவை ஆரம்பக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது தான். இதை நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு ஆண்டிப்பட்டி, விருதுநகர் மாவட்டத்திலும் ஆசிரியர்களை நியமிக்க கோரி மாணவர்களும், பெற்றோரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளது. மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து சாலை மறியல் நடத்தி ஆசிரியர்களை நியமிக்க கோரும் நிலைமை இருக்கக்கூடாது.

ஆரம்பக்கல்வி சீரான தரமான கட்டாய கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். மொத்த கல்விக்கும் ஒதுக்கப்படும் நிதியில் 50 சதவீதம் ஆரம்பக்கல்விக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆரம்பக்கல்விக்கு தனிக்கவனம் செலுத்தவும், தரத்தை உயர்த்தவும் அர்ப்பணித்துக் கொள்ளும் தனி அமைச்சர், அமைச்சகம் நியமிக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

தமிழ் வழி கல்வியில்

பிளஸ்-2 வரை தமிழ் வழிகல்வியில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளை அடுத்த ஆண்டு முதல் தமிழ்வழியில் கொண்டு வரவேண்டும்.

50 சதவீத இடங்களை (மருத்துவம், பொறியியல்) பிளஸ்-2 வரை தமிழ்வழியில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். விடுதி முதல் இலவச கல்வியும் வேலை வாய்ப்பில் முன்னுரிமையும் வழங்கப்பட வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் நடந்து வரும் மணல் கொள்ளையை பற்றி நேற்று முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். எங்களது எம்.எல்.ஏ.க்களை அனுப்பி ஆய்வு செய்து அறிக்கையை கடிதமாக எழுதியுள்ளேன். இதுபற்றி அதிகாரிகளோடு, முதல்-அமைச்சர் கருணாநிதி அதிக நேரம் பேசியதாக அரசு தரப்பு செய்தியில் வெளியாகி உள்ளது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் இது போன்ற கருத்துக்களை கடிதம் மூலமாகவும், செய்தியாளர்களை சந்தித்தும் தெரிவித்து வருகிறேன்.

1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சரளமாக பேசும் படியான ஆங்கில மொழியை கற்றுத்தர வேண்டும். இது மாணவ, மாணவிகளுக்கு போதுமானது.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

வீரமணி கருத்து

பின்னர் நிருபர்கள் டாக்டர் ராமதாசிடம், 'தி.மு.க. கொண்டுவரும் அனைத்து திட்டங்களையும் தோழமை கட்சிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என திராவிடர் கழகம் வீரமணி கூறியிருக்கிறாரே?' என நிருபர்கள் கேட்டனர். அதற்கு டாக்டர் ராமதாஸ் பதிலளிக்கையில், 'வீரமணி அறிக்கையை நானும் படித்தேன். முந்தைய ஆட்சியில் அரசு ஊழியர்கள் போராட்டத்தின் போது அடக்குமுறை அவர்கள் மீது ஏவி விடப்பட்டது. அனைத்து கட்சிகளும் கண்டித்தன. ஆனால் நண்பர் வீரமணி மட்டும் அரசு ஊழியர் போராட்டத்தை அடக்கி ஆண்ட பெருமை படைத்தார் என்றும்,அவரை போன்று நிர்வாக திறன் படைத்தவரும் வேறு எவரும் இல்லை என்றும் அப்போதைய முதல்வரை பாராட்டினார். இன்று மாறி இருக்கிறார்' என்றார்.

முழுவதும் படிக்க: தினத்தந்தி

Wednesday, August 1, 2007

டைரக்டர் அமீர் மீது கார்த்தி பாய்ச்சல் - ஆசிய பட விழாவுக்கு அழைக்கவில்லை என்பதா?

டெல்லியில் நடந்த ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' சிறந்த படமாக தேர்வானது. இதில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. விருது வழங்கும் விழாவில் 'பருத்தி வீரன்' கதாநாயகன் கார்த்தி பங்கேற்றார்.

இந்த விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று 'பருத்தி வீரன்' டைரக்டர் அமீர் குறை கூறினார். தன்னை ஓரம் கட்டுவதாகவும் சொன்னார். என்னை ஒதுக்குவது இது முதல் தடவை அல்ல. கேன்ஸ் பட விழாவுக்கு பருத்தி வீரன் படத்தை அனுப்பியதையும் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

இதுபற்றி நடிகர் கார்த்தி கூறியதா வது:-

ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்துக்கு இரு விருதுகள் கிடைத்தது பெருமையான விஷயம். இந்தி, பெங்காளி என 100 படங்கள் பங்கேற்றன. அதில் இரு விருதுகளை 'பருத்தி வீரன்' வென்றது. விருது பெறும் விழாவுக்கு இ-மெயில் மூலம் என்னை அழைத்தனர். டைரக்டர் அமீருக்கும் இ-மெயில் அனுப்பி அழைத்தார்கள். அவர் வரவில்லை.

விழாவுக்கு தன்னை அழைக்கவில்லை என்று அமீர் சொல்வது சரியல்ல. இது போன்ற விழாக் களுக்கு இ-மெயில் மூலம்தான் அழைப்பாளர்கள். கேன்ஸ் பட விழாவுக்கு 'பருத்தி வீரன்' படம் அனுப்பப்பட்டது பற்றியும் அமீருக்கு இ-மெயிலில் தகவல் தெரிவித்தேன். தன்னை ஓரம் கட்டுவதாக அவர் சொல்வது நியாயமற்றது.

இது போன்ற விழாக்களுக்கு படத்தை அனுப்ப ரூ. 15 ஆயிரம் வரை செலவாகும். படத்தின் இயக்குனர், நடிகர்கள், கதை போன்ற விவரங்கள் அடங்கிய குறிப்பு புத்தகமும் தயார் செய்து அனுப்ப வேண்டும். இதையெல்லாம் சொந்த செலவில் செய்துதான் ஒவ் வொரு விழாவுக்கும் அனுப்புகிறேன்.

இத்தனையும் செய்த பிறகும் டைரக்டர் அமீரிடம் இருந்து விமர்சனம் வருவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அவர் மீது எப்போதும் மரியாதை வைத்துள்ளேன். ஓரம் கட்டவில்லை. ஒதுக்கவும் இல்லை. 'பருத்தி வீரன்' படம் பற்றிய ஒவ்வொரு தகவலும் அவருக்கு அனுப்பப்படுகிறது.

ஆசிய பட விழாவில் 'பருத்தி வீரன்' படத்தை பார்த்து விட்டு வெளிநாட்டினர் அசந்து போயினர். பிரியாமணி நடிப்பை பார்த்து இப்படியும் ஒரு பெண் இருக்கிறாரா? என்று ஆச்சரியப்பட்டனர். படத்தை அங்கு அனுப்பியதால் தானே இந்த பெருமைகள் கிடைத்தன. ஒரு ஆளாக நின்று தான் இதை செய்கிறேன்.

முந்தைய சற்றுமுன்...: தொடரும் 'பருத்தி வீரன்' பிரச்னை

மாலைமலர்

Tuesday, July 31, 2007

அரவானிகளும் கல்லூரிகளில் படிக்கலாம்: உயர் கல்வித்துறை செயலாளர்

தமிழகத்தில் இனி அரவானிகளும் கல்லூரி படிப்பைத் தொடர முடியும். இதற்கான, அரசாணை ஆகஸ்ட்டில் வெளியிடப்படும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கே. கணேசன் தெரிவித்தார்.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியது: அரவானிகளுக்கு கல்லூரிக் கல்வி மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பல காலமாக உள்ளது. அவர்களும் உயர்கல்வி பெறுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அரசாணை தயாராக உள்ளது. இது அடுத்த மாதம் வெளியாகும். எனவே இந்த கல்வியாண்டிலேயே விருப்பமுள்ளவர்கள் கல்லூரியில் பயில முடியும்.

பெயர் பிரச்னை: அரவானிகளை ஆங்கிலத்தில் Transgenders என அழைக்கின்றனர். தமிழ் மொழியில் அவர்களை 'திருநங்கைகள்' என அழைக்கலாம் என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஆனால், உயர் கல்வித் துறையில் அரவானிகளை, பால் மாறியவர்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். பால் மாறியவர்கள் என்றால், சென்னை வட்டார வழக்கில் வேறு பொருள் வரும்.

எனவே, ஆங்கிலத்தில் உள்ள Transgenders என்கிற வார்த்தையை அப்படியே மொழிபெயர்க்க முடிவு செய்துள்ளோம். இதற்கு, தமிழறிஞர்கள் உதவிட வேண்டும்.

பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது: கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் ஆண், பெண் என்ற இரு பாலினம் மட்டுமே உள்ளது. அரசு உத்தரவு மூலம், கல்லூரி சேர்க்கை விண்ணப்பங்களில் கூடுதலாக அரவானிகள் என்கிற பாலினமும் சேர்க்கப்படும்.

ஆண், பெண் இரு பாலரும் படிக்கும் கல்லூரிகளில் அரவானிகளுக்கு இடம் உண்டு. பெண்கள் கல்லூரிகளில் அவர்களுக்கு இடம் இல்லை. சேர்க்கையில் அவர்களுக்கு என்று தனியாக இடஒதுக்கீடு ஏதும் இருக்காது. தற்போது, இருக்கும் சேர்க்கை விதிமுறை அப்படியே இருக்கும். ஆண்கள், பெண்களைப் போல அரவானிகளும் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம் என்றார் கணேசன்.

தினமணி

Monday, July 30, 2007

ஆகஸ்டு 5: சென்னையில் தமிழ் பதிவர் பட்டறை

ஆகஸ்ட் 5,வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ் வலைப்பதிவர்கள் பட்டறை சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ் துறையின் அரங்கில் (மெரினா வளாகம்) நடைபெறவுள்ளது. காலை ஒன்பதரை துவங்கி மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.

கட்டணம் ஏதும் இல்லை. அழைப்பிதழ் தேவை இல்லை. இங்கு உங்கள் பெயரை முன் பதிவு செய்து கொண்டால் பட்டறையைத் திட்டமிட உதவும். குறிப்புகள் எடுக்க ஏடு, பேனா முதல் தேநீர், நன்பகல் உணவு வரை அனைத்தும் நிகழ்ச்சி அரங்கிலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கீழ்கண்ட தலைப்புக்கள் விளக்கப்படவிருக்கின்றன.

  • வலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்.
  • பதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு பிணையத்தை (network) உருவாக்குவது.
  • புதியவர்களுக்கு வலைப்பதிவு, கணினியில் தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்
  • பதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்
  • பதிவர்கள் ஒன்றிணைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.

சற்றுமுன்னில் சிறப்பு நேரடி செய்தி தொகுப்பைக் காணலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே சுட்டவும்

Monday, July 23, 2007

சிங்கைசிறையில் வாடும் தமிழர்களுக்காக தலையீடு: பாலு கோரிக்கை

சிங்கையில் விசாக்காலம் முடிந்தும் தங்கியதால் சிறையில் வாடும் தமிழர்களுக்காக மத்திய அமைச்சர் டி ஆர் பாலு வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜியிடம் அவர்களை் விடுதலையிட சிங்கை அரசிடம் தலையிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வெளியுறவு அமைச்சின் வெவ்வேறு நிலைகளில் இது பற்றி பேசி ஒரு முடிவு காணவேண்டும் என விரும்பினார். சிறைக்கைதிகளின் உறவினர்கள் பலமுறை முறையிட்டும் சிங்கப்பூரில் உள்ள இந்தியதூதரகத்திடமிருந்து திருப்திகரமான செயல்பாட்டை காணமுடியவில்லை என அவர் அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதவிர குற்றமிழைத்து தண்டனைக் காலத்தைக் கடந்தவர்களும் விடுவிக்கப் படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இது விதயமாக வெளியுறவு அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளித்துள்ளதாக அவரது அறிக்கை கூறுகிறது.
The Hindu News Update Service

Wednesday, July 11, 2007

திருப்பூரில் வைரமுத்து பிறந்த நாள் விழா: கவிஞர் தமிழச்சிக்கு விருது

ஜுலை 13 கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாள் ஆகும். இந்த நாள் வெற்றித் தமிழர் பேரவை அமைப்பின் சார்பில் கவிஞர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விழா 13-ந் தேதி மாலை 6 மணிக்கு திருப்பூரில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கவிஞர் வைரமுத்து தன் பிறந்த நாளில் கவிஞர்களைத் தேர்ந்தெடுத்து விருது வழங்குகிறார். இந்த ஆண்டு சென்னையைச் சேர்ந்த கவிஞர் தமிழச்சிக்கு ரூ.10 ஆயிரமும், பட்டயமும் கவிஞர் வைரமுத்து வழங்குகிறார்.

தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் அவ்வை நடராஜன் வாழ்த்துரை வழங்குகிறார். கவிஞர் வைரமுத்துவின் புகழ் பெற்ற படைப்புகளான கள்ளிக்காட்டு இதிகாசம் கருவாச்சி காவியம் என்ற 2 படைப்புகளின் மையக் கருத்துக்களை அடிப்படை யாகக் கொண்ட சிறப்புப் பட்டி மன்றம் நடக்கிறது.

வெற்றித் தமிழர் பேர வையின் திருப்பூர் நகரத் தலைவர் ஜீவானந்தம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்குகிறார். கணக்காயர் லோக நாதன் வரவேற்று பேசுகிறார். சிற்பி ரகுநாதன், நன்றியுரையாற்றுகிறார். விழா நிகழ்ச்சிகளை கனகலட்சுமி தொகுத்து வழங்குகிறார். விழாவில் கலந்து கொள்ள கவிஞர் வைரமுத்து நாளை மறுநாள் காலை விமானத்தில் கோவை சென்று திருப்பூர் செல்கிறார்.

மாலைமலர்

Tuesday, July 10, 2007

நீல பத்மநாபன் எழுதிய நாவலுக்கு ரங்கம்மாள் பரிசு

கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையத்தின் நிர்வாக அறங்காவல் சரத் சந்திரன் வெளியிட்ட செய்தி:

கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் இரண்டாண்டுக்கொரு முறை இந்தியாவில் வெளியாகும் சிறந்த நாவலுக்கு ரொக்கப் பரிசை 'ரங்கம்மாள் பரிசு' என்ற பெயரில் வழங்கி வருகிறது. 2005, 2006-ம் ஆண்டுகளில் வெளியான 23 நாவல்கள் இவ்வாண்டு பரிசுப் போட்டிக்கு வந்தன. அவற்றில் நீலபத்மநாபன் எழுதிய 'இலை உதிர் காலம்' என்ற நாவல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர் நீலபத்மநாபனுக்கு பரிசுத்தொகையாக ரூ.15 ஆயிரமும், நாவலை வெளியிட்ட வானதி பதிப்பகத்தினருக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. 'இலை உதிர் காலம்' நாவல் முதியோர் இல்லத்தைக் கதைக் களனாகக் கொண்டுள்ளது.

தினமணி

Saturday, July 7, 2007

லெனின் தங்கப்பாவுக்கு சிற்பி இலக்கிய விருது

சிற்பி அறக்கட்டளையின் தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்தி:

கடந்த 12 ஆண்டுகளாக பொள்ளாச்சியில் இயங்கி வரும் இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறந்த கவிஞர்களுக்கு விருதுகளும் பரிசுகளும் அளித்து வருகிறது. 2007-ம் ஆண்டுக்கான கவிதை இலக்கிய விருது ம.இ. லெனின் தங்கப்பாவுக்கு வழங்கப்படுகிறது.

'உயிர்ப்பின் அதிர்வுகள்' என்னும் அவருடைய நூல் விருதுக்கு உரியதெனத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பாவலர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வியாளர் என பல்துறை வல்லுநராகப் புதுவையில் பணியாற்றி வருபவர் தங்கப்பா. தமிழ் நலம், சுற்றுச் சூழல் மேம்பாடு, இளைஞர்களிடம் விழிப்புணர்வு முதலிய கொள்கைகளைப் பேணுவதும் வளர்ப்பதும் இவர் வாழ்வுப்பணி.

கவிஞர் சிற்பி கவிதைச் சிறப்புப் பரிசுக்கு கவிஞர் உமாமகேஸ்வரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அவருடைய 'கற்பாவை' என்னும் நூல் பரிசு பெறுகிறது. பெண் கவிஞர்களில் ஒரு தனித்த பார்வையும் நடையும் இவருக்கு உண்டு.

ரூ. 15 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது இலக்கிய விருது. ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கொண்டது கவிதைச் சிறப்புப் பரிசு. பரிசளிப்பு விழா ஜூலை 29-ல் பொள்ளாச்சியில் நடைபெறுகிறது.

தினமணி

Wednesday, June 20, 2007

தமிழில் எஸ்.எம்.எஸ்.: இணையப் பல்கலைக்கழகம் திட்டம்

மொபைல் போன்களில் தமிழில் எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல்) அனுப்பும் புதிய வசதிக்கான முயற்சியில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக மொபைல்போன் சாதனங்களில் தற்போதுள்ள ஆங்கில எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களைப் பதிவு செய்வதற்கான சாஃப்ட்வேரை வடிவமைக்க உள்ளது.

இதற்கான தமிழ் விசைப் பலகையை அமைப்பது தொடர்பாகத் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இப்பணியில் ஈடுபட்டுள்ள அக்குழு சுமார் மூன்று மாதங்களில் தனது ஆய்வறிக்கையை அரசுக்கு அளிக்க இருக்கிறது.

இதன்படி 1 என்ற எண்ணுள்ள விசையில் குறைந்தது 3 ஆங்கில எழுத்துகளுக்கு இடமிருக்கும். அதே விசையைப் பயன்படுத்தி மூன்று தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

உதாரணத்துக்கு "2' என்ற எண்ணுள்ள விசையில் "ஞ, ட, ண' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "4' என்ற எண்ணுள்ள விசையில் "ம, ய, ர' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம். "5' என்ற எண்ணுள்ள விசையில் "ல, வ, ழ' என்ற எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு முழுமையான தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யும் முறை அமலுக்கு வந்த பின், மொபைல் சேவைகளில் ஈடுபட்டுள்ள பி.எஸ்.என்.எல்., "ஏர்டெல்' போன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

கோட்டூர்புரத்தில் புதிய கட்டடம்: தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துக்கு கோட்டூர்புரத்தில் இரண்டு ஏக்கர் நிலப் பரப்பில் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. மொத்தம் ரூ. 2 கோடியில் அமைக்கப்படும் இந்த வளாகத்தில் 10 ஆயிரம் சதுர அடிப் பரப்பில் மூன்று மாடிக் கட்டடம் கட்டப்படும்.

அதில், மாநாட்டு அரங்கம், இணையவழிக் கல்விக்கான ஸ்டுடியோ, "அப்லிங்க்' செய்வதற்கான வசதி அமைக்கப்படும். இங்கிருந்து விடியோ கான்பரன்சிங் முறையில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

வகுப்புகளைப் பொருத்த வரையில் விரிவுரையாளர் நடத்தும் வகுப்பை உலகின் எந்த மூலையிலிருந்தும் உடனுக்குடன் கேட்டு அறிந்து கொள்ளலாம். அல்லது, அதை கம்ப்யூட்டரிலோ "லேப் டாப்பிலோ' பதிவு செய்து, தேவைப்படும்போது போட்டு, பாடத்தை அறிந்து கொள்ளலாம். சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் வசதி உண்டு. அல்லது இணையதளத்தில் "சாட்டிங்' முறையிலும் சந்தேகத்தை உடனுக்குடன் கேட்டு, தெளிவு பெறலாம்.

இதற்காக "ஸ்ட்ரீமிங் வெப் சர்வர்' என்ற "சர்வர்' வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சி.டி.யில் திருக்குறள்: திருக்குறளின் ஐந்து உரைகளுடன் இரு ஆங்கில மொழி பெயர்ப்புகளுடன் குறுந்தகடுகளை இணையப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. உலக அளவில் திருக்குறளைப் பரப்பும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இணையப் பல்கலைக்கழகம் தற்போது, 137 நாடுகளில் உள்ளவர்களுக்காக தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. அவர்களுக்கு முழு அளவில் பயன்படும் வகையில் மேலும் பாடத் திட்டத்தையும், வகுப்புகளை நடத்தும் முறையையும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி

Sunday, June 17, 2007

தைலாபுரம் நிகழ்ச்சிகளின்: குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம், குற்றால குறவஞ்சி இசை குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடந்தது.

முதல்-அமைச்சர் கருணாநிதி சிலப்பதிகார இசைகுறுந்தகடை வெளியிட இசைஅமைப்பாளர் எம்.எஸ்.விசுவநாதன் பெற்றுக்கொண்டார். குற்றால குறவஞ்சி குறுந்தகடை பேராசிரியர் திருமுருகன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தைலாபுரம் நிகழ்ச்சிகளை குறுந்தகடாக்கி வெளியிட்டு இருக்கிறார்கள். அதையும் நாமும் கண்டு மகிழ்ந்தோம். குற்றால குறவஞ்சி, சிலப்பதிகாரம், பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை இசைபடையாக பொழிந்ததை கண்டோம்.

பொங்கல் தினத்தில் தைலாபுரம் தோட்டதில் நடந்த நிகழ்ச்சிகளை கண்ட போது எனக்கும் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. ஏனென்றால் எனக்கு அப்படி ஒரு தோட்டம் இல்லையே என்று. தைலாபுரம் என்ற பெயரை தமிழார்வபுரம் என்று மாற்றுங்கள். இந்த கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றினால் உங்கள் கோரிக்கை நிறை வேற்றப்படும்.

தமிழ்மீதும், தமிழர் கலை யின் மீதும், தமிழ் இசை மீதும் உங்களுக்குள்ள ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். போற்றுகிறேன் கொங்கு தமிழ்வளர்ச்சி அறக்கட் டளை முதல் பல்வேறு நிகழ்ச்சிகளை நான் தொடங்கி வைத்து இருக் கிறேன். எதையும் முடக்கி வைத்து பழக்கம் இல்லை. அது தொடர்கிறது.

தமிழனுக்கு இசை உண்டு அது மறைந்து போகும் நிலை வந்த போது ராஜாஅண்ணாமலை செட்டி யார் போர்க்கோலம் பூண்டு தமிழ் இசையை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.ராஜாஜி கல்கி போன்றோரும் அதற்காக பாடுபட்டனர்.

இந்த உலகத்தில் தமிழ் நாட்டில்தான் தாய் மொழியை தமிழாக கொண்டு வேறு மொழியில் பாடுகிறார்கள் என்று ஆர்.கே. சண்முகம் செட்டியார் கூறி இருக்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்த தியாகராயர் அவரது தாய் மொழியான தெலுங்கில் பாடல் பாடியுள்ளார். எனவே தாய் மொழியை மதிக்க வேண்டும் என்று ராஜாஜி கூறி உள்ளார்.

தமிழர்களுக்கு என்று ஒரு இசை இல்லை என்ற நிலை இருக்ககூடாது. டாக்டர் ராமதாஸ் சுட்டி காட்டியபடி சீர்காழி மூவ ருக்கு மணி மண்டபம் உட னடியாக கட்டப்படும். மற்ற கோரிக்கைகளையும் நானே எழுப்பியதாக கருதி நிறை வேற்ற முயற்சி செய்வேன் அதற்கு தாங்களும் உறு துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனர்டாக்டர் ராமதாஸ் சிறப்புரை யாற்றினார். அவர் கூறியதாவது:-

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக இசைத்தமிழை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இளைஞர் சமுதாயமும் இதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதுதான் நோக்கம்.

கடந்த 4 ஆண்டுகளாக தைலாபுரம் தோட்டத்தில் பொங்கல் தினத்தை யொட்டி 3 நாட்கள் பழந்தமிழ் கலைகளை ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக நடத்தி வருகிறோம். அதில் மகள், மருமகள், பேரன், பேத்திகள் பங்கேற்று வருகிறார்கள். அந்த நிகழ்ச்சியை நீங்களும் இங்கு காட்சியாக ரசித்தீர்கள்.

மற்றவர்களுக்கும் இது போன்ற ஆர்வம் வரவேண்டும் என்பதற்காக அதை உங்களுக்கு காட்டினோம்.

தற்போது தமிழ்நாட்டில் சரியான தமிழை பேசினால் முகம் சுளிக்கிறார்கள். ஆங்கிலம் கலந்து பேசும் போதுதான் மகிழ்கிறார்கள். சங்கர் என்ற பெயரை ஷங்கர் ஆக்கி விட்டார்கள். பல தமிழ் பெயர்கள் மாறி வருவதால் ஆங்கில கலப்பு இல்லாமல் பேசினால் தமிழ் வெறியன் என்கிறார்கள். புதுச்சொல்லை அறிமுகப்படுத்தும் போது கிண்டலும், கேலியும் வருகிறது. தமிழ்நாட்டில் தான் இந்த நிலை இருக்கிறது.

முதல்வரை அழைத்து தமிழ் பண்ணிசையை தொடங்கினோம். அதை மீட்டு எடுக்க வேண்டும் நாங்கள் எதை செய்தாலும் தமிழை, முத்தமிழை அழைக்காமல் செய்வதில்லை. இது வெறும் புகழ்ச்சி வார்த்தை அல்ல தமிழில் 11 ஆயிரத்து 991 பண்கள் இருந்ததாக சொல்கிறார்கள். தற்போது 43 ஆக குறைந்து விட்டது. சீர்காழி மூவருக்கு மண்டபம் அமைப்பதற்காக 11 கிரவுண்ட் நிலம் ஒதுக்கி கலைஞர் அடிக்கல் நாட்டினார். ஆட்சி மாற்றம் வந்ததால் இன்று வரை அது நிறைவேற வில்லை. இனி அதை நிறைவேற்றுங்கள் வில்லை. தமிழ்நாட்டில் 17 இசைப்பள்ளிகள் உள்ளன. அவற்றுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். 4 இசைக்கல்லூரிகளில் பாடங்கள் முறையாக அமைக்கப்பட வேண்டும். சென்னையில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக யாழ்வடிவில் ஒரு அரங்கம் அமைக்க வேண்டும். அது அடையாள சின்னமாக இருக்க வேண்டும்.

தமிழ் மொழியில் முனைவர் பட்டம் பெறும் சிலருக்கு தமிழை உச்சரிக்க கூட தெரியவில்லை எனவே தமிழில் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல சிறப்பான தேர்வு நடத்தி தஞ்சை தமிழ் பல்கலைகழகம் மூலம் தான் பட்டம் அளிக்கவேண்டும்.

இந்திய அரசியல் உங்கள் கைகளில் தான் இருக்கிறது. 2,3 நாட்கள் டெல்லியில் தங்கி இருந்து சாதித்துவிட்டு வந்து இருக்கிறார்கள். தமிழ் உள்பட நாட்டினில் உள்ள 18 மொழிகளும் ஆட்சி மொழியாக வேண்டும். அதையும் சாதிக்கும் ஆற்றல் உங்களுக்குத்தான் உண்டு. அது நிறைவேறினால் தமிழ் அரியணை ஏறும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

நிகழ்ச்சியில் மத்திய மந் திரிகள் ராசா, அன்புமணி, வேலு, அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி, கனிமொழி, தயாளு அம்மாள் கவிஞர்கள் வைரமுத்து, அப்துல்ரகுமான், சு.ப.அறவாணன், மற்றும் பாலசுப்பிரமணியம், நடராச பிள்ளை, ஏவிஎம் சரவணன் உள்படபலர் கலந்து கொண் டார்கள்.

முன்னதாக சவுமியா அன்புமணி வரவேற்றார். முதல்-அமைச்சர் கருணா நிதிக்கு கண்ணகிசிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பல்வேறு கலைஞர்களுக்கு கருணாநிதி நினைவு பரிசு வழங்கினார். டாக்டர் ராமதாசின் பேத்தி சங்கமித்ரா நன்றி கூறினார்.

பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிலப்பதிகாரம்: இசை குறுந்தகடு கருணாநிதி வெளியிட்டார்: மாலைமலர்

Saturday, May 26, 2007

தமிழறிஞர் படைப்புகள் நாட்டுடமை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி
இருபது தமிழறிஞர்கள்; படைப்பாளிகளின் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதற்காக அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. ஒரு கோடியே எண்பது இலட்சம் பரிவுத்தொகையாக வழங்கப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அரசு, இதற்கு முன்னரும் பதினாறு தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு ஒரு கோடியே, இருபத்து மூன்று இலட்சம் ரூபாய் மரபுரிமையர்களுக்கு வழங்கியுள்ளது.

இச்சமயம் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களில், கி.வா.ஜ, பேராசிரியர் அ.ச.ஞா, கி.ஆ.பெ, திருக்குறள் முனுசாமி, கவிஞர் சுரதா, கவிஞர் மருதகாசி, குன்றக்குடி அடிகளார், சாவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாலைமலர்

Tuesday, May 15, 2007

தமிழ்ப் பாடத்தில் முதலிடம் பிடித்த மாதவன்

கரூர் வெண்ணெய்மலை அருகேயுள்ள சேரன் மெட்ரிக் பள்ளி மாணவர் எஸ்.மாதவன் பிளஸ் 2 தமிழ்ப் பாடத்தில் 196 மதிப்பெண்கள் பெற்றதன் மூலம் மாநில அளவில் முதலிடம் பிடித்தார்.

எஸ். மாதவன் கூறியது:
"எஸ்எஸ்எல்சி தேர்வில், தமிழ்ப் பாடத்தில் பள்ளி அளவில் முதலிடம் பிடித்தேன். தமிழ்ப் பாடத்தில் ஆர்வம் அதிகம் உண்டு. இதற்கு ஆசிரியர்கள், பெற்றோரும் காரணம். அடுத்து மருத்துவம் பயின்று, ஏழைகளுக்குச் சேவை செய்வேன்."

Dinamani

Tuesday, May 8, 2007

தமிழில் நேரடி கிரிக்கெட்- ராஜ் .டி.வி ஒளிபரப்புகிறது

இந்தியா - வங்கதேசத்துக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் ராஜ் டி.வியில் தமிழ் வர்னணையோடு ஒளிபரப்பப்படவுள்ளது என ராஜ் டி.வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமலர்

Monday, May 7, 2007

ச: கல்லூரிகளில் தமிழ் புறக்கணிப்பு - தமிழாசிரியர்கள் கவலை

திருச்சி, மே 7-

மொழிக் கொள்கைக்கு எதிராக கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் பண்பாட்டை கற்பிக்கவும், அவர்களின் அறவியல், கலைத் திறனை வளர்ப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு கல்லூரிகளில் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. இதன்படி தன்னம்பிக்கை, நாட்டுப் பற்று, சமூக சீர்திருத்தம் ஆகியவற்றை வலியுறுத்தி திருமூலர், திருவள்ளுவர், பாரதி, பாரதிதாசன் முதல் தற்போதைய இலக்கியவாதிகளின் படைப்புகள் வரை பாடமாக வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொலை தூரக் கல்வி மையம் மூலம் இளநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழ்ப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதில் கல்லூரிகளில் சேர்ந்து படிப்போருக்கு ஒரு பருவத்துக்கு (செமஸ்டர்) ஒன்று என மொத்தம் 4 தாள்களும், தொலை நிலைக் கல்வி மையம் மூலம் படிப்போருக்கு ஆண்டுக்கு ஒரு தாள் என இரண்டும் தமிழ்த் தாள்கள் இருக்கும். கல்லூரிகளில் 90 வேலை நாட்களுக்கு 90 மணி நேரம் தமிழ்ப் பாடங்கள் நடத்தப்பட்டு, நான்கு பருவத்துக்கும் மொத்தம் 360 மணி நேரம் தமிழ்ப்பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும்.

ஆனால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சில ஆண்டுகளாக இளநிலை வணிகவியல் (பி.காம்) பட்டப் படிப்பு மாணவர்களுக்கு முதல் ஆண்டு மட்டும் போதும். அதுவும் இலக்கண இலக்கியங்களைப் பயிற்றுவிக்க தேவையில்லை என்று முடிவு செய்து ‘வணிகத் தமிழ்Õ என்று ஒரு தாள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பின்னர் தொலை நிலைக் கல்வி மையம் மூலம் கற்பிக்கப்படும் குறிப்பிட்ட சில பட்டப் படிப்புகளுக்கும் இதே நடைமுறையை தொடர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து மனோன்மணியம் சுந்தரனார், பெரியார் பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக இணைவு பெற்ற சில தன்னாட்சி கல்லூரிகளில் பி.காம் மற்றும் பி.எஸ்சி கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு முதலாண்டு மட்டுமே தமிழ்ப்பாடங்கள் தற்போது நடத்தப்படுகின்றன.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள சில கல்லூரிகளில் 8 பட்டப் படிப்புக்களுக்கு தமிழ்ப் பாடம் முதல் ஆண்டு மட்டுமே கற்பிக்கப்படுகிறது. இந்த தமிழ் புறக்கணிப்புக்கு விருப்ப பாட தேர்வு புள்ளி முறை (சாய்ஸ் பேஸ்டு கிரடிட் சிஸ்டம் - சி.பி.சி.எஸ்) எனும் முறையை சாதுர்யமாக பயன்படுத்தியுள்ளனர். இதையே தமிழகம் முழுவதும் சில தன்னாட்சி கல்லூரிகள் பின்பற்ற தொடங்கியுள்ளன. இது போன்ற முறை தொடர்வது நல்லதல்ல என்கின்றனர் பேராசிரியர்கள்.

- மாலை முரசு

-o❢o-

b r e a k i n g   n e w s...