.

Wednesday, May 23, 2007

ஆண் சேர்க்கையில்லாமல் இனவிருத்தி!

"நெப்ராஸ்காவில் ஹென்றி டூர்லி மிருககாட்சிசாலைன்னு ஒண்ணு இருக்கு"
"சரி, அதுக்கென்ன?"
"ஒரு உயிரினம் குட்டி போட்டிருக்கு!"
"சரி, அதுக்கென்ன?"
"அதுக்கென்னவா, ஆண் சேர்க்கை கொள்ளாமலே குட்டிப்போட்டிருக்காம்!"
"சில நிலை உயிரினங்களில் அப்படியும் உண்டு தான், உதாரணமா மண்புழு"
"அய்யோ, மண்புழு இரு பால் உயிரி - நான் சொல்றது சுறா மீன்!"
"என்னது, சுறா மீனா?"
"ஆமா, சுறா மீன்களை அழிவிலிருந்து காப்பாத்த புதுவழின்னு ஆராய்ச்சியாளர்கள் குதூகலிக்கறாங்களாம்!"
"நம்ப முடியல, உண்மையா இருக்குமா?"
"தினமலர்ல தான் போட்டிருக்காங்க, இப்படிப் பிறக்கிற குட்டிகள் தாயின் மரபணுக்களை ஒத்திருப்பதுமில்லையாம்"
"ஆச்சர்யந்தான், 'சற்றுமுன்'ல போட்டுட்டியா?"
"இதோ!"

சிவாஜி படம் - ரசிகர்களுக்கு அறிவுரை!

'சிவாஜி பட வெளியீட்டின்போது ரசிகர்மன்றம் மூலம் அச்சிடப்படும் விளம்பர போஸ்டர், பேனர்களில் அரசியல் தொடர்பான வாசகங்கள் ஏதுமிருக்கக் கூடாது. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். திரையரங்குகளில் பரபரப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடலாகாது' என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யார் அறிவுறுத்தினாங்களாம்?
யார் சொன்னா ரசிகர்கள்ல்லாம் கேட்பார்களோ, அவர் தான். அட, ஆமாங்க, ரஜினியே தான். இன்றைய தினமலரில் போட்டிருக்கிறார்கள்.

ச: நைஜீரியா: கடத்தப்பட்ட இந்தியர்கள் இன்னும் பிணையில்..

நைஜீரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு இந்தியர்களும் ஐந்தாம் நாளாக இன்றும் விடுவிக்கப்படவில்லை. இந்திய அரசு " இது கிரிமினல்களின் வேலை, அதனால் நாங்கள் பேரத்தில் இறங்கவில்லை, தனிநபர்களே விடுவிப்பதற்கான விலையை பேரம் பேசுகிறார்கள்" என்று கழன்று கொண்டுவிட்டது. பேரம் விரைவில் முடிந்து அவர்கள் விடுதலையாவார்கள்
என்று உறவினர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்
DNA - India - Kidnapped Indian engineers still in captivity - Daily News & Analysis

ச: மும்பை உலக வணிக மையத்திற்கு குண்டு மிரட்டல்

மும்பையின் வானளாவிய உலக வணிக மையக் ( World Trade Center) கட்டிடத்திற்கு குண்டு வைத்து தகர்க்கப் போவதாக வந்த அனாமதேயக் கடிதத்திற்குப் பிறகு அங்கு பாதுகாப்பு கூட்டப்பட்டிருக்கிறது. மே 24 (நாளை) இக்கட்டிடம் தகர்க்கப் படும் என்று அந்த கடிதம் கூறுகிறது.

DNA - Mumbai - Threat to blow up Mumbai World Trade Centre - Daily News & Analysis

சரத்குமார் பற்றி சொன்னது என்ன? - ராதிகாசெல்வி

"அண்ணன் சரத்குமார் மிகப்பெரிய நடிகர்; அவர்மீது மிகவும் மரியாதை வைத்துள்ளேன், சரத்குமார் ஒன்றும் பெரிய ஆளில்லை என்று நான் சொன்னதாக இன்றைய காலைப்பத்திரிக்கையில் வந்த செய்தி பற்றி நான் மிகவும் வருத்தப்படுகிறேன்" என்று புதிய மத்திய அமைச்சர் ராதிகா செல்வி அறிக்கை விட்டதாக மாலைமலர்-ந்துள்ளது

வெங்கடேசப்பண்ணையார் சாவுக்கு(ம்) சி.பி.ஐ. விசாரணை!

எனது கணவர் வெங்கடேச பண்ணையார் சாவு குறித்து கண்டிப்பாக சிபிஐ விசாரணை நடந்தே தீரும். அதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என்று பண்ணையாரின் மனைவியும், மத்திய உள்துறை இணை அமைச்சருமான ராதிகா செல்வி கூறியுள்ளார். மத்திய உள்துறை இணை அமைச்சராக பெற்றுப்பேற்றுள்ள ராதிகா செல்வி முதல் முறையாக நேற்று நெல்லை வந்தார். அங்கு மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமி பாண்டியன் முன்னிலையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எனது கணவர் வெங்கடேச பண்ணையார் கொல்லப்பட்டது தொடர்பாக நான் சிபிஐ விசாரணை கோரியுள்ளேன். அது கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்வேன்." என்றார்
- தட்ஸ்தமிழ் செய்தி

வளைகுடாவில் அமெரிக்கப் போர் கப்பல்கள்!

சுமார் 17,000 வீரர்களுடன் ஒன்பது அமெரிக்க போர் கப்பல்கள் வளைகுடாவில் புதனன்று ஈரானிய கரையருகே காட்சிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 2003ம் வருட இராக் போருக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இதுவே அதிகபட்ச அளவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு விமானந்தாங்கிகளும் உள்ளடங்கிய இவை ஹோர்முஸ் கால்வாய் வழியாக சென்றபோதிலும் ஈரானுக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்று யு.எஸ். கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் செய்தி.

மீண்டும் பறவைக்காய்ச்சல்?

ஐந்தே வயதான இந்தோனேசியச் சிறுமி பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளதும், வியட்நாம் இதில் தனது முதல் சந்தேகக்கேஸை புதனன்று அறிவித்துள்ளதும், மீண்டும் பறவைக்காய்ச்சல் துளிர்த்துள்ளதாக கருதப்படுகிறது. இதை உண்டாக்கும் வைரஸான H5N1 சமீபக்காலமாக குறைந்த வீரியமுடன் இருந்து வந்தது.
பாகிஸ்தானிலும் இஸ்லாமாபாத்தின் புறநகர் பகுதிகளில் கோழிப்பண்ணைகள் அழிக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷும் இந்த வைரஸ்ஸை ஒழிப்பதற்குப் போராடி வருகிறது. அங்கும் சுமார்59 கோழிப்பண்ணைகளில் 144,000க்கும் மேற்பட்ட கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன. உலகளாவிய பயமுறுத்தலான இது பற்றி : மேலும் படிக்க: ராய்ட்டர்

முதல்வர் கருணாநிதி 2ஆம் தேதி டெல்லி பயணம்!

முதல்வர் கருணாநிதி வருகிற 28ம் தேதி டெல்லி செல்கிறார். மே 28ம் தேதி நடைபெறும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார். அவருடன் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் செல்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சந்திக்கிறார் கருணாநிதி. சோனியாவுடனான சந்திப்பின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுகவின் ஆதரவு யாருக்கு என்பது குறித்து முக்கியமாக விவாதிக்கிறார். பிரதமரை சந்தித்து தென்னிந்திய நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்து விவாதிக்கிறார். காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு ஆகிய பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்ககவுள்ளார். 2 நாட்கள் கருணாநிதி டெல்லியில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறன் குடும்பத்தைச் சேர்ந்த யாருடைய துணையும் இன்றி முதல்வர் கருணாநிதி டெல்லி பயணம் மேற்கொள்ளவிருப்பது அவரது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

source : Thatstamil

'கலைஞருக்கு' கை கொடுக்கும் நடிகை ராதிகா!

திமுக சார்பில் புதிதாக தொடங்கப்படவுள்ள கலைஞர் டிவிக்காக தொடர்களைத் தயாரித்துத் தர நடிகை ராதிகா முன்வந்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாகவே நேற்று முதல்வரை ராதிகா சென்று சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சரத்குமார் திமுகவில் இருந்தபோது ராதிகாவின் கை சன் டிவியில் ஓங்கியிருந்தது. ராதிகாவின் ராடான் நிறுவனத்திற்கு அதிக அளவிலான தொடர்களைத் தயாரித்து ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், முக்கிய நேரங்களும் ராதிகா நிறுவனத்துக்கே ஒதுக்கப்பட்டன.
இப்படி அசைக்க முடியாத அளவுக்கு சிறப்பிடத்தில் இருந்து வந்த ராதிகாவுக்கு, சரத்குமார் திமுகவிலிருந்து வெளியேறியபோது வேறு வழியின்றி அவரும் திமுகவிலிருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டது.

மேலும் விபரங்களுக்கு.

http://thatstamil.oneindia.in/news/2007/05/23/radhika.html

அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் குற்றஞ்சாட்டு.

அ.தி.மு.க. அரசில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் நத்தம் விசுவதநாதன். இவர் தற்போது நத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறது. இவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடு அடிக்கடி தி.மு.க.அரசின் தூண்டுதலால் சோதனையிடப்படுகிறது. கடந்த பல மாதங்களுக்கு இவரது வீட்டை வருமானவரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது எதுவும் கிடைக்கவில்லை.இந்த நிலையில் நேற்றும் விசுவநாதன் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் திடீரென்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். டி.எஸ்.பி. ரத்தின குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன்,ராஜாமுகமது உள்பட 7 பேர் கொண்ட குழு நேற்று காலையில் நத்தம் விசுவநாதன் வீட்டுக்கு சென்றது.அவர்கள் வீட்டின் கதவை ஞீட்டிவிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். நத்தம் விசுவநாதனின் ஞீர்வீக வீடு,வேம்பார்பட்டியை அடுத்த உலுப்பக்குடியில் உள்ளது. அங்கும் போலீசார் சென்று சோதனை நடத்தினர். இதுபோல நத்தம் பகுதியில் உள்ள வீடு,மாம்பழச்சாறு கம்பெனி,திண்டுக்கல்லில் நிறுவன அலுவலகம் உள்பட 5 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர்.இதுபற்றி முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:_என்வீடு மற்றும் உறவினர்கள் வீடுகள் அடிக்கடி சோதனையிடப்படுகிறது. தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. என்னையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் மிரட்டுவதற்காகவே தி.மு.க. அரசு இந்த பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. இந்த சலசலப்புக்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். எங்களை ஒருபோதும் மிரட்ட முடியாது.நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதில் எந்தவித ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. வீட்டில் இருந்த எலக்டிரிக் பில் மற்றும் ஒரு சில பில்களை மட்டும் எடுத்துச்சென்றார்கள். இதற்கு அவர்கள் எழுதிக்கொடுத்தும் சென்றுள்ளனர்.இவ்வாறு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் கூறினார்.

கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் கைது

கோகெய்ன் போதைப் பொருளை வைத்திருந்ததாக முன்னாள் கிரிக்கெட் வீரர் மணீந்தர் சிங் தில்லியில் அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக போதைத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் 1.5 கிராம் போதைப் பொருளை அவருடைய வீட்டிலிருந்து பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.5 ஆயிரம்.

இந்த சம்பவத்தின்போது மணீந்தர் சிங் வீட்டில் போதைப் பொருள் வியாபாரி என சந்தேகிக்கப்படும் சயம் சித்திக் என்பவரையும் கைது செய்தனர். போதை பொருள் விற்பனையில் தொடர்புடைய நைஜீரிய பிரஜையை காவல்துறையினர் பின்தொடர்ந்தபோது அவர் ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்தபோதுதான் அது மணீந்தர் சிங்கின் வீடு என அவர்களுக்குத் தெரிந்தது.

இடதுகை சுழற் பந்துவீச்சாளரான மணீந்தர், 35 டெஸ்ட் போட்டிகளிலும், 59 ஒருதினப் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் இருந்துவருகிறார்.

தினமணி

வறுமைக் கோட்டுக்குக் கீழே மேற்கு வங்க மாநில ஆளுநர்

மேற்கு வங்க மாநிலத்தில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இத் தகவலை அவரே வெளியிட்டார். அப்போது அவர், எனக்கு இந்த அந்தஸ்து கிடைத்திருப்பது தெரிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றார்:

ராய்கஞ்ச் நகரில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றுள்ளதை நாளிதழ்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.

மத்திய அரசு உயர் அதிகாரியாகவும், பல்வேறு நாட்டு தூதரகங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற தனது பேரனின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பு, ஏழைகளைக் காட்டிலும் குறைவாக இருப்பதை அறிந்தால் எனது தாத்தா மகாத்மா காந்தி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஒரு மாநிலத்தின் ஆளுநரான தனது பேரன் ஆளுநர் மாளிகையில் வசிக்காமல், ராய்கஞ்ச் போன்ற குக்கிராமத்தில் வசிப்பதை எண்ணி பெருமைப்பட்டிருப்பார்.

இது போன்ற செயலை நகைச்சுவை உணர்வு மிகுந்த அல்லது சமுதாயத்தில் சமதர்மம் மலர வேண்டும் என்று நினைக்கும் ஒருவர்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் இது போன்ற தவறை அதிகாரிகள் தவிர்த்திருக்கலாம் என்றார்.

உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ராய்கஞ்ச் நகராட்சியின் 9-வது வார்டில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்களில் 23-வது பெயராக ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தில் 6 பேர் இருப்பதாகவும் அதில் உள்ளது. இது குறித்து ராய்கஞ்ச் நகர்மன்றத் தலைவர் மொஹித் சென்குப்தாவிடம் கேட்டதற்கு, பட்டியலில் இடம் பெற்றிருப்பது பிகாரில் இருந்து வந்து துணி வியாபாரம் செய்த கோபாலகிருஷ்ண காந்தி என்பவராக இருக்கலாம் என்றார்.

தினமணி

பரிசல்களில் ஓட்டை போட்ட போலீஸ்: பரிசலோட்டிகள் சாலை மறியல்

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ள பரிசல் துறை, அதனை ஒட்டியப் பகுதிகளில் பரிசலோட்டிகள் தங்கள் பரிசல்களை கவிழ்த்து வைப்பது வழக்கம். இந்நிலையில் பயணிகளுக்கு இடையூறாக வழித்தடத்தில் பரிசல்களை கவிழ்க்கக் கூடாது என பென்னாகரம் டிஎஸ்பி ஜெ.லட்சுமணசுவாமி திங்கள்கிழமை மாலை நேரில் வந்து எச்சரித்துள்ளார்.

எச்சரிக்கையை மீறி அப் பகுதியில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பரிசல்களில் துளையிட்டு போலீசார் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பரிசலோட்டிகளின் ஜீவாதாரமான பரிசல்களை சேதப்படுத்தியதால் ஆத்திரம் அடைந்த பரிசல் ஓட்டிகள், செவ்வாய்க்கிழமை காலை ஒகேனக்கல் காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சேதப்படுத்திய பரிசல்களை சாலையில் போட்டு வைத்தனர்.

காலை 6 முதல் பகல் 11 மணி வரை மறியல் போராட்டம் நடைபெற்றதால் ஒகேனக்கல் பகுதிக்குள் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்பட்டது. பரிசலில் செல்வதற்காக ஆர்வமுடன் பரிசல் துறைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...