.

Thursday, May 31, 2007

க்வாண்டனமோவில் சவூதி நாட்டு கைதி தற்கொலை

அமெரிக்க ஆளுகைக்குட்ப்பட்ட க்யூபாவின் க்வாண்டனமோ விரிகுடா சிறைச்சாலையில் சவூதி அரேபியாவை சேர்ந்த சிறைக்கைதி உயிரை மாய்த்துக் கொண்டார். கடந்த ஆண்டு ஜூனில் யெமனியர் ஒருவரும் சவூதி நாட்டவர் இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

கடந்த ஐந்தாண்டுகளாக இயங்கும் க்வாண்டனமோவில் 380 பேர் 'போர்க்கால குற்றங்களை'க் காரணங் கற்பித்து பிணையாக இருக்கிறார்கள்.

BBC NEWS | Americas | Guantanamo Saudi 'kills himself'

'ஹிந்து அல்லாதவர்கள் குருவாயூர் கோவிலுக்குள் செல்லமுடியாது'

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணன் கோவிலில் இந்து மதத்தவர்களைத் தவிர பிறருக்கு நுழைய அனுமதியில்லை என்று தலைமை பூசாரி ராமன் நம்பூதிரி தெரிவித்தார். எனினும் அரசு சட்டம் இயற்றினால், அ-ஹிந்துக்களை தரிசிக்க விடலாம் என்றார்.

முந்தைய சற்றுமுன்: குருவாயூர் கோவில் மீது வழக்கு

NDTV.com: No entry of non-Hindus into temple: Chief priest

ச: எம்.பி முதல்வராகலாமா? - மாயாவதி மூலம் தெரியும்!

எம்.பி.யாக இருப்பவர் முதல்வராகவோ, மாநில அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்கிற 'மரபு'க்கிணங்கி, மாநிலங்களவை எம்.பியாக இருந்துக்கொண்டே உ.பி. முதல்வராகியுள்ள மாயாவதிக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது!

ஹிந்து தனியார் சட்ட வாரியத்தின் அஷோக் பாண்டே என்பவர் இவ்வாறு மனுதாக்கல் செய்துள்ளார். நீதிமன்றத்தின் வழிகாட்டும் ஆணையை அளிக்கும் படி அவர் கோரியுள்ளார். மாயாவதியுடன், அவர் அமைச்சரவையிலுள்ள சதீஷ் சந்திர மிஸ்ரா என்பவரும் இதில் பிரதிவாதியாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

சட்ட மன்ற தேர்தலில் நிற்கும் முன் தங்கள் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை விட்டும் இவர்கள் விலகவில்லை என்பது அடிப்படை குற்றச்சாட்டு!

பி.டி.ஐ செய்தி

ஃப்ரெஞ்ச் ஓபன்: சானியா வெளியேறினார்!

முதல் சுற்றில் நேர்கணக்குகளில் ஜெயித்திருந்த இந்தியாவின் இளம் டென்னிஸ்
வீராங்கனை சானியா மிர்ஸா, ஃப்ரெஞ்ச் ஓபன் இரண்டாம் சுற்றில் செர்பியாவின் அனா இவானோவிக்-கிடம் 6க்கு1, 6க்கு4 என்ற நேர்கணக்குகளில் தோல்வியை தழுவினார்.
இதன் மூலம் இப்போட்டியிலிருந்து அவர் ஒற்றையர் ஆட்டங்களில் வெளியேற நேர்ந்துள்ளது.
சானியாவின் நேற்றைய முதல் சுற்று வெற்றி, ஃப்ரெஞ்ச் ஓபனில் அவருக்கு முதலாவதாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்பான முந்தைய 'சற்றுமுன்'

'சற்றுமுன்'னுக்காக வாசகன்

ச: ஆயிரம் கோழிகள் தீக்கிரை

வேலூர் அருகே இரு கோழிப்பண்ணைகளில் மின்கசிவு மூலமாக எழுந்த தீ விபத்தில் ஆயிரம் கோழிகள் வரை தீக்கிரையாயின. 2400 கோழிகள் இருந்த ஓலை வேய்ந்த பண்ணையில் தீபிடித்ததும் தீயணைப்பு வீரர்கள் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஒரு பண்ணை முழுவதுமாக சாம்பலானது.

The Hindu News Update Service

ச: NDTV expose': தில்லி உயர்நீதிமன்றம் விசாரணை

தில்லியின் BMW கார்மோதல் வழக்கில் அரசுதரப்பு சாட்சியை கலைக்க அரசு வழக்குரைனரும் எதிர்தரப்பு வழகுரைனரும் ஈடுபட்டதை இரகசிய ஒளிப்படம் எடுத்து நேற்று NDTV நிறுவனம் வெளியிட்டது. இதனையடுத்து வக்கீல்களின் தார்மீக கொள்கைகள் குறித்தும் விவாதம் நடத்தியது.

BMW case: Lawyers collude, stung : hit-and-run, BMW case, Sanjeev Nanda, sting operation, news channel, prosecution, defence, nexus, RK Anand : IBNLive.com : CNN-IBN

தில்லி உயர்நீதிமன்றம் இந்த விவகாரத்தை தானாகவே கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த வழக்கின் எல்லா ஆவணங்களையும் ஜுன்11 அன்று காண விழைந்துள்ளது.

The Hindu News Update Service

ச: இருட்டில் ஆடிய டென்னிஸ்: பெடரர் கோபம்

இந்த முறை எப்படியும் ரோலண்ட் காரோசில் வென்றுவிடவேண்டும் என்று ஆடும் முதல் ஆட்டக்காரர் பெடரர் தான் இரவு 9:30 வரை ஆடிவேண்டியிருந்தது குறித்து ஆட்டநிர்வாகிகளிடம் ஆதங்கப் பட்டார். தனது இரண்டாம் சுற்றில் 6-1,6-2,7-6 (10/8) என்ற கணக்கில் வென்றாலும் எதிராளி தியரி அசியொனிடம் கைகுலுக்கும்போது உன்னைக் காணமுடியாமல் கைகுலுக்குகிறேன் என்று தன் கடுப்பை வெளிப்படுத்தினார்.

DNA - Sport - Roger Federer rages at French Open's heart of darkness - Daily News & Analysis

ச:இணையத்தில் 'குப்பைமின்னஞ்சல்கள் மன்னன்' கைது

நமக்கு வருகின்ற ஓரிரண்டு மின்னஞ்சல்களையும் தன் கூட்டத்தில் மறைத்துவிடும் குப்பை மின்னஞ்சல்களில் பெரும்பாலானவைகளுக்குக் காரணமான ராபர்ட் சோலொவே என்ற அமெரிக்க வலையுல வணிகரை காவலர்கள் கைது செய்துள்ளனர். இலட்சக்கணக்கான குப்பைகளுக்குக் காரணமான இவரை குப்பைமின்னஞ்சல்களின் மன்னன் என்று அழைக்கிறார்கள்.
மேலும்... DNA - Evolutions - US Internet 'Spam King' arrested - Daily News & Analysis

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின.

அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார்.

பத்தாம் வகுப்பு தேர்வில் செங்கல்பட்டை சேர்ந்த அக்ஷயா மாநிலத்திலேயே முதலாவதாக வந்துள்ளார். இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாயின. மொத்தம் 8,67,707 மாணவ, மாணவிகள் தேர்வெழுதினர். இதில் 79.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இது 77.6 சதவீதமாக இருந்தது. இவர்களில் மாணவிகள் 83 சதவீதமும் மாணவர்கள் 76 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். செங்கல்பட்டு புனித மேரி பெண்கள் மேல் நிலைப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.அக்ஷயா 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலாவது இடத்தைப் பிடித்துள்ளார். சேரன்மாதேவியைச் சேர்ந்த அமலி பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஜெசீமா சுலைஹாவும், திருவாரூர் அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த சிவகாமசுந்தரியும், புந்துச்சேரி விவேகானந்தா உயர் நிலைப் பள்ளியைச் சேர்ந்த திவ்யபாரதியும் 489 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். தக்கலை அமலா பள்ளியைச் சேர்ந்த லம்சே, தூத்துக்குடி ஸ்பிக் நகர் பள்ளியைச் சேர்ந்த பாலவித்யா, மயிலாடுதுறை டிபிடிஆர் பள்ளியைச் சேர்ந்த ஆர்த்தி, கூடலூர் புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோர் 488 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளனர். கணிதப் பாடத்தில் 2,512 பேரும், அறிவியலில் 66 பேரும், சமூக அறிவியலில் 10 பேரும் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதப் பாடத்தில் 13,033 பேர் நூற்றுக்கு நூறு பெற்றனர். இந்த முறை அது 2,512 ஆகக் குறைந்துவிட்டது.

விமானப்பணி பெண்களிடம் ரகளை - சென்னையர் கைது!

சென்னையை சேர்ந்தவர் திருமூர்த்தி பூமையா. சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த சில தினங்களுகாக முன் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் லண்டலில் இருந்து அமெரிக்காவின் பிலடெல்பியாவுக்கு சென்றார். அப்போது இவர் விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்துள்ளார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து விமானம் பிலடெல்பியாவில் தரையிறங்கயதும் போலீஸார் அவரை கைது செய்தனர். அவர் மீது விமானப் பணிப் பெண்களிடம் ரகளை செய்ததாகவும், ஊழியர்களை தாக்கியதாகவும், வேலை செய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னர் பிலடெல்பியா நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 69 நாள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

தட்ஸ் தமிழ்

அர்ஜுன் சிங்குக்கு மஹாத்மா காந்தி விருது

மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கு காந்தி விருது வழங்கப்பட்டது.

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் மதுரை தென்னக மூத்த காந்திய அன்பர்களின் கூட்டமைப்பு சார்பில் மதநல்லிணக்கம் மற்றும் சமூகநீதிக்கான காந்தி விருது வழங்கும் விழா நடந்தது.

இந்த விருதை உழுபவனுக்கே நிலவுடமை இயக்கத் தலைவி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வழங்கினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் வாழ்த்துரை வழங்கினார்.

தட்ஸ் தமிழ்

வறுமை ஒழிப்புக்கு $2.6 பில்லியன்-OIC

வறுமை ஒழிப்புக்கு 10 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பு நாடுகள் இதுவரை 2.6 பில்லியன் டாலர்கள் அளித்துள்ளன.

இத்தகவலை செனகல் அதிபர் அப்துல்லாயே வதே , தாகரில் இஸ்லாமிய வளர்ச்சி வங்கி ஆளுநர்களின் 32ஆவது வருடாந்திர மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அரப் நியூஸ் செய்தி

ஜெத்தா கொலை சம்பவம்: இந்தியர் உட்பட எட்டுபேர் கைது!

கடந்த மே11ல் ஜெத்தாவின் முஷ்ரிஃபா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக ஒரு இந்திய ஓட்டுநர், இரண்டு இலங்கை பணிப் பெண்கள் உட்பட எட்டுபேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருட முயன்று, கொலையில் முடிந்த இச்சம்பவத்தில் கொலைசெய்யப்பட்டவர் மின்சார வயர்களால் பிணைக்கப்பட்ட நிலையில், தலையில் அடிபட்டு இறந்து கிடந்தார்.

ஒரு பெட்டகத்தை உடைத்து திருட வந்தவர்கள் ஆயிரம் ரியாலுக்கு மேல் அதில் காணவில்லையாம்.

மேலும் படிக்க: அரப் நியூஸ்

நாளை முதல் ஹெல்மெட் கட்டாயம்.

பின்னால் இருப்பவரும் அணிய வேண்டும்.
இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு, சென்னை உட்பட 6 மாநகராட்சிப் பகுதிகளில் நாளை அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் 71 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. சென்னை நகரில் மட்டும் 17 லட்சம் இருசக்கர வாகனங்கள் உள்ளன. இருசக்கர வாகனங்களில் ஹெல் மெட் அணியாமல் செல்லும்போது விபத்தில் சிக்கினால் தலையில் காயம் ஏற்பட்டு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்பவர்களுக்கு முதலில் 100 ரூபாயும் 2வது முறையாக சிக்கினால் 300 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் ஒரு இடத்தில் போலீசாரிடம் சிக்கி அபராதம் செலுத்தினாலும் சிறிது தூரத்தில் மீண்டும் போலீசாரிடம் மாட்டும்போதும் அபராதம் விதிக்கப்படும்.
ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற கம்பெனிகள் தயாரிக்கும் ஹெல்மெட் மட்டுமே அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவு, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, நெல்லை, சேலம் ஆகிய 6 மாநகராட்சி பகுதிகளில் நாளை காலை முதல் அமலுக்கு வருகிறது. மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதையட்டி, சென்னை உட்பட மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக ஹெல்மெட் விற்பனை சூடு பிடித்துள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் குறித்து டி.ஜி.பி.முகர்ஜி நேற்று கூறியதாவது:
சென்னை உட்பட 6 மாநகராட்சி பகுதிகளில் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஜூன் 1 முதல் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். பின்னால் இருப்பவர்கள் சிறுவர்களாக இருந்தாலும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும்.
ஹெல்மெட் அணியாமல் சென்று முதல்முறை பிடிபடும் போது ரூ.100 அபராதம் விதிக்கப்படும். அதன்பிறகும் ஹெல்மெட் அணியாமல் சென்றால் ரூ.300 அபராதம் விதிக்கப்படும். அரசின் உத்தரவுக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் முழு ஆதரவு தரவேண்டும். ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் உயிரிழப்புக்களை தவிர்க்க வேண்டும்.
அரசு உத்தரவை முறைப்படி அமல்படுத்த மாவட்ட எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், நாளை முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி தவிர மற்ற மாவட்டங்களில் ஜூலை 1ம் தேதி முதல் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முகர்ஜி கூறினார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பயிற்சி வகுப்பு - PHOTO


தமிழக அரசின் புதிய சட்டப்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராக ஒரு ஆண்டு பயிற்சி வகுப்பு சென்னை திருவல்லிக்கேணியில் நடக்கிறது.இங்குள்ள இந்து அறநிலையத்துறை வைணவ அர்ச்சகர் பயிற்சி மாணவர் இல்லத்தில் இதற்கான பாடம் கற்பிக்கப்படுகிறது.வெளியூர் மாணவர்களும் தங்கி பயில உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதில் 10 ம்வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை பயிற்சி பெறுகிறார்கள் . பயிற்சி வகுப்பு முடிந்து மாணவர்கள் வெளியே வருகிறார்கள்.


நன்றி: "தினகரன்"

அமெரிக்க குடியுரிமைக் கட்டணம் கடும் உயர்வு

வாஷிங்டன், மே 31: இப்போது அமெரிக்கக் குடியுரிமை பெற சுமார் ரூ.15,000 செலுத்த வேண்டும். இனி ரூ.30,000 செலுத்த வேண்டும். அமெரிக்கக் குடிமகனாக ஆகாமல் அங்கேயே நிரந்தரமாக வசிக்க ரூ.45,000 செலுத்த வேண்டும். இந்தப் புதிய கட்டண விகிதம் ஜூலை 30 முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வளவு அதிக தொகையைச் செலுத்த முடியாத ஏழைகளின் நிலைமை என்ன ஆவது என்று அமெரிக்காவில் குடிபுகல் அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தினமணி

தினம் 10 மரக் கன்றுகள் நடும் ஒரிசா பெண்

புவனேசுவரம், மே 31: ஒரிசா மாநிலம் பலசூர் மாவட்டம் கூதப்படா கிராமத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா பெஹிரா(48). இவர் சுமார் 15 ஆண்டுகளாக தினமும் சுற்றுப்புற கிராமங்களில் 10 மரக் கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பாரமரித்து வருகிறார்.

இப்படியாக அவர் இதுவரை 60 கிராமங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமாக மரங்களை வளர்த்துள்ளார்.

தினமணி

ராஜஸ்தானில் அமைச்சர், 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா

குர்ஜார் இனமக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி குர்ஜார் இனத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் காலு லால் குர்ஜார் மற்றும் ஆளும் பாஜக-வின் எம்.எல்.ஏ.க்கள் ஹர்யான் சிங், தாதா பராம், பிரகலாத் குன்ஜால், அடர் சிங் பாதனா, நாதா சிங் ஆகிய ஐந்து எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை தங்கள் ராஜிநாமா கடிதத்தை மாநில தலைவர் மகேஷ் சர்மாவின் அலுவலகத்தில் கொடுத்தனர்.

தினமணி

முந்தைய சற்றுமுன்: குர்ஜார் சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மீனா சமூகத்தினர் எதிர்ப்பு

இடைத்தேர்தலால் அரசுக்கு பண விரயம்: புதிய தமிழகம்

கோவில்பட்டி, மே 31: புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர். கிருஷ்ணசாமி பேட்டி: இடைத்தேர்தல் நடத்துவதால் பணம் விரயம் ஆவதுடன் இடைத்தேர்தல் வாயிலாக அரசியல் கட்சிகள் மக்களுக்கு இலவசங்களை கொடுக்க முன்வரும் நிலை ஏற்படும்.

இது ஜனநாயக விரோத நடவடிக்கை. எந்த கட்சியின் உறுப்பினர் அத்தொகுதியில் இறந்தாரோ அக்கட்சிக்கே அந்த இடத்தை அளிப்பதன் வாயிலாக பிரச்னைகளை குறைக்கலாம். இடைத்தேர்தலை தவிர்த்தால் மட்டுமே பொதுத்தேர்தல் என்பது நியாயமாக நடக்கும்.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அண்டை மாநிலத்தார், அண்டை நாட்டார் விளை நிலங்களை வாங்கி குவிப்பதை தடுத்திட வேண்டும். தமிழகத்தில் நிலம் வாங்குபவர்கள் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும் போது அவர்கள் குடும்பஅட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தால் மட்டுமே பத்திரப் பதிவு செய்ய வேண்டும்.

தினமணி

சமாதானப்புறா நம்பர் 2

நார்வே நாட்டுக்குப்பிறகு வரிசையில் நிற்கும் சமாதானப் புறாக்களில் முதலிடம் நியூஸிலாந்து'ன்னு இன்னிக்கு வெளியான Global Peace Index (GPI)சொல்லுது.

இன்னும் விளக்கமாப் பார்க்கணுமுன்னா இங்கே:


http://nz.news.yahoo.com/070530/3/jwt.html


உங்களுடன் இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்பவர்:

நியூஸியிலிருந்து துளசி.

அறை எண் 305ல் கடவுள் - சிம்புதேவன்

வடிவேலை வைத்து இம்சை அரசன் 23ம் புலிக்கேசி படத்தை இயக்கிய சிம்புதேவன், அடுத்து இயக்கப்போகிற படம் 'அறை எண் 305ல் கடவுள்'. இதில் கஞ்சா கருப்பு பிரதான கேரக்டரில் நடிக்கப் போகிறார்.

கருப்பு தவிர சந்தானமும் நடிக்கிறார். கடவுளாக மம்மூட்டி, பிரகாஷ் ராஜ் என்று நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிற விவரங்கள் - TamilMSN.com

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள்: பிரும்மாண்ட ஏற்பாடுகள் விவரம்

முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது. லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி நவீன கணிணிக் கலக்கலுடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வரின் சிறப்பை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுமையாக, தமிழ்த்தாய் வரவேற்புரை ஆற்றவும், திருவள்ளுவர் நன்றி கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய அழைப்பிதழைத் திறந்தால் இனிய குரலில் ஒரு பெண் பேசுகிறார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள். உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள், ஆயிரம் விளக்கு பகுதியின் சார்பில் அகம் மகிழ அழைக்கிறோம், வாருங்கள், வாருங்கள் என்று அந்தக் குரல் கூறுகிறது.

மேலும் அழைப்பிதழில் உள்ள முதல்வரின் படத்தை ஒரு பக்கம் சாய்த்தால் பெரியார் தெரிகிறார், மற்றொரு பக்கம் சாய்த்தால் அண்ணா தெரிவது போலவும் அசத்தியுள்ளனர்.

பிற விவரங்கள் - thatstamil.com

-o❢o-

b r e a k i n g   n e w s...