.

Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Sunday, September 2, 2007

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கைகளால் அடுத்த ஓரிரு நாள்களில் நிலைமை சீராகி விடும்.

கடந்த காலத்தில்...: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்காக ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சரி செய்யப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து திறம்படச் செயல்பட்ட ஓனிக்ஸ் நிறுவனத்தை விரட்ட பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்தது. 26.1.2003-ல் குப்பைகளுடன் கட்டட இடிபாடுகளையும் சேர்த்து அள்ளி, ஓனிக்ஸ் கணக்குக் காட்டுவதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் 10-க்கும் மேற்பட்ட குப்பை லாரிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறை பிடித்தது.

பல தரப்பட்ட குப்பைகளை அள்ளுவது என ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதையடுத்து, அந்தப் பிரச்னை தீர்ந்தது.

ஓனிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் தான் நீல் மெட்டல் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய நிறுவனம் செயல்படும் போது சில நாள்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம்.

~0~


குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி

கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிடும் முன்பே அவை மேடுகளாகக் கூட வளர விடாமல், சென்னை மாநகரக் காவல்துறையினர் 'மக்கள் நண்பன்' என்பதை நிரூபிக்கும் வண்ணம், ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்திவிட்டார்களே; அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர்கள் சாதித்துக் காட்டினர்' என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது, என் கண்களில் ஆனந்தகண்ணீர் துளிர்த்தது.

கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை அகற்ற உடனே அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துவிட்ட நிலையிலும், ஒருசில கட்சியினர் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுக்கிறார்களே?

பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டுக்குக் காட்டிக் கொள்வது? அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ளவிட மாட்டேன் என்கிறீர்களே?

~0~


எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல்

சென்னையில் குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இப் பணியில் ஆர்வமும், பொதுநல நோக்கமும் கொண்ட எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்று எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் சனிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்க வந்த அவர் கூறியது:

சென்னையில் குப்பைகள் அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, இப்பணி ஒப்படைக்கப்பட்ட நீல் மெட்டல் நிறுவனம் குப்பைகளை அகற்றுவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் தயாராகவுமில்லை. குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இதை சேவையாக தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். குப்பை அகற்றுவதை வர்த்தகமாக்குவது, இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.

சென்னையில் ஏற்கெனவே எக்ஸ்னோரா அமைப்பினர், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்ததால், குப்பைகளை மக்கள் வீதியில் கொட்டுவதில்லை. குப்பைகளை குறைக்கவும், அவற்றை உரமாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மக்கள் ஈடுபாட்டுடன் இதில் ஆர்வம் காட்டினர் என்றார் நிர்மல்.

~0~


கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்

சென்னையில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் குப்பைகளை முழுமையாக அள்ள முடியாததால் குப்பைகள் தேங்கின.

கடலூருக்கு சென்று சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி குப்பைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்தவுடன், உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் ஆகியோரை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியில் அசுர வேகத்தில் ஈடுபடுங்கள். இதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. மேயர், உயர் அதிகாரிகளில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னையில் குப்பைகள் அகற்றும் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓனிக்ஸ் நிறுவனத்தினர் தொட்டிகளை வைத்து குப்பை அள்ளும் பணிகளையும், நீல்மெட்டல் நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிகளையும், மாநகராட்சி 150 தனியார் லாரிகள் மூலம் இந்த பகுதிகளில் முழுமையாக குப்பைகளை அகற்றி வருகிறது. தெருக்களில் விழும் குப்பைகளும் முழுவீச்சில் அள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்த பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

~0~


நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

குப்பையை சரி வர அள்ளாத நீல் மெட்டல் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர பணி செய்யாததை சுட்டிக் காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
- தினமலர்

~0~


முந்தைய சற்றுமுன்:
1. குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது
2. விஜயகாந்த் 2 நாள் கெடு
3. துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது



The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance
The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet

Friday, August 31, 2007

மான் வேட்டை:சல்மானுக்கு ஜாமீன் கிடைத்தது

சிங்காரா மான் வேட்டை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைதண்டனை பெற்ற இந்தி திரைப்பட நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டை விசாரித்த இராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ஒரு இலக்கம் ரூபாய் ஈட்டுப்பணமும் ரூ50,000க்கு கடன்பத்திரமும் பெற்று ஜாமீனில் விட உத்திரவிட்டது. வழக்கின் விசாரணை 24 அக்டோபருக்கு தள்ளிப் போடப்பட்டது.

முழு விவரங்களுக்கு Rajasthan HC grants bail to Salman

Thursday, August 30, 2007

டில்லியில் தென்னக மீனவர்கள் போராட்டம்

கடல் அட்டை எனப்படும் மீன் வகையைப் பிடிக்க அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளத்தில் இருந்தும் மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

கடல் அட்டைகளைப் பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை விலக்கக் கோரி மீனவர் அமைப்புக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், இதுவரை அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பல்வேறு அண்டை நாடுகளில் கடல் அட்டைகளைப் பிடிக்க இவ்வாறு தடை விதிக்காத நிலையில், இந்தியாவில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பிபிசி

The Hindu : National : Fishermen seek lifting of the ban on sea cucumber (Holothurians)
Udayavani - National Fishworkers Forum appeals to PM

Wednesday, August 29, 2007

சென்னை: குப்பையால் திணறும் மாநகராட்சி

சென்னையில் குப்பை அள்ள ஒப்பந்தம் செய்யப்பட்ட சிங்கப்பூர் ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தக் காலம் முடிந்து தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவனம், நகர் முழுவதும் மலை போல குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற முடியாமல் தடுமாறி வருகிறது. இதனால் நகரமே நாறிப் போய்க் கிடக்கிறது.

தற்போது நீல் மெட்டல் என்கிற தென் ஆப்பிரிக்க நிறுவனத்திடம் இந்தப் பணி கொடுக்கப்பட்டுள்ளது. ஓனிக்ஸ் நிறுவனம் தனது ஒப்பந்தம் முடிந்ததைத் தொடர்ந்து தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த குப்பைத் தொட்டிகளை எடுத்துக் கொண்டு போய் விட்டது.

இதனால் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் நகர் முழுவதும் பெருகிப் போய் விட்டன. தெரு முனைகள், சாலை ஓரங்கள் உள்பட கிடைக்கும் இடத்தில் எல்லாம் மக்கள் குப்பையை கொட்டி வைத்துள்ளதால் நகரமே நாறிப் போயுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீல் மெட்டல் நிறுவனம் தகுந்த ஏற்பாடுகளைச் செய்யாததால், மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஓனிக்ஸ் நிறுவனம் மக்கள் வசதிக்காக பெரிய பெரிய குப்பைத் தொட்டிகளை வைத்திருந்தது.

போதிய ஊழியர்களோ, வசதிகளோ இல்லாத பெருகிக் கிடைக்கும் குப்பைகளை அள்ள முடியாமல் நீல் மெட்டல் திணறி வருகிறது. அந்த நிறுவனத்திடம் குப்பையை அள்ள போதிய வாகனங்களும் இல்லை.

செனனை நகரின் முக்கியப் பகுதிகளான அடையாறு, தி.நகர், கோடம்பாக்கம், அண்ணா சாலை, மயிலாப்பூர், மந்தைவெளி, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை என நகரில் எங்கு பார்த்தாலும் மலை போல குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. கடந்த நான்கு நாட்களாக இந்தக் குப்பைகள் அகற்றப்படாததால் பெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இன்னும் 10 நாட்களில் நிலைமை சீராகும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சரும், முன்னாள் மேயருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் குப்பை அள்ளும் பணி முழுவதும் பாதித்து வீச்சத்தை அதிகரிக்கச்செய்தது.

குப்பைகளை அகற்றுவதில் மாநகராட்சி முனைப்புடன் செயற்பட்டாலும் போதிய ஊழியர்கள் இல்லாததால் மாநகராட்சியால் சமாளிக்க முடியவில்லை. நிலைமை மோசமாகி வருவதை அறிந்த சென்னை மாநகராட்சி, யார் வேண்டுமானாலும் குப்பைகளை அள்ளலாம், ஒரு லாரிக்கு ரூ. 500 வாடைகயாக தரப்படும் என திடீரென்று அறிவித்துள்ளது.

மழை பெய்ததால் தேங்கி கிடக்கும் குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

Saturday, August 25, 2007

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோக-கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் ஜாலி பேசியது:

தமிழகத்தில் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, ரூ. 35 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கானகத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.

தமிழகத்தில் உள்ளது போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் 150 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 1000 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி

Friday, August 24, 2007

சல்மான் சிறை தண்டனை உறுதி்: மேல்முறையீடு தள்ளுபடி

சிங்காரா மானை வேட்டையாடிய வழக்கில் ஐந்து வருட சிறை தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்திநடிகர் சல்மான் தொடுத்திருந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது. அதற்கான கைது வாரண்ட் வெள்ளியன்று வழங்கப்படும்இந்த தண்டனைக்காலத்தை குறைக்க சல்மான்கானின் வக்கீல் உயர்நீதிமன்றத்தில் செவ்வாயன்று மனு தாக்கல் செய்வார். ஹைதராபாத்தில் விமானத்தை தவறவிட்டதால் சல்மான் தீர்ப்பு வழங்கும்போது நீதிமன்றத்தில் இல்லை.
No respite for Salman, Court sends him to jail

Wednesday, August 8, 2007

சென்னை நகரை அழகுபடுத்த சித்திர வேலைப்பாடுகளுடன் 300 சாலையோர பூங்கா

சாலையோரங்களில் காலியாக கிடக்கும் இடங் களை குப்பை கொட்டி அசிங்கப்படுத்துதல் மற்றும் தனியார் ஆக்கிரமித்தலில் இருந்தும் தடுக்க அந்த மாதிரியான இடங்களை பூங்காக்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சாலையோர பூங்கா அமைக்க 300 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேயர் மா.சுப்பிர மணியன் கூறியதாவது:-

பூங்காக்களை வடிவமைப் பது பற்றி 54 பேரிடம் இருந்து டிசைன்கள் வந்துள்ளன. அழகிய சித்திர வேலைப்பாடுகள், சிற்பங்கள் நிறைந்ததாக இந்த பூங்காக்கள் அமையும். மாதிரி வரை படங்கள் உறுதி செய்யப்பட்ட பிறகு அரசு அனுமதி பெற்று பூங்காக்கள் உருவாக்கப்படும்.

பல்வேறு தலைவர்களின் பெயர்களில் பெரிய பூங்காக்கள் உள்ளன. அந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எல்லோரும் அறிந்து கொள்ளும் வகையில் 38 பூங்காக்களில் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகள் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு வைக்கப்படும்.

மகாத்மா காந்தி, நேரு, சர்தார் பட்டேல், சத்திய மூர்த்தி, திரு.வி.க., திருவள்ளு வர், பாரதியார், காமராஜர், அண்ணா, ராஜீவ், கருணாநிதி, சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெற உள்ளது.

மாலைமலர்

Tuesday, August 7, 2007

குழந்தைப் பிறப்பைத் தள்ளிப்போட்டால் இரண்டாவது தேனிலவுக்கு சன்மானம்

இந்தியாவின் மாநில அரசு ஒன்று, புதுமண தம்பதிகள் தங்களின் முதல் குழந்தை பிறப்பை இரண்டு முதல் மூன்றாண்டுகள் தள்ளிப் போட்டால், அவர்களின் இரண்டாவது தேனிலவுக்காக ஐந்தாயிரம் முதல் ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் வரை நிதி உதவி அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, மேற்கிந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் இருக்கும் சடாரா மாவட்டத்தில், தங்களின் முதல் குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் புதுமண தம்பதிகளுக்கு, இரண்டாவது தேனிலவுக்கான நிதி உதவி செய்யப்போவதாக அரசு அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர்.

இந்த மாவட்டத்தில் முப்பது லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். ஆண்டுக்கு சுமார் இருபத்தையாயிரம் தம்பதிகள் புதிதாக திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இவர்களில் சுமார் 85 சதவீத புதுமண தம்பதிகள் திருமணமான முதல் ஆண்டு முடிவதற்குள்ளாகவே தங்களின் முதல் குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த போக்கை மாற்றவே இந்த புதிய திட்டம் முயற்சி செய்வதாக தெரிவித்தார் மாவட்ட சுகாதார அதிகாரி வி.எச்.மொஹிதே.

தமிழ் பிபிசி

BBC NEWS | South Asia | Honeymoon offer to delay babies
Delay a baby and win a second honeymoon - India - The Times of India
Honeymoon at state's expense - Pune

Thursday, August 2, 2007

வடதுருவத்தில் ரஷியா தனது கொடியை நாட்டியுள்ளது

வடதுருவத்தில் வடபுள்ளிக்கு கீழே உள்ள ஆர்க்டிக் பெருங்கடலின் அடிப்பகுதியில் ரஷ்யக் கொடியை நடுவதற்காக சென்ற இரண்டு ரஷ்ய நீர் முழ்கிக் கப்பல்களில் ஒரு கப்பல் தற்போது கடலின் மேல் மட்டுத்துக்கு வந்து விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆய்வாளர்களை ஏற்றிக் கொண்டு கடலுக்குக் கீழே 4 ஆயிரம் மீட்டருக்கும் கீழ் சென்ற இந்த இரண்டு நீர் முழ்கிக் கப்பல்களும், ஆபத்து மிக்க தம்முடைய பயணத்தை முடித்த பிறகு - வடதுருவத்தில் இருக்கும் பனிப் பாறைகளுக்கு இடையேயுள்ள சிறிய இடைவெளி வழியாக
கடலின் மேலேயுள்ள ஆய்வுக் கப்பலை வந்தடைந்துள்ளன.

எண்ணெய் வளம் அதிகம் இருப்பதாக நம்பப்படும் இந்தப் பகுதி மீது ரஷ்யா கோரி வரும் உரிமையை வலுப்படுத்துவதற்காக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வேறு சில நாடுகளும் இப் பகுதிக்கு உரிமை கோரியுள்ளன.

முந்தைய செய்தி: கனடா உரிமை பாராட்டும் கடற்பகுதி

BBC Tamil

BBC NEWS | Europe | Russia plants flag under N Pole
Russian polar expedition moves to bolster Moscow's claim to the North - International Herald Tribune: "About 100 scientists aboard the Akademik Fyodorov are looking for evidence that the Lomonosov Ridge - a 1,995-kilometer, or 1,240-mile, underwater mountain range that crosses the polar region - is a geologic extension of Russia, and therefore can be claimed by it under the UN Convention on the Law of the Sea.

Denmark hopes to prove that the Lomonosov Ridge is an extension of the Danish territory of Greenland. Canada, meanwhile, plans to spend $7 billion, or €5.11 billion, to build and operate up to eight Arctic patrol ships in a bid to assert its sovereignty."

Wednesday, August 1, 2007

டாடா ஆலைக்கு ஆதரவாகப் பேரணி

திருநெல்வேலி, ஆக. 1: டாடா நிறுவனத்தின் டைட்டானியம் டை ஆக்ûஸடு தொழிற்சாலையை நிறுவ வலியுறுத்தி திருநெல்வேலியில் புதன்கிழமை பேரணி நடைபெற உள்ளது.

இந்த பேரணியில் ஆலைக்கு நிலம் கொடுக்க தயாராக உள்ள விவசாயிகளும், வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்வார்கள் என சட்டப்பேரவை உறுப்பினர் என். மாலைராஜா செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து திருநெல்வேலியில் அவர் அளித்த பேட்டி:

சாத்தான்குளத்தில் டாடா தொழிற்சாலை அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகும் என்பதோடு சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.

எனவே, இந்தத் தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவித்து, நிலம் கொடுக்க தயாராக உள்ள சுமார் 2,500 விவசாயிகள் மற்றும் வேலைவாய்ப்புக்கு காத்திருக்கும் இளைஞர்களும், பெண்களும் கலந்து கொள்ளும் பேரணியை நடத்த உள்ளோம்.

இந்த பேரணி வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை சென்றடையும். அங்கு தொழிற்சாலைக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும், நிலம் கொடுக்க தயாராக உள்ளவர்களும் ஆட்சியரிடம் மனுக்களை அளிப்பார்கள் என்றார் அவர்.

தினமணியிலிருந்து நேரடி பதிப்பு

Monday, July 30, 2007

அரசு பின்வாங்கியது,அதிமுக வெற்றி: ஜெயலலிதா

டாடாவின் டைடானியம் டையாக்ஸைட் திட்டத்தை நிறுத்திவைப்பதாக தமிழக அரசின் அறிவிப்பு அதிமுகவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என அக்கட்சியின் பொதுசெயலர் ஜெ ஜெயலலிதா கூறினார். தாங்கள் ஆட்சியில் இருந்தாலும் ,இல்லாவிட்டாலும் மக்களுக்கான நலனுக்காக பாடுபடும் கட்சி என்பது உறுதியாகியுள்ளது என அவர் மேலும் கூறினார்.

இதுபற்றிய The Hindu News Update Service

Friday, July 27, 2007

அட்டகாசம் செய்த யானைகள் கொல்லப்பட்டன

இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அசாம் மற்றும் மிசோராம் மநிலங்களின் எல்லைப் பகுதியில், ஆக்ரோசம் கொண்டு, 8 கிராமவாசிகளைக் கொன்ற பழக்கப்படுத்தப்பட்ட இரண்டு யானைகளைப் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

மரங்களை இழுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட இந்த யானைகள், மதங்கொண்டு, மூங்கிலாலும், வைக்கோலாலும் அமைக்கப்பட்ட பல குடிசைகளைத் துவம்சம் செய்தன. யானைகள் இயற்கையாக வாழும் இடங்களை மனிதர் ஆக்கிரமிப்புச் செய்வதால், கடந்த காலங்களில் காட்டு யானைகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இப்படியாகப் பழக்கப்படுத்தப்பட்ட யானைகள் அட்டகாசம் செய்வது மிகவும் அரிதாகும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

BBC Tamil

Rogue elephants shot after killing eight in Assam | Reuters.com

Tuesday, July 17, 2007

ஜப்பான்: மீண்டும் பூகம்பம்;அணுக்கதிர்வீச்சு பீதி

ஜப்பானில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது. பூகம்பம் தாக்கியதால் சேதம் அடைந்த அணு உலையில் இருந்து கதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலந்ததால் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானின் நிகாட்டா பகுதியில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 6.6 ரிக்டரில் பதிவான இந்த நில நடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. பூகம்பத்தால் காஷிவாசாகி என்ற இடத்தில் ஒரு ரெயில் கவிழ்ந்தது.

இந்த பூகம்பத்தால் தாக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், நேற்று இரவு மீண்டும் ஜப்பானின் மேற்கு பகுதியில் பூகம்பம் ஏற்பட்டது. இதை யொட்டி கடல் பகுதியில் ஏற்பட்டு இருந்த பூகம்பம் 6.6 ரிக்டரிலும் பதிவானது.

இதிலும் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன.

நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 1000-க் கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

முதல்முதலாக ஏற்பட்ட பூகம்பத்தால் காஷிவாசாகியில் உள்ள அணுசக்தி நிலையம் சேதம் அடைந்து தீ பிடித்துக் கொண்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டாலும் அந்த உலையில் இருந்து 1200 லிட்டர் தண்ணீர் கசிந்தது. உலகிலேயே மிகப்பெரிய அணுஉலை இது தான்.

கதிர்வீச்சு தன்மை உள்ள இந்த தண்ணீர் கடலில் திருப்பிவிடப்பட்டது. அணுகதிர்வீச்சு தண்ணீர் கடலில் கலக்கிவிடப்பட்டது. பல மணிநேரம் மக்களுக்கு தெரிவிக்கப்பட வில்லை.

கடலில் இந்த நீர் கலந்தது பற்றி தகவல் தெரிந்ததும் அந்த பகுதி முழுவதும் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஆனால் இதில் ஆபத்து ஏதும் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலைமலர்

Wednesday, July 11, 2007

இந்தோனேசியா: படகு மூழ்கியது 45 பேர் கதி என்ன?

இந்தோனேஷியாவில் பயணிகள் படகில் பயணம் செய்த 45 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. இந்தோனேஷியாவின் கிழக்கு கடற்பகுதியில் பயணிகள் படகு ஒன்று 70 பேருடன் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் படகு கடலில் மூழ்கியதில் அனைவரும் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். ஆனால், கடற்படையினரால் 23 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. மேலும், இரு சிறுவர்களின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக எஞ்சிய 45 பேரை தேடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினமலர் கடைசி செய்திகள்

Tuesday, July 10, 2007

பிரேசில் நாட்டில் கட்டப்படவுள்ள நீர்மின்நிலையங்கள் தொடர்பாக சர்ச்சை

பிரேசில் நாட்டு அரசாங்கம் அங்கு அமேசான் நதியின் நீளமான கிளை நதி மீது இரண்டு நீர்மின் நிலையங்களை அமைப்பதற்கான அடிப்படை ஒப்புதலை வழங்கியுள்ளது.

மடேரியா ஆற்றுத் திட்டம் என அழைக்கப்படும் இந்தத் திட்டமானது பிரேசிலில், அரசுக்குள்ளேயே கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திட்டமானது சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடையே பெரிய அளவில் உணர்வுபூர்வமான ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நதியில் பெருமளவிலான உலகின் பல பரந்துபட்ட மீனினிங்கள் வாழ்ந்து வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவில் கட்டப்படவுள்ள இந்த நீர்மின் நிலையங்களானது, இந்த மீனினங்களை அழித்துவிடும் அபாயம் உள்ளது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள்.

இவ்வாறான பிரச்சினைகள் காரணமாக, பிரேசில் நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்பான இபாமா, இந்த திட்டத்திற்கு அடிப்படை அனுமதியளிப்பதற்கான முடிவடுக்க இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது. அதிலும் 33 வகையான கட்டுப்பாடுகளுடனேயே இந்த பூர்வாங்க அனுமதியை இபாமா வழங்கியுள்ளது.

அடிப்படை அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும், மேற்கொண்டு பணிகளை தொடங்க இறுதி அனுமதி தேவைப்படும். இந்த திட்டமானது வளர்ச்சியா அல்லது சுற்றுச் சூழல் பாதுகாப்பா என்பது குறித்து பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் நாட்டில் அரசிற்குள்ளேயும் வெளியேயும் இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ள ஆர்வம் மற்றும் பரபரப்பானது, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் அபிலாஷைகளுக்கும், அது போன்ற நாடுகளுக்கு, சுற்றுச் சூழலைக் காக்க இருக்கும் கடமைக்கும் இடையேயான விவாதம், மற்றும் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் வளர்ச்சியை எவ்வாறு மேற்கொள்வது, இந்த இரண்டிற்கும் இடையே எவ்வாறு ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும் என்பன குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.

- BBC Tamil

Brazil gives preliminary OK to Amazon dams criticized by environmentalists - International Herald Tribune
BBC NEWS | Americas | Brazil gives Amazon dams go-ahead

Saturday, July 7, 2007

இருவகையான எரிப்பொருளில் ஒடும் கார்களை உற்பத்திச் செய்யப் போவதாக இரான் அறிவிப்பு

பெட்ரோலில் ஓடும் கார்களை உற்பத்தி செய்வதை நிறுத்தப் போவதாகவும், அதற்குப் பதிலாக இரு வகையான எரிபொருட்களில் ஓடும் கார்களை, அதாவது எரிவாயுவிலும் ஓடும் கார்களை அதிகமாகத் தயாரிக்கப் போவதாக எவரும் எதிர்பாராதபடி இரான் அறிவித்துள்ளது. இன்னமும் இரு வாரங்களில், பெட்ரோலில் ஓடும் கார்களின் உற்பத்தி நிறுத்தப்படும் என்று அந்த நாட்டின் தொழில்வள அமைச்சர் அறிவித்துள்ளார்.

இவற்றுக்குப் போதுமான எரிவாயுவைத் தயாரிக்கவோ அல்லது எரிவாயுவை நிரப்பும் நிலையங்களுக்கு அவற்றை விநியோகிக்கவோ தேவையான உட்கட்டமைப்பு இருக்கிறதா என்பது தெளிவாகவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்னர்தான் இரான் பெட்ரோலை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்க ஆரம்பித்தது.

- BBC Tamil

1. BBC NEWS | Middle East | Iran ends petrol-only car making
2. Iran, Low on Gasoline, to Be Supplied by Venezuela - New York Times
3. Iran: 80 Fuel Riot Suspects Arrested - washingtonpost.com
4. Oil rich and gasoline poor
5. Qatar :: Sanctions hurting oil industry: Iran

Wednesday, July 4, 2007

தண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு.

சீனாவின் கிழக்குப் பகுதி மாகாணமான ஜியாங்சூ மாகாணத்தில் உள்ளூர் ஆற்றில் அம்மோனியா மற்றும் அஸோட் கலந்ததால், சுமார் 2 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகினர்.

40 மணி நேரத்திற்கு தண்ணீர் வழங்குவது நிறுத்தப்பட்டதாக பீஜிங்கில் இருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது.

தண்ணீரின் மாசு எப்போது நீக்கப்படும் ஏன்று தெரியவில்லை என்றும், முழு அளவில் பணிகள் நிறைவடைந்த பின்னரே வெளியிடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழாய்களில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வந்ததால், தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டதாக உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் கூறினார்.

தொழிற்சாலை கழிவு ஆற்றில் கலந்ததால் மாசு பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்செய்தியை MSN INDIA தெரிவித்துள்ளது

Tuesday, July 3, 2007

கொல்கத்தாவில் பெரும் மழை - 10 பேர் மரணம்

கல்கத்தாவில் பெய்த பெருமழையால் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவிலிருந்து மொத்தம் 163mm மழை பெய்துள்ளது. இதனால் இயல்புநிலை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வீடு இடிந்து விழுந்ததாலும், அறுந்து விழுந்த மின்கம்பியில் சிக்கியும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

Monday, July 2, 2007

நிமிட்ஸ்: சில தகவல்கள்.

இந்த கப்பல் 4 1/2 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1092 அடி நீளம், 252 அடி அகலம் உள்ளது. 23 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 65 போர் விமானங்கள் உள்ளன. இவற்றுடன் வீரர்கள் பயணம் செய்யும் விமானம், ஆபத்து நேரத்தில் மீட்பு பணிகளில் ஈடுபடும் விமானம், ஹெலிகாப்டர் ஆகியவையும் உள்ளன. 30 வினாடியில் ஒரு விமானம் கப்பலில் இருந்து புறப்படும் அளவுக்கு வசதி உள்ளது.

1975-ம் ஆண்டு மே 3-ந் தேதி இந்த கப்பல் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. 32 வருடமாக பணியில் இருக்கிறது. 2-ம் உலகப் போரில் அமெரிக்காவின் பசிபிக் கடல் பகுதி ராணுவ கமாண்டராக இருந்து பெரும் சாதனை புரிந்த ஜெஸ்டர் நிமிட்ஸ் பெயர் இந்த கப்ப லுக்கு சூட்டப்பட்டது.

கப்பலில் 53 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரி உள்ளது. அதில் 6 டாக்டர்கள் பணி யாற்றுகிறார்கள். தனியாக 5 பல் டாக்டர்களும் இருக்கின்றனர். இதில் முகமது கமிஸ் என்ற இந்திய வம்சாவளி டாக்டரும் பணியாற்றுகிறார்.

கடல் நீரை நல்ல நீராக மாற்றி பயன்படுத்த அதற்கான தனி தொழிற்கூடம் உள்ளது. இவற்றின் மூலம் தினமும் 4 லட்சம் காலன் நல்ல தண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை வீரர்களின் தேவைக் கும் மற்ற பணிகளுக்கும் பயன் படுத்தப்படுகிறது.

உணவு பொருட்களை 70 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்கும் குளிர்சாதன வசதிகளும் உள்ளன.

கப்பலிலேயே தனி தபால் நிலையம் உள்ளது. ஆண்டுக்கு 10 லட்சம் கடிதங்களை இது கையாள்கிறது. தினமும் தபால் நிலைய கடிதங்களை பட்டுவாடா செய்யும். இதற்காக தினமும் வேறு கப்பல்கள் மூலமாகவோ அல்லது விமானங்கள் மூலமாகவோ இங்கு கடிதங்கள் கொண்டு வரப்படும்.

வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களும் வழிபாடு நடத்துவதற்காக 3 வழிபாட்டு தலங்களும் கப்பலில் உள் ளன.

கப்பலில் தேவைக்கு மேல் 50 சதவீதம் ஆயுதங்களை வைத்து கொள்ளவும், விமா னங்களுக்கு தேவையான 2 மடங்கு எரி பொருளை சேமித்து வைக்கவும் வசதி உள்ளது. விமானங்களை உள் பகுதிக்குள் கொண்டு சென்று பழுது பார்க்கும் தனி ஒர்க்க்ஷாப் உள்ளது.

தனி உணவு கூடம், மாநாட்டு அறை, பொழுது போக்கு கூடம் என அனைத்து வசதிகளும் உள்ளன. மொத்தத்தில் ஒரு சிறிய நகரத்தில் உள்ள அத்தனை வசதிகளும் உள்ளன. இந்த கப்பலை மிதக்கும் நகரம் என்று அழைக்கின்றனர்.

நன்றி: மாலைமலர்

நிமிட்ஸ்: அமெரிக்க வீரர்கள் சென்னையில்.

அமெரிக்காவின் மிகப் பெரிய விமானத்தாங்கி கப்பலான நிமிட்ஸ், வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளது. இதன் பயண திட்டத்தில் சென்னையும் இடம் பெற்று இருந்தது.

இந்த கப்பல் அணுசக்தி மூலம் இயங்க கூடியது. எனவே அணு கசிவு ஆபத்து ஏற்படலாம் என்பதால் சென்னை வர எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் மத்திய அரசு அனுமதித்ததன் மூலம் திட்டமிட்டபடி இன்று காலை 6 மணிக்கு சென்னை வந்தது.

தற்போது சென்னை மெரீனா கடற்கரைக்கு கிழக்கே 4 கிலோ மீட்டர் தூரத்தில் அது நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் கப்பல் பணியாளர்கள், அதிகாரிகள் உள்பட 6 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். அவர்கள் சென்னை நகருக்குள் வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
அவர்கள் உல்லாசமாக பொழுதை போக்கி மகிழ்வ தற்கும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அனைவரும் படகு மூலம் சென்னை துறை முகத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். முதல் படகு இன்று காலை கரைக்கு வந்தது.

இரவில் அனைவரும் சென்னை ஓட்டல்களில் தங்குகின்றனர். இதற்காக முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அனைத்து ஓட்டல்கள், ரிசார்ட்டுகள் அவர்களுக்காக "புக்'' செய்யப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க சுதந்திர தின விழாவை கொண்டாடுகிறார்கள். அப்போது ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், விருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை அனுபவிக்கும் அதே நேரத்தில் அவர்கள் பல்வேறு சமூக சேவை பணிகளிலும் ஈடுபடுகின்றனர். அனாதை இல்லம், மன நல காப்பகம் போன்றவற்றுக்கு சென்று உதவி செய்கிறார்கள். அண்ணா சாலையிலுள்ள மதரஸ யே ஆஸம் பள்ளி விடுதிக்குச் சென்ற அமெரிக்க வீரர்கள் அங்கு துப்புரவு பணி உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

நிமிட்ஸ் போர் கப்பல் அணுசக்தி மூலம் இயக்குவதால் அதில் 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் கசிவு ஏற்பட்டால் சென்னை நகரமே அழிந்து போகும் அளவுக்கு ஆபத்தானகும்.

எனவே அணு கசிவு ஏதேனும் ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க இந்திய அணு விஞ்ஞானிகள் குழு ஒன்று இந்திய போர் கப்பல் மூலம் அந்த பகுதிக்கு சென் றுள்ளனர். நிமிட்ஸ் கப்பல் அருகே இந்திய கப்பல் முகா மிட்டுள்ளது. அணு கசிவை கண்டு பிடிக்கும் கருவி அதில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் 24 மணி நேரமும் கண் காணிப்பார்கள். 5-ந்தேதி அமெரிக்க கப்பல் புறப்பட்டு செல்கிறது. அதுவரை விஞ்ஞானிகள் அங்கேயே தங்கி இருப்பார்கள்.

அதே போல 2 வேன்களில் விஞ்ஞானிகள் குழு கடற்கரையில் சுற்றி வரும். அவர்களும் கருவி மூலம் அணு கசிவை கண்காணிப்பார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...