.

Saturday, September 1, 2007

பார்வையற்றோரும் பயன்படுத்த மின்-அஞ்சல் - சாதித்த மாணவியர்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் தொலைபேசி வழி மின் அஞ்சல் வசதிக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் புலத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) பி. ரவிச்சந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் ஜி. ஜெகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் பேராசிரியர் கே. மீனா வழிகாட்டுதலின் கீழ் மாணவிகள் டி. சித்ரா, பி. ரேவதி, ஐ. தென்றல், கே. வித்யா ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.

இம்மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பப் கல்லூரியில் ஆக. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் கணினியில் எழுத்துக்களை ஒலிகளாக மாற்றும் ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் இணையதளத்தில் தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையற்றவர்கள் தொலைபேசி கருவி மூலம் காதால் கேட்டுக் கொள்ளாம். மேலும் இதே முறையில் இ-மெயிலும் அனுப்பலாம். இதற்கென தனியே பயன்படுத்துவோர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த வசதியை பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

"வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இணையதளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பார்வையற்றவர்கள் இணைய தள வசதியை பெற இயலாத நிலையில் உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கருவியை மாணவிகள் செய்துள்ளனர்' என்று கூறி மாணவிகளைப் பாராட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.

நன்றி: தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...