.

Saturday, September 1, 2007

சென்னை: தவற விட்ட பெட்டியால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நாராயண உன்னி. இவர் இராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். ஓணம் பண்டிகையைக் கொண்டாட இவர் மனைவி, குழந்தைகளுடன் கேரளா வந்து இருந்தார்.

மீண்டும் பணியில் சேருவதற்காக நாராயண உன்னி திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கோரமண்டல் விரைவு தொடர்வண்டியில் புறப்பட்டார். இன்று அதிகாலை அந்த வண்டி பேசின் பிரிட்ஜ் நிலையத்துக்கு வந்தது. சமிக்ஞை கிடைக்காததால் நீண்ட நேரமாக அவ்வண்டி நின்றுக் கொண்டிருந்தது.

இதையடுத்து சென்னை மத்திய நிலையத்துக்கு தானியில் சென்று விடலாம் என்று நாராயண உன்னி முடிவு செய்தார். எனவே தன் பெட்டிகளுடன் அவசரம், அவசரமாக இறங்கினார். பிறகு குடும்பத்தினருடன் ஒரு தானியில் ஏறி மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றார்.

போகும்போது அவர் மறதியாக ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டார். அந்த பெட்டி கேட்பாரற்று பேசின் பிரிட்ஜ் நிலைய நடைபாதையில் கிடந்தது. நீண்ட நேரமாக அந்தப் பெட்டி கிடந்ததால் பயணிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று கருதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவலர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாயுடனும் விரைந்து அருகில் சென்று சோதனை நடத்தினார்கள்.

இந்த பரபரப்பால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பீதி தொற்றிக் கொண்டது. மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது மக்கள் திணறியபடி கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே உலோக நுண்ணாய்வுக் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலம் சோதித்த பின், அப்பெட்டியில் வெடிபொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர். பிறகு பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தனர். அதற்குள் துணிகள்தான் இருந்தன.

பரபரப்பு ஏற்படுத்திய பெட்டியைத் தவற விட்டப் பயணி யாராக இருக்கும் என்று காவல் துணை ஆய்வாளர் தங்கவேலு விசாரணை நடத்தினார். அப்போது நாராயண உன்னி பதறியபடி அங்கு வந்தார்.

மத்திய நிலையம் சென்ற பிறகே அவருக்கு ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டோம் என்பது தெரிந்து அதே தானியில் அவர் உடனே திரும்பி வந்தார்.

வெடிகுண்டு பரபரப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டதால் அவரால் உடனே பேசின் பிரிட்ஜ் நிலைய பகுதிக்குள் வர இயலவில்லை. இதை அவர் காவல் அதிகாரிகளிடம் விளக்கி கூறி மன்னிப்புக் கேட்டு கொண் டார். இராணுவ அதிகாரி என்பது தெரிய வந்ததும் காவல் அதிகாரிகள் அவரிடம் பெட்டியை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

செய்தி மூலம்: மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...