.

Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, September 4, 2007

சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.

அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.

அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.

தினமணி

Sunday, September 2, 2007

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கைகளால் அடுத்த ஓரிரு நாள்களில் நிலைமை சீராகி விடும்.

கடந்த காலத்தில்...: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்காக ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சரி செய்யப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து திறம்படச் செயல்பட்ட ஓனிக்ஸ் நிறுவனத்தை விரட்ட பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்தது. 26.1.2003-ல் குப்பைகளுடன் கட்டட இடிபாடுகளையும் சேர்த்து அள்ளி, ஓனிக்ஸ் கணக்குக் காட்டுவதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் 10-க்கும் மேற்பட்ட குப்பை லாரிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறை பிடித்தது.

பல தரப்பட்ட குப்பைகளை அள்ளுவது என ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதையடுத்து, அந்தப் பிரச்னை தீர்ந்தது.

ஓனிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் தான் நீல் மெட்டல் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய நிறுவனம் செயல்படும் போது சில நாள்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம்.

~0~


குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி

கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிடும் முன்பே அவை மேடுகளாகக் கூட வளர விடாமல், சென்னை மாநகரக் காவல்துறையினர் 'மக்கள் நண்பன்' என்பதை நிரூபிக்கும் வண்ணம், ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்திவிட்டார்களே; அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர்கள் சாதித்துக் காட்டினர்' என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது, என் கண்களில் ஆனந்தகண்ணீர் துளிர்த்தது.

கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை அகற்ற உடனே அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துவிட்ட நிலையிலும், ஒருசில கட்சியினர் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுக்கிறார்களே?

பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டுக்குக் காட்டிக் கொள்வது? அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ளவிட மாட்டேன் என்கிறீர்களே?

~0~


எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல்

சென்னையில் குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இப் பணியில் ஆர்வமும், பொதுநல நோக்கமும் கொண்ட எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்று எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் சனிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்க வந்த அவர் கூறியது:

சென்னையில் குப்பைகள் அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, இப்பணி ஒப்படைக்கப்பட்ட நீல் மெட்டல் நிறுவனம் குப்பைகளை அகற்றுவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் தயாராகவுமில்லை. குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இதை சேவையாக தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். குப்பை அகற்றுவதை வர்த்தகமாக்குவது, இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.

சென்னையில் ஏற்கெனவே எக்ஸ்னோரா அமைப்பினர், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்ததால், குப்பைகளை மக்கள் வீதியில் கொட்டுவதில்லை. குப்பைகளை குறைக்கவும், அவற்றை உரமாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மக்கள் ஈடுபாட்டுடன் இதில் ஆர்வம் காட்டினர் என்றார் நிர்மல்.

~0~


கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்

சென்னையில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் குப்பைகளை முழுமையாக அள்ள முடியாததால் குப்பைகள் தேங்கின.

கடலூருக்கு சென்று சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி குப்பைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்தவுடன், உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் ஆகியோரை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியில் அசுர வேகத்தில் ஈடுபடுங்கள். இதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. மேயர், உயர் அதிகாரிகளில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னையில் குப்பைகள் அகற்றும் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓனிக்ஸ் நிறுவனத்தினர் தொட்டிகளை வைத்து குப்பை அள்ளும் பணிகளையும், நீல்மெட்டல் நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிகளையும், மாநகராட்சி 150 தனியார் லாரிகள் மூலம் இந்த பகுதிகளில் முழுமையாக குப்பைகளை அகற்றி வருகிறது. தெருக்களில் விழும் குப்பைகளும் முழுவீச்சில் அள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்த பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

~0~


நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

குப்பையை சரி வர அள்ளாத நீல் மெட்டல் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர பணி செய்யாததை சுட்டிக் காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
- தினமலர்

~0~


முந்தைய சற்றுமுன்:
1. குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது
2. விஜயகாந்த் 2 நாள் கெடு
3. துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது



The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance
The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet

Saturday, September 1, 2007

சென்னை: தவற விட்ட பெட்டியால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நாராயண உன்னி. இவர் இராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். ஓணம் பண்டிகையைக் கொண்டாட இவர் மனைவி, குழந்தைகளுடன் கேரளா வந்து இருந்தார்.

மீண்டும் பணியில் சேருவதற்காக நாராயண உன்னி திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கோரமண்டல் விரைவு தொடர்வண்டியில் புறப்பட்டார். இன்று அதிகாலை அந்த வண்டி பேசின் பிரிட்ஜ் நிலையத்துக்கு வந்தது. சமிக்ஞை கிடைக்காததால் நீண்ட நேரமாக அவ்வண்டி நின்றுக் கொண்டிருந்தது.

இதையடுத்து சென்னை மத்திய நிலையத்துக்கு தானியில் சென்று விடலாம் என்று நாராயண உன்னி முடிவு செய்தார். எனவே தன் பெட்டிகளுடன் அவசரம், அவசரமாக இறங்கினார். பிறகு குடும்பத்தினருடன் ஒரு தானியில் ஏறி மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றார்.

போகும்போது அவர் மறதியாக ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டார். அந்த பெட்டி கேட்பாரற்று பேசின் பிரிட்ஜ் நிலைய நடைபாதையில் கிடந்தது. நீண்ட நேரமாக அந்தப் பெட்டி கிடந்ததால் பயணிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று கருதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவலர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாயுடனும் விரைந்து அருகில் சென்று சோதனை நடத்தினார்கள்.

இந்த பரபரப்பால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பீதி தொற்றிக் கொண்டது. மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது மக்கள் திணறியபடி கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே உலோக நுண்ணாய்வுக் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலம் சோதித்த பின், அப்பெட்டியில் வெடிபொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர். பிறகு பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தனர். அதற்குள் துணிகள்தான் இருந்தன.

பரபரப்பு ஏற்படுத்திய பெட்டியைத் தவற விட்டப் பயணி யாராக இருக்கும் என்று காவல் துணை ஆய்வாளர் தங்கவேலு விசாரணை நடத்தினார். அப்போது நாராயண உன்னி பதறியபடி அங்கு வந்தார்.

மத்திய நிலையம் சென்ற பிறகே அவருக்கு ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டோம் என்பது தெரிந்து அதே தானியில் அவர் உடனே திரும்பி வந்தார்.

வெடிகுண்டு பரபரப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டதால் அவரால் உடனே பேசின் பிரிட்ஜ் நிலைய பகுதிக்குள் வர இயலவில்லை. இதை அவர் காவல் அதிகாரிகளிடம் விளக்கி கூறி மன்னிப்புக் கேட்டு கொண் டார். இராணுவ அதிகாரி என்பது தெரிய வந்ததும் காவல் அதிகாரிகள் அவரிடம் பெட்டியை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

செய்தி மூலம்: மாலைமலர்

Thursday, August 30, 2007

சென்னையில் எலிகாய்ச்சல் பரவல்

சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் எலிகாய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். `லெப்டோ ஸ்பைரோசஸ்'' என்று சொல்லக்கூடிய இந்த வகை காய்ச்சல் எலி, பூனை, நாய், ஆடு, மாடு ஆகியவற்றின் சிறுநீர், மலம் போன்றவற்றில் இருந்து நோய் கிருமி உருவாகிறது.

சிறுகாயங்கள், சிரங்கு, புண், கீறல்கள் உடலில் இருந்தால் கூட அதன் வழியாக பாதிக்க கூடும். அதனால் வீட்டு விலங்குகள் வளர்ப்பவர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.

சிரங்கு, புண் இருந்தால் அவற்றை சுத்தம் செய்து பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் கிருமி தாக்கக்கூடும். இதனால் கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி ஏற்படும். சிலருக்கு தோளில் தழும்பு கூட உண்டாகும்.

`எலி' காய்ச்சல் தொற்றக்கூடியது அல்ல. நாம் பாதுகாப்பாக இருந்தால் இந்நோய் வராமல் தடுக்கலாம். வீட்டு விலங்குகளின் சிறுநீரோ, மழை நீரோ, கழிவு நீரோ காயம் ஏற்பட்ட பகுதியில் பட்டாலும் இந்நோய் தாக்கக்கூடும் என்று மாநகராட்சி மருத்துவர் ஒருவர் கூறினார்.

மேலும் விபரங்களுக்கு மாலைமலர்

Wednesday, August 29, 2007

சென்னை: குப்பையால் திணறும் மாநகராட்சி

சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது.

தற்போது நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது.

இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது.

போதிய ஊழியர்களோ, வசதிகளோ இல்லாத பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை.

செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்து வீச்சத்தை அதிகரிக்கச்செய்தது.

குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயற்பட்டாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது.

மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Sunday, August 19, 2007

சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் கோளாறு

இன்று காலை 8 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று மீனம்பாக்கம் விமானநிலையத்தில் புறப்படத் தயாராக இருந்தது. அதில் 280 பயணிகள் மற்றும் விமானிகள், விமான பணிப்பெண்கள் இருந்தனர். விமானம் புறப்படும் நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதால் விமானப்பறப்பு விலக்கம் செய்யப்பட்டது. பயணிகள் அருகில் உள்ள நட்சத்திர விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். சரியான நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி: தினமலர்

Wednesday, August 8, 2007

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோர பூங்கா அமைக்க 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

பூங்காக்களை வடிவமைப் பது பற்றி 54 பேரிடம் இருந்து டிசைன்கள் வந்துள்ளன. அழகிய சித்திர வேலைப்பாடுகள், சிற்பங்கள் நிறைந்ததாக இந்த பூங்காக்கள் அமையும். மாதிரி வரை படங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசு அனுமதி பெற்று பூங்காக்கள் உருவாக்கப்படும்.

பல்வேறு தலைவர்களின் பெயர்களில் பெரிய பூங்காக்கள் உள்ளன. அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 38 பூங்காக்களில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்படும்.

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், சத்திய மூர்த்தி, திரு.வி.க., திருவள்ளு வர், பாரதியார், காமராஜர், அண்ணா, ராஜீவ், கருணாநிதி, சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.

மாலைமலர்

Tuesday, August 7, 2007

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நிதி: 25 தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.40 லட்சம் உதவி

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சி நடத்தியதின் மூலம் கிடைத்த ரூ. 40 லட்சம் தொகை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. திங்கள்கிழமை அறிவாலயத்தில் நடைபெற்ற விழாவில் இத்தொகைக்கான காசோலையை தொண்டு நிறுவனப் பிரதிநிதிகளிடம் முதல்வர் கருணாநிதி வழங்கினார்.

சென்னையில் உள்ள 'தமிழ் மையம்' என்ற அமைப்பு "சென்னை சங்கமம்' என்ற கலாசார விழாவை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் நடத்தியது. இதில் விளம்பரம் மூலம் கிடைத்த வருவாயில் செலவு போக எஞ்சிய தொகை தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதாக தமிழ் மையத்தின் நிர்வாக அறங்காவலர் ஜெகத் கஸ்பார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியது:

'சென்னை சங்கமம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முதல்வரின் மகள் கனிமொழி. இந்நிகழ்ச்சியை 'தமிழ் மையம்' நடத்தியது. இந்நிகழ்ச்சியில் 750 கலைஞர்கள் பங்கேற்றனர். சென்னையில் 700 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை 10 லட்சம் மக்கள் கண்டு களித்தனர்.

தனியார் நிறுவனங்களிடமிருந்து விளம்பரம் மூலம் பெறப்பட்ட தொகை ரூ.2 கோடியே 94 லட்சத்து 54 ஆயிரத்து 900 ஆகும். இதில் நிகழ்ச்சிக்கான செலவுத் தொகை ரூ.2 கோடியே 56 லட்சத்து 27 ஆயிரத்து 895 ஆகும். எஞ்சிய தொகை ரூ.39 லட்சத்து 27 ஆயிரமாகும். தற்போது கூடுதலாக ரூ.73 ஆயிரம் நிதி சேர்க்கப்பட்டு ரூ.40 லட்சத்தை 25 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு முதல்வர் மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முதல் கட்டமாக 5 நிறுவனப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஏனைய நிறுவனங்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்படும். இந்நிறுவனங்கள் அனைத்துமே குழந்தைகள், பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர் நலனுக்காகச் செயல்படுபவை.

நகராட்சிப் பள்ளிகளில் கிராமியக் கலை: சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கிராமியக் கலை பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ரூ.8 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 200 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கஸ்பார்.

தினமணி

The Hindu : Tamil Nadu / Chennai News : ‘Chennai Sangamam’ surplus funds to be utilised for NGO projects

அ.தி.மு.க.-தி.மு.க. கோரிக்கை நிராகரிப்பு - விருகம்பாக்கம் எம்.எல்.ஏ. தொகுதி புதிதாக உருவாகிறது

அ.தி.மு.க.- தி.மு.க. கோரிக்கை நிராகரிக்கப் பட்டு விருகம்பாக்கம் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பல்லாவரம் தொகுதிகளும் வருகின்றன. தமிழ்நாட்டில் பாராளுமன்றத் தொகுதிகளை பிரித்தது போல் சட்டமன்றத் தொகுதிகளும் பல பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் சேரன்மாதேவி, சாத்தான்குளம், திருவல்லிக்கேணி, ஆலந்தூர் தொகுதி பெயர் நீக்கப்பட்டு வேறு தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

சேரன்மாதேவி தொகுதியை பிரித்து அதில் உள்ள பாப்பாக்குடி (முக் கூடல்) கடையம் பஞ்சாயத்து யூனியன் பகுதிகள் ஆலங்குளம் தொகுதியிலும் சேரன்மாதேவி யூனியன் அம்பாசமுத்திரம் தொகுதியில் சேர்க்கப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டின் மிகப் பெரிய தொகுதியான வில்லிவாக்கம் தொகுதி 3 ஆக பிரிக்கப்பட்டு, ஆவடி, அம்பத்தூர், விருகம்பாக்கம் தொகுதியாக உருவாக்கப்பட்டு உள்ளது.

வில்லிவாக்கம் தொகுதியை பிரிக்கும் போது கே.கே.நகர் பெயரில் ஒரு தொகுதி உருவாக்க வேண்டும் என்று தி.மு.க. பிரதிநிதிகள் வலி யுறுத்தி இருந்தனர்.

எம்.ஜி.ஆர்.நகர் பெயரில் ஒரு தொகுதியை உரு வாக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பிரதிநிதிகள் தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் 2 கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விருகம்பாக்கம் பெயரில் தொகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

வடசென்னை பாராளுமன்ற தொகுதியில் இது வரை ராயபுரம், துறை முகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லி வாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதில் தற்போது வில்லிவாக்கம், துறைமுகம் தொகுதியை மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில், சேர்த்து உள்ளனர். அதற்கு பதிலாக வட சென்னையில் மாதவரம், பூங்காநகர் (தனி) தொகுதிகளை இணைத்துள்ளனர்.

தென்சென்னை பாராளுமன்றத் தொகுதியில் தி.நகர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் ஆகிய தொகுதிகள் இருந்தன. தற்போது இதில் ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், வேளச்சேரி, சைதாப்பேட்டை, தி.நகர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் வருமாறு பிரித்துள்ளனர்.

மத்திய சென்னை பாராளுமன்றத் தொகுதியில் ஏற்கனவே பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன. இதை தற்போது மாற்றி புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் தொகுதிகள் இடம் பெறுமாறு செய்துள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதியில் மதுரவாயல், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும் புதூர் (தனி), பல்லாவரம், தாம்பரம் சட்டசபை தொகுதி களும், திருவள்ளூர் பாராளுமன்றத் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், கும்மிடிப் பூண்டி, பொன்னேரி, திருவாலங்காடு, தொகுதிகளும் சேருகின்றன.

சென்னையை பொறுத்தவரை, திருவல்லிக்கேணி, ஆலந்தூர் பெயரில் தொகுதி கள் இனி இருக்காது.

மாலைமலர்

Wednesday, August 1, 2007

புதிய வழிகாட்டி மதிப்பு: தி.நகர் ்- ரூ. 12 ஆயிரம்; அண்ணா சாலை - ரூ.8,850

தமிழ்நாட்டில் நில விற்பனை யில் சந்தை விலைக்கும், வழி காட்டி மதிப்புக்கும் (அரசு விலை) இடையே வித்தியாசம் அதிகமாக இருந்தது. அதாவது வெளியில் நிலத்தை அதிக விலை கொடுத்து வாங்குவார்கள். ஆனால் அதை பதிவு செய்யும் போது அந்த இடத்தில் அரசாங்க மதிப்பு மிக குறைவாக இருக்கும்.

இதனால் பத்திர பதிவில் பல்வேறு மோசடிகள் ஏற்பட்டன. கறுப்பு பண புழக்கம் அதிகரித்து அரசுக்கு வருவாய் இழப்பும் அதிகமாக ஏற்பட்டது. இதை முற்றிலும் களைய தமிழ்நாடு முழுவதும் வழி காட்டி மதிப்பை மாற்றி அமைக்க அரசு உத்தரவிட்டி ருந்தது. இதன்படி புதிய வழி காட்டி மதிப்பு தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டது. சந்தை விலைக்கும் முந்தை வழிகாட்டி மதிப்புக்கும் இடையே வேறுபாட்டை பாதியாக குறைக்கும் வகையில் இந்த விலை நிர்ணயம் உருவாக்கப்பட்டுள்ளது.

அபிராமபுரம் 2-வது தெருவில் ரூ. 872 ஆக இருந்த சதுர அடி இப்போது ரூ. 2365 ஆக உயர்ந்துள்ளது. இதே போல் அபிராமபுரம் 4-வது தெருவில் விலை ரூ. 3430 ஆக உள்ளது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் பஸ் நிலையம் முதல் பனகல் பார்க் வரை சதுர அடி ரூ. 11 ஆயிரமாக இருந்த விலை ரூ. 12 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நாகேசுவரராவ் ரோடு முதல் கோடம்பாக்கம் நெடுஞ்சாலை பகுதியிலும் ரூ. 12 ஆயிரமாக விலை நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

இதே போல் அண்ணா சாலை பகுதி விலை சதுர அடி ரூ. 8850 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

ஒவ்வொருவரும் தாங்கள் வசிக்கும் தெருவின் சதுர அடி விலை எவ்வளவு என்பதை பார்க்க இண்டர்நெட்டில் www.tnreginet.net என்ற முகவரியில் சென்று பார்க்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தெரு, அவென்யூ, நகர்களுக்கும் இதில் விரிவாக விலை விவரங்கள் உள்ளன.

மாலைமலர்

Saturday, July 28, 2007

ஆகஸ்ட் 3 முதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர்

கருணாநிதி கோரிக்கை ஏற்பு

தமிழக முதலமைச்சர் கருணாநிதி சென்னை மாநகரின் குடிநீர்த் தேவைக்காக, கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து ஆகஸ்டு முதல் வாரத்தில் தண்ணீரைத் திறந்து விட அறிவுரைகள் வழங்குமாறு ஆந்திர முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டிக்கு 20.7.2007 அன்று கடிதம் எழுதி இருந்தார்.

முதல்-அமைச்சர் கருணா நிதியின் கோரிக்கையை உடனடியாக ஏற்று ஆந்திர மாநில முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சென்னை மாநகரின் குடிநீர்த்தேவையை நிறைவு செய்வதற்காகக் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து 3.8.2007 முதல் தண்ணீர் திறந்து விடுவதற்குத் தெலுங்கு கங்கைத் திட்டத்தின் தலைமைப் பொறியாளருக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மாலைமலர்

Friday, July 27, 2007

சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்.

ஜனாதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல்கலாம், ஓய்வு பெற்ற நேரத்தில் இருந்தே தன்னை பிஸியாக்கிக் கொண்டார்.

நேற்று மட்டும் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் இரவு 10 மணிக்கு தனியாக சென்னையை வலம் வந்துள்ளார். தான் விஞ்ஞானியாக இருக்கும்போது அடிக்கடி சாப்பிடும் ஓட்டலான அண்ணாசாலை அன்னலட்சுமி ஓட்டலுக்கு சென்ற கலாம், அங்கு சாம்பார், ரசம், போண்டா உள்ளிட்டவைகளை ருசித்தார். அப்போது ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுமிகள் கலாமிடம் வந்து பேசி ஆட்டோகிராப் பெற்றுச் சென்றனர். இரவு 11.45 மணி வரை அவர் அங்கு இருந்ததாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன?

நடிகர் சரத்குமார் கேள்வி!

டாடா நிறுவனம் ஆரம்பிக்கும் தொழிற்சாலையை அரசே நடத்தாமல் தனியாருக்கு தரவேண்டிய அவசியம் என்ன? என்று நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். டாடா நிறுவனம் தொழிற்சாலையின் முதல்கட்டத்தை துவங்க 30 மாதங்கள் ஆகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலத்தில் கணிமவளத்தினை தோண்டி எடுத்து வெளியில் விற்பார்களா? அல்லது 30 மாதங்கள் கழித்து தொழிற்சாலை ஆரம்பித்து டைடானியம் டை ஆக்சைடு தயாரிக்கும் வரை கணிம வியாபாரம் செய்யாமல் இருப்பார்களா? அணுசக்தி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கணிமங்களை சட்டவிரோதமாக சிலர் வெட்டி எடுப்பதாகவும், அதனால் இந்த பகுதி மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அரசு கூறியுள்ளது. அப்படி என்றால் இதுபோன்ற தொழிற்சாலையை அரசே தொடங்கி நடத்தலாமே என்று அந்த அறிக்கையில் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Monday, July 23, 2007

லண்டன் தமிழருக்கு அடி-சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது

லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார். சரவணா ஸ்டோர்ஸுக்கு் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

Sunday, July 22, 2007

சென்னை: மீண்டும் ரவுடி வேட்டை.

சென்னை நகரில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்தி வரும் அதிரடி சோதனையில் 700க்கும் அதிகமான ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கிய ரவுடிகள் வேட்டை நேற்று இரவும் நீடித்தது. நகரின் முக்கிய சாலைகளில் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ரவுடிகள், கேடிகள் என 700க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர்

Saturday, July 14, 2007

பள்ளி ஆசிரியை: நூதன தண்டனை வேதனை ஆனது.

மாணவிகள் மூவரின் சட்டையைக் கழற்ற சொன்ன ஆசிரியை ஒருவர், இந்த அநாகரிகச் செயலால் கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதுபற்றிய தினமலர் செய்தி பின்வருமாறு:

சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத மாணவிகளை மேல்சட்டையை களையச் சொல்லி ஆசிரியை நூதன தண்டனை அளித்தார். விஷயம் தெரிந்து கொதிப்படைந்த பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சர்ச்சைக்குரிய ஆசிரியையை தனியார் பள்ளி நிர்வாகம் "டிஸ்மிஸ்' செய்தது.

சென்னை தண்டையார்பேட்டையில் தனியார் பள்ளி உள்ளது. இங்கு ஏழாம் வகுப்பில் மாணவிகள் மோனிஷா, முக்தா, புவனேஸ்வரி படிக்கின்றனர். மூவரும் ரெக்கார்டு நோட்டுக்கு மேல் அட்டை போடாமல் பள்ளிக்கு எடுத்துச் சென்றனர். கோபமடைந்த பள்ளி ஆசிரியை ஜெயந்தி "ரெக்கார்டு நோட்டுக்கு அட்டை போடாத உங்களையும், மேல் சட்டை போடாமல் நிற்க வைத்தால் தான் புத்தி வரும்,' என்று கூறி மூன்று பேரையும் மேல் சட்டையை களையச் சொன்னார்.

அது இருபாலர் படிக்கும் பள்ளி. எனவே, தண்டனையை அவமானமாக கருதிய மாணவிகள் அழுதபடி மறுத்தனர். ஆசிரியை தொடர்ந்து வற்புறுத்தினார். இதனால், மாணவிகள் அழுதபடியே வீட்டிற்கு சென்றனர். பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவிகளின் பெற்றோர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் தனியார் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். மாணவிகளை அநாகரிகமாக தண்டிக்க முயன்ற ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையைக் கண்டிப்பதாக கூறியும் பெற்றோர் சமாதானம் அடையவில்லை. "இந்த ஆசிரியை இருக்கும் வரை குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். அவரை "டிஸ்மிஸ்' செய்ய வேண்டும்,' என்று வலியுறுத்தினர்.

தகவலறிந்து தண்டையார்பேட்டை போலீசாரும் பள்ளிக்கு வந்தனர். ஆசிரியை ஜெயந்தி "டிஸ்மிஸ்' செய்யப்பட்டதாக பள்ளி நிர்வாகம் அறிவித்ததை அடுத்தே பெற்றோர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

இதே போல் சென்னை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் எலிமருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் சாஃப்ட்வேர் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பாடி பார்க் சாலையில் தனியாருக்கு சொந்தமான 10 மாடி கட்டடம் உள்ளது. இந்தக் கட்டிடத்தில் அமெரிக்கார்ப் பிசினெஸ் சர்வீசஸ், ரிலையனஸ் நிறுவனம், சதர்ன்லேன்டு குளோபல் சர்வீசஸ் உட்பட பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை மாலை கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் கட்டடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், இன்னும் சில நிமிடங்களில் அது வெடிக்கும் என்றும் கூறினார்.

60-க்கும் மேற்பட்டவர்கள் இந்தச் சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில், வெடிகுண்டு ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

தினமணி

Tuesday, July 3, 2007

ஏசு அழைக்கிறார் தலைமை அலுவலகம் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்

ஏசு அழைக்கிறார் நிர்வாக இயக்குனரும், கோவை காருண்யா பல் கலைக்கழகத்தின் இணை வேந்தருமான டாக்டர் பால் தினகரன் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை ராஜாஜி சாலை யில் ஏசு அழைக்கிறார் அமைப்பின் புதிய தலைமை அலுவலகமான ஜே.சி.ஹவுஸ் திறக்கப்பட உள்ளது. இன்று (3-ந் தேதி) மாலை 5 மணிக்கு அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை திறந்து வைக்கிறார்.

இந்த அலுவலகத்தில் ஏசு அழைக்கிறார், கோவை காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் சீஸா அமைப்பின் தலைமை அலுவலகங்கள் செயல்பட உள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள தலைமை அலுவலகம் இனி முழு நேர பிரார்த்தனை சேவைக்காக பயன்படுத்தப்படும்.

இந்தியா முழுவதும் ஒவ்வொரு தலைநகரங்களிலும் 24 மணி நேர பிரார்த்தனை கோபுரங்கள் தொடங்கப்பட உள்ளது. தினமும் டெலிபோன், கடிதம், இ.மெயில் மூலம் பொது மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கிறார்கள். அவர்களுக்காக 24 மணி நேரமும் பிரார்த்தனை செய்கிறோம். சீஸா அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு உதவிகளையும் வழங்க உள்ளோம். இந்த ஆண்டு 1 கோடியே 4 லட்சம் செலவில் உதவிகள் நேரடியாக வழங்கி சேவை செய்ய உள்ளோம்.

மாலைமலர்

Monday, July 2, 2007

நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர்கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்குகின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக "புக்'' செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள். அண்ணா சாலையிலுள்ள மதரஸ யே ஆஸம் பள்ளி விடுதிக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள் அங்கு துப்புரவு பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

Sunday, July 1, 2007

முன்னெச்சரிக்கை கண்காணிப்பு: யு.எஸ். கப்பலால் அணுக் கதிர்வீச்சு ஏற்படுமா?

சென்னை துறைமுகத்துக்கு ஜூலை 2-ம் தேதி வரவுள்ள "யு.எஸ்.எஸ். நிமிட்ஸ்' கப்பலில் இருந்து அணுக் கதிர்வீச்சு வெளியாகிறதா என்பதை மூன்று இடங்களில் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக டி.ஆர்.டி.ஓ. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுத் தலைவர் டாக்டர் ஏஆர். ரெட்டி தெரிவித்தார்.

சென்னை வரவுள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர் கப்பல் "நிமிட்ஸ்' குறித்து சனிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியது:

"நிமிட்ஸ்' கப்பலில் இருந்து கதிரிவீச்சு வெளியாகிறதா என்பதைக் கண்காணிக்க, அந்தக் கப்பலைச் சுற்றி ரோந்து கப்பல் ஒன்று பணியில் ஈடுபடுத்தப்படும். துறைமுகத்தில் இருந்தபடியும் ஒரு குழு கப்பலைக் கண்காணிக்கும். மேலும் இரண்டு மொபைல் ஆராய்ச்சிக் கூடங்கள் கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. இதோடு மண், நீர், காற்று, உணவு ஆகியவற்றிலும் கதிர்வச்சு சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்தச் சோதனை கப்பல் வருவதற்கு முன், கப்பல் வந்தபின் மற்றும் கப்பல் சென்றபின் என மூன்று முறை நடத்தப்படும்.

"நிமிட்ஸ்' கப்பல் நிற்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு வேறு கப்பலோ, படகுகளோ அனுமதிக்கப்படாது.

இந்தக் கப்பலில் 190 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. இது கப்பலை இயக்குவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கல்பாக்கத்தில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலை உள்ளது. கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் குடியிருப்புகள் உள்ளன. இதனால் எந்த பாதிப்பு ஏற்பட்டதில்லை.

"நிமிட்ஸ்' கப்பல் துறைமுகத்திலிருந்து 3.7 கிலோ மீட்டர் (இரண்டு கடல் மைல்கள்) தொலைவில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் எந்த பாதிப்பு ஏற்படாது. இதுவரை 10 வெளிநாட்டு அணு ஆயுதப் போர் கப்பல்கள் இந்தியாவிற்கு வந்துள்ளன. இந்தக் கப்பல்களால் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை என்றார் அவர். தமிழ்நாடு கப்பல்படை அலுவலர் (பொறுப்பு) வான் ஹால்டன் கூறியது: ஜூலை 2-ம் தேதி வரும் இந்தக் கப்பலில் 450 உயர் அதிகாரிகளும், 5,000 ஊழியர்களும் உள்ளனர். இந்தக் கப்பல் 5-ம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

அரசு அனுமதியின் பேரிலேயே இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்கு வருகிறது. போதுமான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.

தினமணி

-o❢o-

b r e a k i n g   n e w s...