.

Saturday, June 30, 2007

சிங்கப்பூருக்கு இரயிலில் போகலாம்!

சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளுக்கும், யாங்கூன், டெஹ்ரான், ஏன் துருக்கி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் நகரங்களுக்கும் இரயிலில் செல்லும் கனவு மிகச்சில வருடங்களிலேயே நனவாக வாய்ப்பிருப்பதாக இச்செய்தி தெரிவிக்கிறது.

நியூயார்க்கில் இது தொடர்பான ஒப்பந்தத்தில் இரயில்வே போர்டு தலைவர் ஜே.பி.பத்ரா கையெழுத்திட்டுள்ளார்.

ஜெ.விவகாரம்: தேர்தல் ஆணையம் மீது கருணாநிதி குற்றச்சாட்டு

4 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த வழக்கில் ஜெயலலிதா மீதான புகார் கேட்பாரற்று போய்விடுமோ என சந்தேகப்படுகிறேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

தி.மு.க. தலைவர், முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

வெற்றிக்கு சிறப்பு

கேள்வி:- கள்ள ஓட்டு புகார் சொல்ல முடியாத அளவிற்கு மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, மத்திய அரசின் காவல் துறையினரே பொறுப்புகளை வகித்து இந்த இடைத்தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. உங்கள் அணிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்திருக்கின்றது. இது உங்கள் ஆட்சிக்குக் கிடைத்த நற்சான்று என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- கள்ள ஓட்டு புகார் எந்த இடத்திலும் ஏற்படவில்லை. எந்தப் பத்திரிகைகளிலும் அப்படியொரு செய்தி வரவில்லை. கள்ள ஓட்டு புகார் மாத்திரமல்ல, எந்தப் புகாரும் இல்லாமல் இந்தத் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. தேர்தல் கமிஷன் ஒரு வகையிலே சிந்தித்துச் செயல்பட்டாலும், அந்தச் சிந்தனையும் செயலும் எங்கள் அணியின் வெற்றிக்கு சிறப்பைத் தேடிக் கொடுத்திருக்கின்றன.

செயற்கையிலே தான்

கேள்வி:- இது செயற்கையான முடிவு என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- உலகத்திலேயே நீங்கள், நான் எல்லோருமே செயற்கையிலே தான் பிறக்கிறோம். அதிகார துஷ்பிரயோகம், சதி, அராஜகம், ராவணன், கம்சன், இரணியன் போன்ற ஜெயலலிதாவின் இலாகாக்கள் முழுவதும் அவரது அறிக்கையிலே சொல்லப்பட்டுள்ளது.

மீண்டும் அந்தப் பதவிகளில்

கேள்வி:- தேர்தல் ஆணையத்தால் மதுரையிலிருந்து மாற்றப்பட்ட அதிகாரிகள் எல்லாம் மீண்டும் அந்தப் பதவிகளிலே அமர்த்தப்படுவார்களா?

பதில்:- ஏற்கனவே அப்படி பழைய காலத்தில் நடைபெற்றிருக்கிறது. தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையத்தினால் மாற்றப்பட்ட அதிகாரிகள் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் அந்தப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். இப்போது தேர்தல் பணிகள் முடிவுற்றதும், அதற்கான அறிவிப்பு வந்த பிறகு அரசு அதைப்பற்றி யோசிக்கும்.

ஜெயலலிதா அறிக்கை

கேள்வி:- தேர்தல் களத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் எல்லாம் முழு மூச்சுடன் உங்களை எதிர்த்தன. இதையெல்லாம் விட தேர்தல் ஆணையமே கடும் எதிர்ப்பைக் காட்டியது. இப்படி எல்லா பக்கங்களிலிருந்தும் வந்த எதிர்ப்பினை மீறி நீங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் இது உண்மையான வெற்றியல்ல என்றும், வாக்காளர்கள் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டார்கள் என்று அறிக்கையிலே சொல்லியிருக்கிறாரே?

பதில்:- (செய்தியாளர்களிடம் காட்டி) இது ஜெயலலிதா அறிக்கை. அதில் உண்மை எப்படி வெளி வந்திருக்கிறது என்பதைப் பாருங்கள். "மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வந்துள்ள முடிவு எதிர்பார்த்தது தான்'' - ஆக இவர்கள் இந்த முடிவினை எதிர்பார்த்துத் தான் இருந்திருக்கிறார்கள். மேலும் அறிக்கையிலே சொல்கிறார், "இப்போது வந்துள்ளது மக்கள் தீர்ப்பு அல்ல, இது. தி.மு.க.வினரின் திட்டமிட்ட சதி. நியாயமாகத் தேர்தலை நடத்தி இருந்து அதில் அ.தி.மு.க. இயல்பாக வெற்றி பெற்றிருந்தால் தான் ஆச்சரியப்பட வேண்டும்.'' இந்த அறிக்கையில் அவரே கையெழுத்திட்டுள்ளார்.

அழகிரிக்கு பதவி?

கேள்வி:- இந்த இடைத் தேர்தல் வெற்றிக்கு முழு முதல் காரணம் அழகிரி என்று அனைவருமே கூறுகிறார்கள். எனவே அவருக்கு கட்சியிலே பதவிப் பொறுப்பு ஏதாவது கொடுக்கப்படுமா?

பதில்:- அவருக்கு என்ன வேண்டுமென்று கேளுங்கள்.

கேள்வி:- வெற்றி பெற்றவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். மகத்தான வெற்றி. அவரது வெற்றிக்கு நீங்கள் ஆதரவு தெரிவித்தீர்கள். ஆனால் எல்லா எதிர்க்கட்சிகளும், ஏன் தேர்தல் ஆணையம் கூட உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் குறி வைத்துத் தாக்குகிறார்களே?

பதில்:- அதில் நான் பெருமையடைகிறேன். நானும் என்னுடைய குடும்பத்தினரும் அதற்காக பெருமையடைகிறோம்.

உணர்ந்து செயல்படுவோம்

கேள்வி:- இந்த வெற்றியின் மூலமாக ஆட்சிக்கு கூடுதலாகப் பொறுப்பு தரப்பட்டிருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்:- மக்கள் பொதுத் தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை கண்கூடாகப் பார்க்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தான் எங்கள் அணிக்கு வெற்றியைத் தந்துள்ளார்கள். தொடர்ந்து இதனைக் கட்டிக் காக்கும் பொறுப்பு எங்கள் அணிக்கு இருப்பதை உணர்ந்து செயல்படுவோம்.

விஜயகாந்த் கட்சிக்கு கூடுதல்

கேள்வி:- விஜயகாந்த் கட்சிக்கு கடந்த தேர்தலில் கிடைத்ததை விட இந்தத் தேர்தலில் அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்:- எனக்குத் தெரியாது. நான் அந்தக் கணக்கைப் பார்க்கவில்லை.

கேள்வி:- இன்று காலையில் வெளிவந்த "ஆனந்த விகடன்'' பத்திரிகையில் தலையங்கத்தில் வெற்றி மட்டுமல்ல, அதை அடைகின்ற வழியும் முக்கியம், காங்கிரஸ் வெற்றி பெற்றால் கூட, அது பெருமையடையத் தக்க வெற்றி அல்ல என்று எழுதியிருக்கிறார்களே?

பதில்:- இதற்கு இன்று திராவிடக் கழகத் தலைவர் வீரமணி விடுதலையில் விளக்கமாக பதில் எழுதியிருக்கிறார்.

காங்கிரசுக்கு கூடுதல் இடம்

கேள்வி:- சட்டப் பேரவையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக ஒரு இடம் கிடைக்கச் செய்திருக்கிறீர்கள். இதற்கு மேலிடத்திலிருந்து நன்றி தெரிவித்திருக்கிறார்களா?

பதில்:- வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

4 இடங்களில் போட்டி

கேள்வி:- சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு இடங்களில் போட்டியிட்டது பற்றி நடைபெறும் வழக்கில், நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்ட பிறகும், தேர்தல் ஆணையம் நேரடியாக நடவடிக்கை எடுக்காமல், அந்தத் தீர்ப்புக்கு விளக்கம் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதைப் பற்றி?

பதில்:- நீதி மன்றத்தில் இது போன்ற ஒரு விளக்கத்தைக் கேட்க ஒரு வழக்கறிஞர் முற்பட்டதற்கு அடிப்படை காரணம் என்ன என்பது அறியப்பட வேண்டிய ஒன்று. இந்தக் குற்றச்சாட்டுகளை வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இது போன்ற விளக்கங்களைக் கேட்பது - அதே நீதி மன்றத்தில் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், எம்.பி., எழுப்பிய கேள்வியில் காணப்படும் ஐயப்பாட்டை உறுதிப்படுத்துகிறது.

தி.மு.க.வுக்கு எதிராக

கேள்வி:- தேர்தல் ஆணையம் தொடர்ந்து தி.மு.கழகத்திற்கு எதிராகவும், ஜெயலலிதாவைக் காப்பாற்றுகின்ற முயற்சியிலும் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?

பதில்:- அது இன்று நேற்றல்ல. பொதுத் தேர்தலுக்கு முன்பே பொன்னேரி தொகுதியில் 20 ஆயிரம் போலி வாக்குகள் சேர்க்கப்பட்டு, அது வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டு - அந்த உண்மையைக் கண்டறிந்த பிறகு, அந்தப் பகுதியின் ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாஸ்கர் சுந்தரம், அந்த விவரங்களை என்னிடத்திலே ஆதாரத்துடன் கொண்டு வந்து காட்டி விளக்கினார். நான் உடனடியாக அவரையும், தி.மு.கழக தலைமைக் கழகத்தில் உள்ளவர்களையும் தமிழகத் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடம் அனுப்பி வைத்து விவரங்களைக் கூறுமாறு சொன்னேன். அவர் அந்தப் புகாரை ஏற்றுக் கொண்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்படி பல புகார்கள் தி.மு.க. கூட்டணியினரால் தரப்பட்டவை கேட்பாரற்றுப் போய் விட்டன. அந்த வரிசையில் தான் நான்கு இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்த விவகாரம் இடம் பெறுமோ என்று சந்தேகப்படுகிறேன்.

தி.மு.க.வாக இருப்பது தான்

கேள்வி:- தேர்தல் ஆணையத்திற்கும், தி.மு.கழகத்திற்கும் இடையே இப்படிப்பட்ட உரசல் நடப்பதற்கு என்ன காரணம்?

பதில்:- நாங்கள் தி.மு.கழகமாக இருப்பது தான்!

ராமதாஸ் போராட்டம்

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் கோட்டைக்குள்ளே வந்து உங்கள் அனுமதியோடு சுயநிதி கல்லூரிகள் அதிகமாக கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து போராடப் போவதாக அறிவித்திருக்கிறாரே, அதற்கு இன்று அமைச்சர் பொன்முடி கூட அது மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குட்பட்டது, எனவே டெல்லியில் போராடலாம் என்று கருத்து தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- "கோட்டைக்குள்ளேயே என் கால் படாது'' என்று ஒரு முறை சத்தியமே செய்திருக்கிறார், டாக்டர் ராமதாஸ். இப்போது பட்டால், அது வரவேற்கப்பட வேண்டியது தானே. ஆனால் எதற்காக என்பது பிரச்சினை. அதற்கு தான் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்திருக்கிறார்.

கேள்வி:- சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் வாங்கப்படுவதாக டாக்டர் ராமதாஸ் சொல்கிறார். அதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை. யாரும் அப்படிப்பட்ட புகார் கூறுவதில்லை என்று பொன்முடி சொல்கிறார். இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அப்படி அதிகக் கட்டணம் கொடுப்பவர்கள், புகார் கொடுத்தால், ஆதாரங்களோடு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

அமெரிக்க கப்பல்

கேள்வி:- அணுசக்தி கப்பல் ஒன்று அமெரிக்காவிலிருந்து சென்னை வருவதைப் பற்றி பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அரசு என்ன செய்யப்போகிறது?

பதில்:- மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட பிரச்சினை இது. செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது. அது குறித்து போராட்ட அறிவிப்புகளும் வருகின்றன. நாங்கள் இன்னும் அதுபற்றி எங்கள் உயர் நிலைக் குழுவில் சிந்திக்கவில்லை.

கேள்வி:- குடியரசு தலைவர் தேர்தல் உங்கள் கூட்டணி சார்பாக போட்டியிடும் பிரதீபா பட்டீல் அவர்கள் மீது ஊழல் புகார்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே?

பதில்:- பிரதமரே அதை மறுத்திருக்கிறார்.

கேபிள் டி.வி. அரசுடமை?

கேள்வி:- டாக்டர் ராமதாஸ் அரசு சார்பில் கேபிள் நெட் ஒர்க் ஆரம்பிக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- இதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறதா? மாநில அரசுக்கு இருக்கிறதா? என்பதே கேள்விக் குறியாக உள்ளது. மத்திய மந்திரி ராஜா, அது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்கிறார். எனவே இதை ஆராய்ந்து - அது மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டு வந்தால், அதைத் தேசியமயமாக்குவதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபடுவோம்.

தீவிரவாத பயிற்சி

கேள்வி:- தேனியில் 600 மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி கொடுக்கப்பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?

பதில்:- அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்படுகிறது. நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காஞ்சீபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தல்கள் நடைபெற்றன. அப்போது ஆதாரப்பூர்வமாக தேர்தல் விதிமுறை மீறல்கள் எல்லாம் சொல்லப்பட்டன. ஆனால் மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் அந்த அளவிற்கு விதிமுறை மீறல்கள் இல்லையே என்று தேர்தல் ஆணையரிடம் நாங்கள் கேட்ட போது, இது குழந்தைத் தனமான வாதம் என்றும், இரண்டையும் ஒப்பிட்டுக் கேட்கக் கூடாது என்றும் கூறியதைப் பற்றி?

பதில்:- அவர் சொன்னது குழந்தைத் தனமா? நீங்கள் சொன்னது குழந்தைத் தனமா என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்.

துணை ஜனாதிபதி

கேள்வி:- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதில்லை என்று சொல்லியிருக்கிறார்கள். தி.மு.க. போட்டியிடுமா?

பதில்:- தி.மு.க. இதுவரையில் அந்தக் கோரிக்கை வைக்கவில்லை.

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

"தினத்தந்தி"

இராமதாஸ் Vs திமுக: "மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராடத்தயாரா?"

பொறியியல் கல்லூரியில் சேருவதற்கு அதிக பணம் வசூல் செய்வதாக குற்றம்சாட்டும் டாக்டர் ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறையை எதிர்த்து போராட தயாரா என்று அமைச்சர் பொன் முடி கேள்வி எழுப்பினார்.

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கல்வி கட்டணம்

தமிழகத்தில் உயர்கல்வித்துறை இருக்கிறதா? என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். அவருக்கும் உங்களுக்கும் தெரியப்படுத்துவற்காக சில விளக்கங்களை தெரிவிக்க இருக்கிறேன். உயர் கல்வித்துறை மூலம் ஓராண்டில் செயல்படுத்தப்பட்ட முக்கிய சாதனைகளை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

பல்வேறு சங்கடங்கள் இருந்தாலும் ஒரு குழு அமைத்து நுழைவுத்தேர்வை ரத்து செய்தது பெரிய சாதனையாகும். அரசு பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டணத்தை ரூ.12,500-ல் இருந்து ரூ.7,550 ஆக குறைப்பதற்கான நடவடிக்கையை கடந்த கல்வி ஆண்டு முதலே எடுத்து இருக்கிறோம்.

ரூ.27 கோடி ஒதுக்கீடு

அண்ணாபல்கலைக்கழக நிர்வாகம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக்கில் உள்ள 192 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அரசு பாலிடெக்னிக்கில் சேரும் முதல் ஆண்டு மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் இலவச பாட புத்தகமும் வழங்கப்பட்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் ஷிப்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டதால் இதுவரை அரசு கல்லூரிகளில் 30 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலை மாறி குறைந்த பட்சம் 50 ஆயிரம் மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் கல்வி கட்டணம் அறவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 542 அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமுதாய கல்லூரிகளை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அரசு கல்லூரிகளில் வகுப்பறைகள் கட்டுவதற்காக ரூ.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தனியாரிடம் 250 பொறியியல் கல்லூரி

கடந்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீதம் இடங்களையும் சிறுபான்மை பொறியியல் கல்லூரியில் 50 சதவீத இடங்களும் அரசுக்கு ஒதுக்கப்பட்டு நீதிமன்ற சிக்கல் இல்லாமல் பெற்று உள்ளோம். மனசாட்சி உள்ளவர்கள் இதை பாராட்டுவார்கள். ஒரு மூத்த அரசியல்வாதியான டாக்டர் ராமதாஸ், ராமன் குழு உள்ளதா? சுப்பிரமணியம் குழு உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய கமிட்டிகள் நியமிக்கப்படும் வரை இந்த கமிட்டிகள் நடைமுறையில் இருக்கும் என்று ஏற்கனவே பத்திரிகைகளில் செய்தி வெளியாகி உள்ளது. 39 சதவீதம் இடம் நிர்வாகத்திற்கு ஒதுக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தனியாரிடம் மொத்தம் 250 பொறியியல் கல்லூரிகள் உள்ளது.

புகார்கள் வரவில்லை

சென்னையை சுற்றியுள்ள பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவலாக செய்திகள் இருந்த போதும் தனிப்பட்ட முறையில் பெற்றோர்களிடம் இருந்தோ, மாணவர்களிடம் இருந்தோ எங்களுக்கு எந்த விதமான ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வரவில்லை.

டாக்டர் ராமதாசிடம் புகார் செய்த பெற்றோர் சங்கத்தினர் மாணவர்கள் எந்த கல்லூரியில் யார் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று கூறினால் தகுந்த நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது.

250 பொறியியல் கல்லூரிகளில் 150-க்கும் மேற்பட்ட கல்லூரி ராமன் குழு, சுப்பிரமணியன் குழு மூலமாக ரூ.39 ஆயிரம், ரூ.32 ஆயிரம் என்ற கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. சில கல்லூரிகள் இதை விட குறைவான கட்டணங்களை வசூல் செய்கிறார்கள். டாக்டர் ராமதாஸ் எந்த கல்லூரியில் அதிக கட்டணம் வசூல் செய்கிறார்கள் என்று எழுதிக்கொடுத்தால் நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம்.

மற்ற மாநிலங்களில் தமிழ்நாட்டை விட உயர் கல்வி கட்டணம் குறைவாக இருந்தது என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். கேரளாவில் உள்ள நீதிமன்ற தீர்ப்பின் படி கல்விக்கட்டணம் ரூ.75 ஆயிரம் வசூல் செய்கிறார்கள். கடந்த ஓராண்டு காலமாக அரசு எடுத்த கடும் நடவடிக்கையின் காரணமாக கல்வி கட்டணங்கள் குறைவாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.

ராமதாஸ் போராட தயாரா?

கிராமப்புற மாணவர்கள் பயன் அடையும் வகையில் உயர் கல்வித்துறையில் பல்வேறு திட்டங்களை செய்து வருகிறோம். பொறியியல் மருத்துவ கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் முழுமையாக மாநில அரசிடம் இல்லை. டெல்லியில் நடந்த மாநாட்டில் மாநிலத்திற்கு முழுமையான அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நான் கூறியிருக்கிறேன். இந்தியா முழுவதும் பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ.யிடம் தான் உள்ளது.

எனவே டாக்டர் ராமதாஸ் எம்.சி.ஐ., டி.சி.ஐ., பி.சி.ஐ., எ.ஐ.சி.டி.ஈ. ஆகிய குழுக்களின் அதிகாரத்தை குறைக்க மத்திய சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு போராட முன் வந்தால், முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் அனுமதி பெற்று நானும் போராட தயாராக இருக்கிறேன்.

மாநில அரசுக்கு முழுமையான அதிகாரம் வேண்டும். மேலே குறிப்பிட்ட நிர்வாக அதிகாரத்தை கட்டுப்படுத்தி, தடுத்து நிறுத்த டாக்டர் ராமதாஸ் போராடினால் அவருக்கு பின்னால் நானும் போராட்டத்தில் கலந்து கொள்வேன்.

நாங்கள் எடுத்த நடவடிக்கை நிதானமானது. நிரந்தரமாக மாணவர்களுக்கு பலன் அளிக்க கூடியது.

எதிர்காலத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு பலன் கிடைக்கும் வகையில் அரசு எல்லா விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கல்வியின் தரம் உயர்த்துவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

ராமதாசிடம் கேட்க வேண்டும்

கேள்வி:- கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க. இப்படி ஒருவர் மீது ஒருவர் புகார் கூறலாமா?

பதில்:-இது பற்றி டாக்டர் ராமதாசிடம் தான் கேட்க வேண்டும்.

கேள்வி:-கிராமப்பகுதி மாணவர்களுக்கு முன்பு வழங்கப்பட்டது போல் 15 சதவீத இட ஒதுக்கீட்டை தொழிற்கல்லூரிகளில் வழங்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:-இந்த முறையை நாங்கள் தான் கொண்டு வந்தோம். இந்த முறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அது நிறுத்தப்பட்டு விட்டது.

கேள்வி:-பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் சேருவதற்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லையா?

பதில்:- ஒரு குற்றச்சாட்டுக்கூட வரவில்லை. உயர் கல்வித்துறை இயக்குனருக்கு புகார் வந்தால் கூட அவர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து இருப்பார்.

அதிக கட்டணம்

கேள்வி:- 250 பொறியியல் கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் கூட அதிக கட்டணம் வசூல் செய்தார்கள் என்பதற்கான ஆதாரம் இல்லையா?

பதில்:- ஆதாரம் இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து இருப்போம். டாக்டர் ராமதாசுக்கு எழுதியிருக்கும் குற்றச்சாட்டை எங்களுக்கு எழுதியிருந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். அதே நேரத்தில் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஆய்வு செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அந்த கல்லூரிகளில் நிர்வாகத்தில் நாங்கள் தலையிட்டால் நீதிமன்றத்திற்கு சென்று விடுவார்கள்.

கேள்வி:- பொறியியல் கல்லூரிகளில் கண்காணிப்பதற்காக தனி குழு அமைக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

பதில்:- இதற்காக இயக்குனர் தலைமையில் ஒரு குழு உள்ளது. இந்த குழுவிடம் புகார் கூறினால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் பொன்முடி கூறினார்.

"தினத்தந்தி"

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு.

103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் கடந்த வியாழக்கிழமை மாலை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தார்.

டெல்லியில் தனது 61 வயது மகன் வீட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென்று அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார்.

அவரது உடலில் மளமள வென பற்றிய தீயை அணைத்த மகனும், மருமகளும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே பாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி காந்தி கிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். "தன் சக காலத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் இறந்து விட்டதால் வாழ்க்கையில் தனிமையில் விடப்பட்டது போல் எனது தாய் உணர்ந்தாள்.

இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது போல் காணப்பட்டார். "இனி நான் எதுக்கு வாழணும்'' என்று அடிக்கடி கூறி வந்தார்.எனவே அந்த எண்ணங்களே அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்க வேண்டும்'' என்று மொங்கிபேனின் மகன் கூறினார்..

சைதப்பேட்டை தீவிபத்தில் 200 குடிசைகள் சாம்பல்.

சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் அருகே குடிசை வீடுகள் ஏராளம் உள்ளன. கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்கள் சிறுசிறு குடிசைகளை போட்டு வசித்து வருகிறார்கள். அதிகாலை 2 மணியளவில் குடிசை ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

அடுத்தடுத்துள்ள வீடுகளிலும் தீ மளமளவென பற்றி எரிந்தது. வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த தொழிலாளிகள் தங்களது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

தகவல் அறிந்து தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்தனர். தீ மேலும் பரவாமல் அணைத்தனர். தீயணைப்பு வண்டிகள் குடிசைகள் இருக்கும் பகுதிக்குள் செல்ல முடியாததால் சற்று தூரத்தில் நின்று பைப் மூலம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 200 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

வீட்டில் இருந்த பீரோ, சமையல் பாத்திரங்கள், தட்டுமுட்டு சாமான்கள் அனைத்தும் சேதமடைந்தன. உடமைகளை பறி கொடுத்த பெண்கள் அழுது கொண்டே தங்களது வீடுகளின் முன்பு சோகமாக உட்கார்ந்து இருந்தனர். சிம்னி விளக்கு கீழே விழுந்து குடிசையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.

தீ விபத்து நடந்த பகுதியை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி நேரில் சென்று பார்வையிட்டார். வீடுகளை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அந்த பகுதி கவுன்சிலர் எம். மகேஷ்குமார் மாம்பலம்- கிண்டி தாசில்தார் ஷியாம் சுந்தர், மண்டல உதவி ஆணையர் முத்துகருப்பன் ஆகியோர் மேற்பார்வையில் நிவாரண உதவி உடனடியாக வழங்கப்பட்டன. ரூ.2000 ரொக்கமும், அரிசி, வேட்டி- சேலை வழங்கப்படுகிறது. வீடு களை இழந்தவர்கள் சைதாப் பேட்டை அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவும் கொடுக்கப்பட்டது.

மாலைமலர்

பாரத ஸ்டேட் வங்கியில் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு வாங்கியது

பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து வங்கிகளை கண்காணிக்கும் ரிசர்வ் வங்கியின் பங்குகளை அரசு கையகப்படுத்தும் வண்ணமாக இந்திய அரசு, தனது மிகப்பெரிய நேரடி வாங்கலில், ரூ35,531 கோடி கொடுத்து வாங்கியுள்ளது. இதேபோல மத்திய வங்கி மற்றும் இரு அரசுத்துறை நிதியமைப்பு( NABARD,NHB) களிலிருந்து விலகிக் கொள்ள விரும்புகிறது.
Centre completes buyout of RBI stake in SBI

சென்னை: பிரதீபாவுக்கு ஆதரவாக நாளை பேரணி

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியில் கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சி மகளிரும் பங்கேற்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பேரணியில் பங்கேற்பதற்காக பிரதீபா பட்டீல் நாளை மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

பிரதீபா பட்டீலுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த பேரணி நாளை மாலை 3 மணிக்கு மன்றோ சிலை அருகில் இருந்து தொடங்குகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணியை முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் ஆகியோர் மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்கள்.

இதற்காக அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் நடுவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை நடைபெறும் பேரணியையொட்டி பாது காப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கமிஷனர் லத்திகாசரண் கூறியதாவது:-

நாளை நடைபெறும் பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து பெண்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதனை வைத்து பார்த்தால் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 கம்பெனி சிறப்பு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள் ளனர். மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி சுமார் 4 மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பேரணி நடைபெறும் பாதையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது

மாலைமலர்

குவைத்: தீவிபத்தில் மூன்று இந்தியர்கள் பலி

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 இந்தியர்கள் பலியானார்கள். குவைத்தில் அபு ஹலிபா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த வீட்டில் 6 இந்தியர்கள் வசித்து வந்தனர். தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உடல் கருகி பலியானார்கள். ஒருவர் காயமடைந்துள்ளார்.


தினமலர்

RJD MP ஷாஹாபுதீனுக்கு மூன்றுவருட கடுங்காவல்

ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மது ஷாஹபுதீன் மீது திருடப்பட்ட வண்டியை வைத்திருந்ததாக தொடர்ந்த வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து போதுமான சாட்சியங்கள் இல்லாமையால் விடுவிக்கப்பட்டார்.

The Hindu News Update Service

முன்னாள் தில்லி முதல்வர் சாஹிப்சிங் வர்மா மரணம்

பிஜேபி தலைவரும் முன்னாள் தில்லி முதல்வராகவும் வாஜ்பேயியின் நடுவண் அரசில்
தொழிலாளர் அமைச்சராகவும் இருந்த சாஹிப்சிங் வர்மா இராஜஸ்தானின் ஆள்வார் மாவட்டத்தில் இன்று நடந்த ஒரு கார் விபத்தில் மரணமடைந்தார். இவ்விபத்து இன்று 2:30 மணிக்கு ஜெய்பூரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் ஒரு மினி டிரக்குடன் ஏற்பட்டதாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஊரகம்) பிசி நொய்லா கூறினார்.
மேலும்....Sahib Singh Verma: Jat with a passion for poetry- Hindustan Times

சிவகங்கை நகராட்சித்தலைவர் கார் வெடிகுண்டால் கொலை

சிவகங்கை நகராட்சித்தலைவர் காரில் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சி அலைகளைப் பரப்பியுள்ளது.

நகராட்சி தலைவரான முருகன் நேற்று தனது ஸ்கார்பியோ காரில் சென்று கொண்டிருந்தபோது டிரைவர் சீட்டுக்கு கீழே வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

இதில் முருகன் அந்த இடத்திலேயே பலியானார். டிரைவர் பாண்டி தூக்கி வெளியே வீசப்பட்டார். குண்டு வெடித்த காரின் அருகே நின்றிருந்த பஸ்சின் கண்ணாடிகளும் உடைந்து சிதறி பலர் காயமடைந்தனர். மேலும் அந்தப் பக்கமாக நடந்து சென்ற பலரும் காயமடைந்தனர்.

டிரைவர் பாண்டி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச் சம்பவத்தால் சிவகங்கையில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காரில் வெடித்தது சக்தி வாய்ந்த குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இதை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்கச் செய்துள்ளனர்.

திமுகவில் இருந்த முருகனுக்கு கடந்த உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டார். கடந்த நவம்பர் 13ம் தேதி நடந்த தலைவர் தேர்தலில் 15 கவுன்சிலர்கள் ஆதரவுடன் முருகன் வெற்றி பெற்றார்.

அதே நேரம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் முருகன் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதனால் சுயேட்சை தலைவராக செயல்பட்டு வந்தார்.

இவருக்கும் திமுக நகரச் செயலாளர் முத்துகிருஷ்ணன் தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நடப்பது வழக்கம். மேலும் கேபிள் டிவி தொழில் போட்டி காரணமாக முருகனின் நண்பர் நாகராஜ் என்பலருக்கும் திமுக கவுன்சிலர் ஒருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது.

இவர்கள் தவிர அப் பகுதியில் வேறு சில கட்சியினருடன் பல விவகாரங்களில் மோதியுள்ளார் முருகன்.

இந் நிலையில் தான் காரில் குண்டு வைத்து முருகன் கொல்லப்பட்டுள்ளார்.

அவருடைய கார் இரவு நேரத்தில் மேல்நிலை தொட்டிக்கு கீழே நிறுத்தப்படுவது வழக்கம். அங்கு தான் காரில் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

காரில் குண்டு வைத்து அதை ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யும் அளவுக்கு சிவகங்கை போன்ற சிறிய ஊருக்குள் டெக்னாலஜி வந்து நுழைந்திருப்பது பெரும் அதிர்ச்சியைப் பரப்பியுள்ளது. இதன் பின்னணியில் வெடிகுண்டுகளை கையாளும் பெரிய அளவிலான கூலிப் படை இருக்கலாம் என்று தெரிகிறது.

தட்ஸ் தமிழ்

நிமிட்ஸ் போர்கப்பல் குறித்து கருத்து தெரிவிக்க அமெரிக்கா மறுப்பு.

அமெரிக்க போர் கப்பல் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க அமெரிக்கா மறுத்துள்ளது. அமெரிக்கா வின் அணு சக்தி போர் கப்பல் "யு.எஸ்.எஸ்.நிமிட்ஸ்'நாளை காலை சென்னை துறைமுகத்தில் இருந்து 10 கடல் மைல் துõரத்தில் நிறுத்தப்படுகிறது. இந்த கப்பல் வருவதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இது குறித்து தெளிவான தகவல் எதையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை.இந்திய கடலோர எல்லையில் தீங்கு விளைவிக்கும் பொருள்களை இக்கப்பல் குவிக்கக் கூடும். எனவே, இந்திய கடலோர எல்லைக்குள் நுழைவதற்கு முன்பாக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று மத்திய அரசு தெளிவாக குறிப்பிட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா இது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நிமிட்ஸ் அணுசக்தி போர் கப்பலினால் தீங்கு ஏற்படுமா என அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் கேட்டதற்கு எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

பிரித்தானிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்மணி

பிரதமர் ப்ரௌனின் முதல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீதி வடேரா வெளியுறவு வளர்ச்சிக்கான உதவி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். UBS வார்புர்க் வங்கியில் 14 வருடங்கள் பணியாற்றியுள்ள வடேராயின் பணிகளில் எவ்வாறு வளரும் நாடுகளின் கடன் பிரச்சினைகளை தீர்ப்பது என்று அந்த அரசுகளுக்கு அறிவுரை வழங்குவதும் அடங்கும். பிரித்தானிய அரசில் பங்கேற்கும் மூன்றாவது இந்திய பண்பாட்டைச் சேர்ந்தவராவார்.
மேலும்..The Hindu News Update Service

இரயில்நிலையங்களில் வைஃபை வசதி

இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான ரைல்டெல் 500 இரயில்வே நிலையங்களில் கம்பியில்லா இனையவசதியான வைஃபை நுட்பத்தை நிறுவ உள்ளது. முதற்கட்டமாக 50 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கும் இப்பணி அடுத்து ஜெய்பூர் நகர நிலையத்தை எடுத்துக் கொள்ல இருக்கிறது. பெங்களூருவின் ஏர்லிங்க் நிறுவனமும் அமெரிக்க ரொன் டோக் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை அமலாக்க இருக்கின்றன.

மேலும்... The Hindu News Update Service

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும் சாலைகளும் நீர்தேங்கி பொதுமக்கள் வாழ்வை பாதித்துள்ளது. மும்பையின் உயிர்நாடியான இரயில் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. வெளியூர் வண்டிகள் புறப்படுவதும் வந்து சேருவதும் தாமதமாகின்றன. ஜூலை 27, 2005க்க்குப்பின் எடுத்துக் கொண்ட பிரசவ வைராக்கியங்கள் அவை எழுதப்பட்ட தாளிலேயே உள்ளன. வானிலை நிலையம் வழமையான சொற்றொடராக அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என ஆருடம் சொல்லி மும்பைகாரர்களை கிலியடைச் செய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தீவின் தெற்குமுனையிலுள்ள கொலாபாவில் 146.8மிமீ மழையும் மேற்குபுறநகர் என்று பழக்கத்தில்அழைக்கப்படும் மத்தியபகுதியின் சான் டாகுருஸில் 174.1 மி.மீ மழையும் பதிவாயுள்ளன.

DNA - Mumbai - Heavy rains strike city, transport networks thrown out of gear - Daily News & Analysis

-o❢o-

b r e a k i n g   n e w s...