.

Wednesday, June 27, 2007

அப்துல்கலாம்: ராஷ்ட்ரபதி பவனிலிருந்து பாரதியார் பல்கலைகழகத்துக்கு!

"கோவை பாரதியார் பல்கலைகழகத்தியல் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப மையத்தில் பணியாற்ற, ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்பப்படும்,'' என துணைவேந்தர் திருவாசகம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அப்துல் கலாமின் பதவி காலம் அடுத்த மாதத்துடன் முடிகிறது. இரண்டாவது முறையாக, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட, அப்துல் கலாம் மறுத்துள்ளதால், பெரிய பல்கலைக்கழகங்களில் பணியாற்ற, அவருக்கு அழைப்புகள் குவிந்து வருகிறது. கோவை, பாரதியார் பல்கலைகழகமும் அப்துல் கலாமை பணியாற்ற அழைக்கிறது.

பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:பல்கலைகழகத்தின் வெள்ளிவிழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அப்துல் கலாம், "நானோ' தொழில்நுட்ப மையம் அமைக்க உதவ, முதல்வர் கருணாநிதியை கேட்டுக்கொண்டார். ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று, முதல்வரும், "நானோ' தொழில்நுட்ப மையத்தின் ஆரம்ப கட்ட பணிகளுக்காக, ரூ.ஒரு கோடி ஒதுக்கினார். மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ரூ.18.8 கோடியை வழங்கியுள்ளது. இதில், 4.9 கோடியில், "சென்டர் பார் லைப் சைன்ஸ்' கட்டடமும், ரூ.14 கோடியில் நவீன கருவிகளும் அமைக்கப்படுகிறது.

இம்மையத்தின் திறப்பு விழா, ஆகஸ்ட்டில் நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு அழைப்பு அனுப்பப்படும். ரூ.500 கோடி திட்டத்தின் முதல் கட்டத்தில், "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தின் முதல் கட்ட பணிகள், ரூ.100 கோடியில் மேற்கொள்ளப்படுகின்றன.

பாரதியார் பல்கலைகழகத்தில் அமைக்கப்படும் "நானோ' தொழில்நுட்ப வசதி மையத்தில், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பின் விஞ்ஞானியாக பணியாற்ற, அப்துல் கலாமுக்கு அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான முறைப்படி அழைப்பு, விரைவில் அனுப்பப்படும். முழு நேரம் இங்கு பணியாற்றாவிட்டாலும், "விசிட்டிங் சயின்டிஸ்ட்'ஆக பணியாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.

இந்தோனேசியா: இன்று நிலநடுக்கம் 6 ரிக்டேர் அளவு.

சுனாமி பீதியில் பொதுமக்கள் ஓட்டம்

இந்தோனேஷியாவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், அதை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி பேரலைகள் இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பறித்தது. இந்த பேரழிவுக்கு பிறகு அவ்வப்போது இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை இந்தோனேஷியாவின் ஜாவா தீவின் தெற்கு கடலோரத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவாக பதிவானது. கடற்கரையில் இருந்து 358 கி.மீ. தென்மேற்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் குலுங்கின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. ஆனாலும் மீண்டும் சுனாமி பேரலைகள் உருவாகும் என்ற பீதியில் பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறி அடித்துக்கொண்டு மேடான பகுதிகளை நோக்கி ஓடினார்கள். ஒருசில வீடுகள் இடிந்து விழுந்தன.

ஆனாலும் உயிர் சேதம் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. இதே போல பிலிப்பைன்சிலும் இன்று அதிகாலை நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.6 ரிக்டர் அளவில் பதிவானது. கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் மத்திய சான்டோஸ் நகரில் இருந்து தென்மேற்கே 80 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்தது.

இந்த நில நடுக்கத்தால் மணிலா உள்பட பல இடங்களில் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது. சான்தோஸ் நகரில் அடுக்கு மாடி ஓட்டல்களில் தங்கி இருந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்தபடி ஓட்டம் பிடித்தனர். இதில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம்: நவீன பாதுகாப்பு ஏற்பாடுகள்.

சென்னை விமான நிலையத்துக்கு நவீன தொழில் நுட்பத்துடன் புதிய முறையில் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் ஒப்புதலுக்காக இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது.

புதிய பாதுகாப்பு முறைப்படி சென்னை விமான நிலையத்தின் வெளிப்பகுதி, விமான நிலைய சுற்றுப்புற வேலி, பயணிகள் வந்து போகும் பகுதி, விமான நிலைய ஊழியர்கள் இருக்கும் பகுதி, விமான பொருட்கள் வைக்கப்படும் பகுதி, வந்து போகும் வாகனங்களை கண் காணிக்கும் பகுதி என 6 விதமாக பிரிக்கப்படும்.


இந்த பகுதிகள் நவீன தொழில் நுட்பத்துடன் கணிப்பொறி மூலம் கண்காணிக்கப்படும். இதற்காக விமான நிலையத்தின் முக்கிய 60 இடங்களில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

இதன் மூலம் விமான நிலையத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நடமாடும் மனிதர்கள், மிருகங்கள், சந்தேகத்துக்கு இடமான பொருட்கள் ஆகியவற்றை உடனுக்குடன் கண்டு பிடிக்க முடியும். தேவையானவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க முடியும். கட்டுப்பாட்டு அறையில் இருந்தே விமான நிலையத்தின் அனைத்துப் பகுதிகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும்.

விமான நிலைய ஊழியர்களுக்கு வானொலி அலை தொழில்நுட்பம் கொண்ட அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான ஊழியர்கள் தவிர யாரும் விமான நிலையத்தின் முக்கிய பகுதிகளுக்கு செல்ல முடியாது.

இது போல பயணிகள், வாகனங்கள் ஆகியவற்றையும் குறிப்பிட்ட தூரத்தில் நிறுத்துவதற்கான நவீன கருவிகளும் பொருத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்கான அனைத்து நவீன தொழில்நுட்ப கருவிகளையும் அமைக்க ரூ. 100 கோடி வரை செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது.

இந்த நவீன முறை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்போது ஒரே இடத்தில் இருந்து விமான நிலையம் முழுவதுக்கும் நவீன முறையில் துல்லியமான பாதுகாப்பு அளிக்க முடியும். இந்த ஆண்டு இறுதிக்குள் இது நிறைவேற்றப்படும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரி விக்கின்றன.

மேற்கு வங்கம்: வரன் தேடும் பெண் எம்.எல்.ஏ

மேற்கு வங்காள மாநிலம் குமார்கஞ்ச் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்படவர் மபூசாகாதுன். இந்த பெண் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். 2 தடவை எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் இவருக்கு இப்போது 33 வயது ஆகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை.

இதுவரை திருமணத்தை பற்றி நினைக்காத மபூசா இப்போது திருமணம் செய்து கொள்ள சம்மதித்து இருக்கிறார். அதுவும் அவர் உறவினர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்துக்கு சம்மதித்து இருக்கிறார்.

இவரது சகோதரர் சமீபத்தில் இறந்து விட்டார். சகோதரரின் ஆதரவால் வளர்ந்த மபூசா மிகவும் மனம் சோர்ந்து போய் விட்டார். அவருக்கு ஒரு துணை தேவை என்பதை உணர்ந்த உவினர்கள் அவரை திருமணத்துக்கு வற்புறுத்தினார்கள். பத்திரிகைகளில் விளம்பரமும் கொடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் வாங்க வேண்டும். 40 வயசுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். டாக்டர், அல்லது போலீஸ் அதிகாரி அல்லது பேராசிரியராக இருக்கலாம். ஏற்கனவே திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தெரிவித்து இருக்கிறார். ஆனாலும் இன்னும் வரன் அமையவில்லை.

இதுபற்றி மபூசாவின் உறவினர்கள் கூறும் போது, நல்ல வரனாக கிடைத்தால் அரசியலுக்கு முழுக்கு போடவும் மபூசா தயார். முழு நேர குடும்பத் தலைவியாக அவர் வாழ்க்கையை தொடங்குவார் என்று தெரிவித்தனர்..

உலகின் நீளமான கடற்பாலம்.

உலகிலேயே மிக நீளமான கடல் பாலம் சீனாவில் கட்டப் பட்டுள்ளது. இந்த பாலம் முறைப்படி இன்று திறந்து வைக்கப்பட்டது. இதன் நீளம் 36 கி.மீ. ஆகும். தொழில் நகரங்களான ஷாங்காய் நகரையும் நிங்க்போ நகரையும் இந்த பாலம் இணைக்கிறது.

முன்பு இந்த இரு நகரங்களுக்கு இடையே உள்ள தூரம் 400 கிலோ மீட்டராக இருந்தது. இந்த பாலத்தின் வழியாக செல்லும் போது 80 கி.மீ. பயணம் செய்தாலே போதும் ரூ.8 ஆயிரத்து 400 கோடியில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது

செய்தி ஆதாரம்: மாலைமலர்

"படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது."

கடலூர் புனித வளனார் கல்லூரி பயிற்சி அரங்கில் நடந்த விழாவுக்கு அந்தோணிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அரசு வக்கீல் சார்லஸ் ராஜ் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை மத்திய மந்திரி வேங்கடபதி தொடங்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது:-

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது. பிரதமர் மன்மோகன்சிங் நல்ல சிந்தனையாளர். மனித உரிமைகளை மதிப்பதில் தமிழகம் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது.

இந்த 21-ம் நூற்றாண்டில் மனிதத் தன்மை குறைந்து விட்டது. நாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் பண்பாடு இல்லை. பண்பாடு இல்லாததால் தான் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது.

பல வங்கிகள் மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி கடன் கொடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். இதுவும் மனித உரிமை மீறல்தான். படித்தவர்களிடம் குற்றம் செய்யும் மனப்பான்மை அதிகரித்து விட்டது. அதனால் தான் இன்று சைபர் கிரைம் கண்காணிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும். இளைஞர்கள் கல்வி கற்பது குறைந்து போனால் அது நாட்டின் வளர்ச்சிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். இன்று பெண்கள் கல்வியில் உயர்ந்து நிற்கிறார்கள்.ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியவர்கள் உரிமை மீறலில் ஈடுபட்டவர்கள் என்ன ஆனார்கள் என்பதற்கு கடந்த கால வரலாறு சான்றாக உள்ளது. பெண் உரிமை, குழந்தைகள் உரிமை, மக்கள் உரிமை, தொழிலாளர்கள் உரிமைகள் குறித்து இப்போது தான் நம் நாட்டில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அனைத்து மக்களும் அன்போடு வாழ மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சென்னையில் மீண்டும் ரவுடி வேட்டை: 100 பேர் கைது

சென்னை நகரில் கடத்தல், வழிப்பறி, கலாட்டா, திருட்டு ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை நகர் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடி அதிரடி வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து ரவுடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1000க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டு பிடிபடாமல் இருக்கும் தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியலை அந்தந்த பகுதி போலீசார் தயாரித்து அவர்களை தேடி கண்டு பிடிக்குமாறு கமிஷனர் லத்திகாசரண் மீண்டும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தலை மறைவு குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி இணை கமிஷனர்கள் ரவி (வடசென்னை), துரைராஜ் (தென்சென்னை), பாலசுப்பிரமணியம் (மத்திய சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் நடந்தது.

வடசென்னையில் 27 பேரும், மத்திய சென்னையில் 51 பேரும், தென்சென்னையில் 24 பேரும் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளான இவர்கள் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள், கைதாணை பிறப்பித்தும் பிடிபடாமல் இருந்து வந்தனர். தொடர்ந்து ரவுடிகள் வேட்டை நடக்கிறது

'ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும்'

பிரதிபா பாட்டீலும், ஷெகாவத் இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்திருப்பதால் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலை இரு ஷெகாவத்துக்களுக்கு இடையேயான மோதலாக எடுத்துக் கொள்ளலாமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு பைரோன் சிங் ஷெகாவத் பதிலளித்தார்.

'பிரதிபா, ஒரு ஷெகாவத் அல்ல' என்று கூறியுள்ள பைரோன் சிங் ஷெகாவத், 'அவருக்கு எதிராக நான் இதுவரை எதுவும் கூறவில்லை; இனிமேலும் கூறப்போவதில்லை. யாராவது அவரைப் பற்றி குறை கூறினாலும் அதை நான் கண்டு கொள்ளப்போவதும் இல்லை. நான் இவ்வாறு நடந்த கொள்வதற்கு அவர் ராஜபுத்திர இனத்தைச் சேர்ந்தவர் என்பது காரணமல்ல; அவர் பெண் என்பதே காரணம்' என்றார்.

எனினும், இத் தேர்தலை ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக வர்ணித்த காங்கிரசுக்கு நன்றி தெரிவித்த ஷெகாவத், 'இது ஷெகாவத் சமூகத்துக்கு பெருமை சேர்த்திருக்கிறது. ஒரு ஷெகாவத்தால் மட்டுமே மற்றொரு ஷெகாவத்துக்கு எதிராக போட்டியிட முடியும் என்பதற்கு இதுவே சான்று' என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஷெகாவத் சமூகத்தைச் சேர்ந்த தேவி சிங் ஷெகாவத்தை பிரதீபா திருமணம் செய்திருக்கிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் பிரதிபா பாட்டீல் குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, இத் தேர்தல் இரண்டு ஷெகாவத்துகளுக்கு இடையேயான போட்டியாக இருக்கப் போகிறது என பிரதிபா அறிவித்தார்.

தினமணி

நடிகை விஜயசாந்தி மீது வருமான வரித்துறை வழக்கு

தெலுங்கிலும், தமிழிலும் பிரபலமாக இருந்த நடிகை விஜயசாந்தி. நடிப்பு வாய்ப்பு மங்கத் தொடங்கியபோது தலி தெலுங்கானா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயசாந்தி.

2002-03, 2003-04ம் ஆண்டுகளுக்குரிய வருமான வரிக் கணக்கை விஜயசாந்தி தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றத் தடுப்பு நீதிமன்றத்தில் வருமான வரித்துறை விஜயசாந்தி மீது வழக்கு தொடர்ந்தது.

இதுதொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் பலமுறை நோட்டீஸ் அனுப்பியது. இருப்பினும் அவருக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி விஜயசாந்தி நேரில் ஆஜராகவில்லை.

நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிரேம்குமார் முன்பு ஆஜரான விஜயசாந்தியின் வக்கீல் விஜயசாந்தியால் நேரில் வர முடியவில்லை என்று சில காரணங்களைக் கூறினார்.

விஜயசாந்தி. இப்போது தனி தெலுங்கானா மாநிலத்திற்கான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதி, வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி கண்டிப்பாக விஜயசாந்தி ஆஜராக வேண்டும் என்று கூறி விசாரணையை அன்றைய தினத்திற்கே ஒத்திவைத்தார்.

ஸ்ரீலங்கா: 20 கிலோ வெடிகுண்டு - 300 பேர் கைது.

20 கிலோ வெடிகுண்டு ஒன்று எண்ணெய் கிடங்கு அருகே காணப்பட்டதையடுத்து இலங்கை காவல்துறை சுமார் 300 பேரை விசாரணைக்காக கையகப்படுத்தியது.

அவர்களில் 100 பேர் மேல் விசாரணைக்காக கொண்டுச்செல்லப்பட்டனர்

இந்தச் செய்திக்கு...பி/டி/ஐ

இந்தியன் விமானத்தில் மயங்கி விழுந்த பயணிகள்

இந்தியன் ஏர்லைன்சின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ஏடிஆர்-42 ரக விமானம் கொல்கத்தாவில் இருந்து அகர்தலாவுக்கு கிளம்ப இருந்தது. அப்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து ரிப்பேர் வேலைகள் நடந்தன.

இதைத் தொடர்ந்து 44 பயணிகளுடன் அந்த விமானம் ரன் வேயில் ஓட ஆரம்பித்தது. அப்போது விமானத்தின் உள்ளே கடும் வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து பயணிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சிலர் மயங்க ஆரம்பித்தனர்.

இதைத் தொடர்ந்து விமான சிப்பந்திகள் ஆக்ஸிஜன் மாஸ்குகளை பயணிகளுக்குப் பொறுத்தினர். இது தாற்காலிகமான பிரச்சனை தான், விமானம் பறக்க ஆரம்பித்ததும் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிய விமானி விமானத்தை தொடர்ந்து இயக்கினார்.

ஆனால், பறக்க ஆரம்பித்த பிறகும் நிலைமை சீரடையவில்லை. பயணிகள் நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து விமானம் திரும்ப தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர்.

ஆனால், அதற்குள் பல பயணிகளின் நிலைமை மோசமாகிவிட்டது. பலரால் நடக்கக் கூட முடியவில்லை. இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுக்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தன.

22 வயது பெண்ணும், 12 வயது சிறுவனும் மயக்கமடைந்துவிட்டனர். இதையடுத்து அவர்கள் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.

நீண்ட நேரத்துக்குப் பின் விமானத்தில் கோளாறு சரி செய்யப்பட்டு 42 பயணிகளுடன் அந்த விமானம் மீண்டும் கிளம்பிச் சென்றது.

விமானத்திற்குள் காற்று அழுத்தத்தை சீராக வைக்கும் கருவியில் கோளாறு ஏற்பட்டதால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகத் தெரிகிறது

ஜெ மீது விரைவில் நடவடிக்கை: தேர்தல் ஆணையர்

கடந்த 2001ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலின்போது ஆண்டிப்பட்டி, புவனகிரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இது அப்பட்டமான விதிமீறல் ஆகும். 2 தொகுதிகளில் போட்டியிடுவதை மறைத்துவிட்டு மற்ற 2 தொகுதிகளில் மனு தாக்கல் செய்திருந்தார் ஜெயலலிதா.

இதை எதிர்த்து திமுக எம்பி குப்புசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் அதிகாரிகளிடம் பொய்யான உறுதிமொழிகளை ஜெயலலிதா கொடுத்திருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதராங்கள் உள்ளதாக கூறியது.

6 வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜெயலலிதா 3வதாக புவனகிரியிலும், 4வதாக புதுக்கோட்டையிலும் போட்டியிட்டது தவறு. அந்த தொகுதிகளில் தேர்தல் அதிகாரிகளாக பணிபுரிந்தவர்கள் அந்த தொகுதி மாஜிஸ்திரேட்டிடம் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

இதுவரை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என விசாரித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில்,

ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு இன்னும் எனக்கு வரவில்லை. அந்த உத்தரவு கடிதம் மூலம் வரலாம் என கருதுகிறேன்.

தேர்தல் ஆணையத்தின் கடிதம் கிடைத்ததும், அதில் கூறியுள்ளபடி செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படும் என்றார்.

போதிமரம் வெட்டப்பட்டதா? - ஆய்வு

புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் கிளை கடந்த ஆண்டில் வெட்டப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இது குறித்த துறைசார் வல்லுநர் ஆய்வொன்றிற்கு பிகார் அரசு ஆணையிட்டுள்ளது.

Experts to conduct test on Mahabodhi tree - Zeenews
Experts to conduct test on Mahabodhi tree Times of India
FIR filed against ‘damage’ to Bodhi tree Hindu

எச் ஐ வி பாதித்த குழந்தைகளுக்கு பள்ளியில் தடை

கேரளாவில் பாம்படை என்னும் இடத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் எச் ஐ வி (HIV) வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் அவரகளோடு பள்ளி வரும் இரு குழந்தைகளும் படிக்கத் தடை வந்துள்ளது. ஆசா கிரண் எனும் சமூக சேவை நிறுவனத்தின் கவனிப்பில் இருந்து வரும் மூன்று குழந்தைகளுக்கு 2006 டிசம்பரில் எச் ஐ வி வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இம்மூவரையும் ஆசா கிரணிலிருந்து பள்ளி வரும் மற்றும் இரு குழந்தைகளையும் பள்ளியிலிருந்து நிர்வாகம் விலக்கியது. பின்னர் அரசாணைக்குப்பின் மீண்டும் இவர்கள் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

தற்போது இவர்களை பள்ளியில் சேர்த்தால் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை என பிற குழந்தைகளின் பெற்றோர்கள் போராடி வருகிற நிலையில் இந்த ஐந்து குழந்தைகளின் நிலமையும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

கூகிள் செய்திகள்

NGO won't send HIV+ kids to schoolCNN-IBN, India
HIV positive children face boycott in school Frontline, India
HIV kids face boycott in Kerala schoolThe Tribune, India

வேளாண்மை விஞ்ஞானி எம் எஸ் சாமிநாதனுக்கு சாஸ்திரி விருது

2006க்கான லால்பகதூர் சாஸ்திரி விருது பிரபல வேளாண்துறை விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதனுக்கு வழங்கப்பட உள்ளது. இவ்விருது வணிகம், மேலாண்மை, கல்வி போன்ற துறைகளில் சிறப்பு எய்தியவர்களுக்கு வழங்கப் படுகிறது. மறைந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளன்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் சன்மானமும் புகழுரையும் ஒரு நினைவுத்தட்டும் கொண்டது.

The Hindu News Update Service

முத்திரைத்தாள் வழக்கிலிருந்து மூன்று காவல் அதிகாரிகள் விடுதலை

முன்னாள் மும்பை போலிஸ் கமிஷனர் ஆர் எஸ் சர்மா, மும்பை குற்றவியல் டிசிபி பிரதீப் சாவந்த், ஆய்வாளர் வசிஷ்ட் அந்தாலே ஆகிய மூன்றுபேரையும் பலகோடி ஊழல் செய்த முத்திரைத்தாள் வழக்கிலிருந்து சிறப்பு நீதிமன்றம் போதிய சாட்சியங்கள் இல்லாததால் விடுவித்தது.
The Hindu News Update Service

இங்கிலாந்து பிரதமர்: டோனியின் கடைசி நாள்

இன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் கேள்விநேரத்திற்குப் பிறகு 10, டௌனிங் தெரு வீட்டில் தன் கடைசி மதிய உணவை முடித்துக்கொண்டு விடை பெறுகிறார் டோனி ப்ளயர். பத்தாண்டுகாலம் ஆட்சி புரிந்தபிறகு தனது கட்சியின் கார்டன் ப்ரௌனுக்கு அதிகாரத்தை கொடுத்துவிட்டு பதவி விலகுகிறார். பத்தாண்டுகளாக நிதியமைச்சராக பணிபுரிந்த ப்ரௌன் தனது நீண்ட நாளைய கனவை நனவாக காணும் நாளிது. அவர் ஈராக் பிரச்சினையை எவ்வாறு கையாளப்போகிறார் என அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

ப்ரௌன் பிரதமரானபோது தனது இல்லத்தை மாற்ற வேண்டியதில்லை, ஏனெனில் நிதியமைச்சராகவே அவர் பிரதமரின் வீட்டில் தான் வசித்துவந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட 11,டௌனிங் தெரு இல்லம் பெரிதான டோனி பிளயர் குடும்பத்திற்கு சரியாக இருந்ததால் இருவரும் swap செய்துகொண்டிருந்தனர்.
The Hindu News Update Service

சென்னையில் விளம்பர தட்டிகள் வைக்க தடை

சென்னை நகரில் வைக்கப் பட்டிருக்கும் விளம்பர ஹோர்டிஙகுகளை அகற்றுமாறு முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். இதனால் வெளியிடங்களில் விளம்பரம் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தொழிலால் சுமார் ஒரு இலட்சம் தொழிலாளர்கள் வாழ்வதாக இவர்களின் சங்கத்தலைவர் ஏஜி நாயகம் கூறுகிறார். ஒவ்வொரு விளம்பரதட்டியும் ஒரு மாதத்திற்கு ஒன்றரை இலட்சத்திற்கு வாடகைக்கு விடப் படுகிறது. தவிர அரசிற்கும் மாதத்திற்கு சதுர அடிக்கு மூன்று ரூபாய் வரியாக வருகிறது.
No hoardings in Chennai: Karunanidhi - Yahoo! India News

அமெரிக்கா:இந்திய வம்சாவளியால் பள்ளியில் இடமில்லை

சமூகநீதிக்காக இடப்பட்ட நீதிமன்ற தீர்ப்பொன்றினால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு புகழ்பெற்ற பள்ளியில் இடம் கிடைக்கவில்லை.
நியூயார்க்கின் கோனி தீவிலுள்ள மார்க் ட்வைன் பள்ளி திறமையுள்ள மாணவர்கள் மிக விரும்பும் பள்ளியாகும். இங்கு நடந்த நுழைவுத்தேர்தலில் 77 மதிபெண்கள் பெற்றும் நிகிடா ராவ் என்ற சிறுமிக்கு அவள் சிறுபான்மை இனத்தினர் என்ற வகையில் அதிகம் மதிப்பெண்கள் பெற வேண்டியதாயிருக்கிறது. 1974 இல் வெளியான ஒரு நீதிமன்ற தீர்ப்பின்படி நடக்கவேண்டியுள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையினரின் தொகையை கூட்டுவதற்காகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பினும் நிகிடாவிற்கு இது தடங்கலாக உள்ளது.

இதுபற்றி மேலும்...Race comes between Indian girl & NY school - Daily News & Analysis

சில்லறை வியாபாரம்: கேரளாவில் இன்று கடையடைப்பு

சில்லறை வியாபாரத்தில் உள்நாட்டு பெரும் நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் ஈடுபடுவதை எதிர்த்து கேரளாவின் வணிகர்கள் இன்று கடையடைப்பு நடத்துகின்றனர். கடையடைப்பு பல நகரங்களில் முழுமையாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
The Hindu News Update Service

மேற்கு வங்கத்தில் இரயில்வே நிலையம் கொளுத்தப்பட்டது

மேற்கு வங்கத்தில் உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தொழிற்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ(மாவோ)வினரின் பொருளாதார தடையின் அங்கமாக புருலியாவிலிருந்து 55 கி.மீ தூரத்திலுள்ள பிராண்தி என்ற இரயில்வே நிலையத்தை மாவோ ஆதரவாளர்கள் தீயிட்டு கொளுத்தினர். முன்னதாக துப்பாக்கி முனையில் இரயில்வே ஊழியர்கள், பாதுகாப்புப் படையினர் ஆகியோரை அப்புறப்படுத்தினர். இதனால் இரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. நீண்டதூர வண்டிகள் மாற்றுப்பாதையில் விடப்படுகின்றன.

The Hindu News Update Service

விம்பிள்டன்: சானியா இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் சானியா மிர்சா தன் முதல் சுற்று ஆட்டத்தில் உருசியாவை சேர்ந்த யரொஸ்லவா ஷ்வெடாவை 6-0,6-3 என்ற நேராட்டங்களில் வென்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தச் சுற்றில் மற்றுமொரு உருசிய ஆட்டக்காரர் பதினோராம் எண் (Seed - தமிழ்?) நாடியா பெற்றோவாவுடன் ஆட வேண்டும்.

The Hindu News Update Service

'கதை எனக்கு சொந்தமானது சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்': நெல்லை சினிமா பிரமுகர் வழக்கு

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்து பரபரப்பாக ஒடிக்கொண்டிருக்கும்படம் சிவாஜி. இந்த படத்தின் கதைக்கு நெல் லையை சேர்ந்த சினிமா உதவி டைரக்டர் சுடலைக்கண்ணு என்கிற ஜெயராஜதேவன் சொந்தம் கொண்டாடியுள்ளார்.

அவர் சென்னை நகர சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியி ருப்பதாவது:-

நான் சினிமா துறையில் பிரபலமாகும் ஆசையில் ஒரு கதையை டைரக்டர் ஷங்கருக்கு அனுப்பி இருந்தேன். அதை 'சிவாஜி' படத்தின் கதையாக பயன்படுத்தி உள்ளார்.

இந்த கதையை ஷங்கருக்கு நான் அனுப்பியது தொடர் பாக எங்களிடையே கடிதப்போக்குவரத்து நடந்துள்ளது. நான் அனுப்பிய கதையை `சிவாஜி' படத்துக்கு பயன்படுத்தியது குறித்து டைரக்டர் ஷங்கர் என்னிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை. அது நான் எழுதிய கதை.

எனவே கதையை நான் எழுதியதாக குறிப்பிட வேண்டும் என் அனுமதி பெறா மல் 'சிவாஜி' படத்துக்கு எனது கதையை பயன்படுத்தியது தவறு. வாக்குறுதியை மீறி ஷங்கர் நடந்துள்ளார். எனவே என் பெயரை குறிப்பிடும் வரை சிவாஜி படத்துக்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று 4வது நகர உதவி சிவில் கோர்ட்டில் நீதிபதி விஜயேந்திரராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பதில் மனு தாக்கல் செய்யும்படி டைரக்டர் ஷங்கர், ஏவிஎம் நிறுவனம் ஆகியவற்றுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தர விட்டார். வழக்கு மீண்டும் நாளை விசாரணைக்கு வருகிறது.

மாலைமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...