இலங்கைக்கு வருகை தந்திருக்கும் மியான்மார் பதில் பிரதமர் லெப்டினட் ஜெனரல் தீன்சின் தமது பாரியார் சகிதம் நேற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற இச் சந்திப்பின்போது ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ திருமதி தீன்சினுக்கு கைலாகு கொடுத்து வரவேற்பதைக் காணலாம். ...
தகவல் : தினக்குரல்
"இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை" - இலங்கைப் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கா
இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
தகவல் : தினக்குரல்
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் - விடுதலைப் புலிகள் சந்திப்பு
இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சோல்பர்க் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இன்று (ஓகஸ்ட் 29) பிற்பகல் வன்னியில் விசேட பேச்சுவார்த்தையொன்றில் கலந்துகொண்டதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத் தலைவர் புலித் தேவன் மற்றும் விடுதலைப் புலிகளின் பேச்சாளர் இளந்திரயன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள், போர் நிறுத்தம் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்~ கடந்த ஞாயிறன்று தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டதாக வன்னித் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மதிப்பளித்து அதனை நடைமுறைப்படுத்துவது குறுpத்தும் இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவரினால் இந்தப் பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தகவல் : Lanka Dissent
தமிழ் இளைஞர்கள் இருவரை வாழைச்சேனையில் காணோம்
வாழைச்சேனை, நாசிகன் பகுதியைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காண வில்லை என்று வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து சிவானந்தன் (வயது22) மற்றும் கைலாயபிள்ளை தயானந்தன் (வயது 18) ஆகியோரே காணாமல் போயிருக்கின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இளைஞர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் கையடக்கத் தொலைபேசிக்கு "கிற்காட்' கொள்வனவு செய்வதற்காக ஓட்டமாவடிப் பகுதிக்குச் சென்ற வேளையிலேயே காணாமல் போயுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பான விசாரணையை வாழைச்சேனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தகவல் : உதயன்