.

Saturday, September 1, 2007

"கேரளாவுக்காக தனி மண்டலம் சாத்தியமில்லை" - ஆர். வேலு

பாலக்காடு ரெயில்வே கோட்டத்தை பிரித்து சேலத்தில் புதிய ரெயில்வே கோட்டம் அமைக்கப்படுகிறது. இதற்கு கேரளா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக கேரள முதல்-மந்திரி அச்சு தானந்தன் ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத்யாதவை சந்தித்து தனி கோட்டம் அமைக்க கூடாது என வற்புறுத்தினார். அப்படி தனிக்கோட்டம் அமைப்பதாக இருந்தால் திருவனந்தபுரத்தை மையமாக கொண்ட கேரளாவுக்கு என தனி ரெயில்வே மண்டலம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பரிசீலிப்பதாக அவரிடம் லல்லுபிரசாத் யாதவ் உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரெயில்வே இணை மந்திரி ஆர்.வேலு பதில் அளிக்கையில் கேரளாவில் ரெயில்வே மண்டலம் அமையும் சாத்தியம் இல்லை என்றார்.

இதுகுறித்து பாராளுமன்றத்தில் இணை அமைச்சர் ஆர்.வேலு கூறும் போது,

புதிதாக ரெயில்வே மண்ட லம் அமைக்க வேண்டுமானால் பல்வேறு சாத்தியக் கூறுகள் ஆராயப்படுகின்றன. பரப் பளவு, வேலை பளு, போக்கு வரத்துமுறை, இயக்கம், நிர்வாக தேவைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டே இத்தகைய புதிய மண்டலங்கள் உருவாக்கப்படும்.

இத்தகைய சாத்தியக் கூறுகள் இந்த கோரிக்கையில் இல்லாததால் புதிய மண்டலம் அமைப்பது நடைமுறையில் சாத்தியமானதல்ல.


என்று கூறினார்.

மாலைமலர்

அப்பல்லோ: மேலும் 100 மார்புவலி சிகிட்சை மையங்கள்

இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் 18 - ம் தேதிக்குள் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்க அப்பல்லோ மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.

இந்தத் தகவலை மருத்துவமனையின் மேலாண் இயக்குநர் ப்ரீதா ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சென்னை மேற்கு சிஐடி காலனியில் உள்ள விஜய் மருத்துவமனையில் மார்பு வலி சிகிட்சை மையம் (Clinic) திறந்து வைத்து அவர் பேசியது:

அப்பல்லோ மருத்துவமனையின் ஆண்டு விழா செப்டம்பர் 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தக் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியா முழுவதும் 100 மார்பு வலி சிகிட்சை மையங்களைத் திறக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுவரை, 40 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

மார்பு வலி ஏற்படும்போது, அருகாமையில் உள்ள மருத்துவ மையங்களில் நோயாளிகள் உடனடியாக செல்வதற்கு வசதியாக இது போன்ற மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன என்றார் ப்ரீதா ரெட்டி. நிகழ்ச்சியில், விஜய் மருத்துமனையின் மேலாண்மை இயக்குநர் பி.குமாரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி

பத்திரிக்கையாளர் சாய்நாத்துக்கு மகசேசே விருது.

தமிழக ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான மகசாசே விருது இன்று வழங்கப்பட்டது.
ஆசியாவின் நோபல் பரிசு எனப்படும் மகசாசே விருதை பிலிப்பைன்ஸ் நாடு வழங்கி வருகிறது. இவ்விருதிற்குச் சிறப்பான கிராமிய பொருளாதாரக் கட்டுரைகளை எழுதிய தமிழக பத்திரிகையாளர் சாய்நாத் தேர்வு செய்யப்பட்டார். பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


ஊடகவியலாளர் சாய்நாத்துக்கு "சற்றுமுன்" குழுமம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

காலரா நோய்ப் பரவல்: ஒரிசாவில் 10ம் தேதி முழு அடைப்பு

காலரா நோயை கட்டுப்படுத்த தவறிய ஆளும் பிஜூ ஜனதா தள அரசை கண்டித்து ஒரிசாவில் வரும் 10ம் தேதி பந்த் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் நாராயண சாமி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். முதல்வர் நவீன் பட்நாயக் அரசு தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர்

நிருபர்களிடம் அசடு வழிந்தார் புஷ்.

மலேசிய பிரதமர் அப்துல்லா பாத்வி அண்மையில் மறுமணம் செய்து கொண்டதையும், அவருக்கு தான் வாழ்த்து கூறியதையும் அடியோடு மறந்துவிட்ட அமெரிக்க அதிபர் புஷ், இறந்துபோன பாத்வியின் மனைவியைப் பற்றி பேசியதால் நிருபர்கள் முன் அசடு வழிந்தார்.

வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை ஆசிய பசிபிக் நாட்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிபர் புஷ், "மலேசிய பிரதமர் பாத்வியின் மனைவி 2005-ல் மரணமடைந்த போது, நான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தேன்' என்று சோகம் ததும்ப கூறினார்.

பாத்வி கடந்த ஜூனில் மறுமணம் செய்து கொண்டார் என்று புஷ்ஷிடம் நிருபர்கள் நினைவுப்படுத்திய போது, "அப்படியா, நான் உடனே அவருக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமே' என்றார்.

அப்போது குறுக்கிட்ட புஷ்ஷின் நேர்முக செயலாளர், "நீங்கள் ஏற்கெனவே வாழ்த்து தெரிவித்து விட்டீர்கள் அதிபர் புஷ்" என்று நினைவுப்படுத்தினார்.

அதைக்கேட்டதும் நிருபர்கள் மத்தியில் அசடு வழிந்து சிரித்த புஷ், "பரவாயில்லை, மீண்டும் ஒருமுறை அவருக்கு வாழ்த்து தெரிவிக்கப் போகிறேன்" என்றார்.

சமீபத்திய ஒரு பேட்டியில், பிபிசி நிருபரின் வழுக்கைத் தலையை கிண்டலடித்த புஷ்ஷுக்கு, சரியான பதிலடி கொடுத்திருக்கின்றனர் ஆசிய நிருபர்கள்.

தினமணி

பார்வையற்றோரும் பயன்படுத்த மின்-அஞ்சல் - சாதித்த மாணவியர்

தஞ்சாவூரை அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் தகவல் தொழில்நுட்பத் துறை மாணவிகள் பார்வையற்றோர் பயன்படுத்தும் வகையில் தொலைபேசி வழி மின் அஞ்சல் வசதிக்கான தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் புலத் தலைவர் (ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு) பி. ரவிச்சந்திரன் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைத் தலைவர் ஜி. ஜெகஜோதி ஆகியோரின் மேற்பார்வையில் பேராசிரியர் கே. மீனா வழிகாட்டுதலின் கீழ் மாணவிகள் டி. சித்ரா, பி. ரேவதி, ஐ. தென்றல், கே. வித்யா ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டனர்.

இம்மாணவிகளின் கண்டுபிடிப்புக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு சார்பில் திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பப் கல்லூரியில் ஆக. 24 மற்றும் 25-ம் தேதிகளில் நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முதல் பரிசு கிடைத்துள்ளது.

நாம் வழக்கமாக பயன்படுத்தும் கணினியில் எழுத்துக்களை ஒலிகளாக மாற்றும் ஒரு கருவியை பொருத்துவதன் மூலம் இணையதளத்தில் தங்களுக்கு வரும் இ-மெயில்களை பார்வையற்றவர்கள் தொலைபேசி கருவி மூலம் காதால் கேட்டுக் கொள்ளாம். மேலும் இதே முறையில் இ-மெயிலும் அனுப்பலாம். இதற்கென தனியே பயன்படுத்துவோர் எண் மற்றும் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றைக் கொண்டு இந்த வசதியை பெறலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

"வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் இணையதளத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பார்வையற்றவர்கள் இணைய தள வசதியை பெற இயலாத நிலையில் உள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினருக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் இக்கருவியை மாணவிகள் செய்துள்ளனர்' என்று கூறி மாணவிகளைப் பாராட்டினார் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன்.

நன்றி: தினமணி

GSLV-F04 விண்ணேற்றத்திற்கு தயார்நிலை ஆரம்பம்

பூமிக்கு நிலையான வட்டப்பாதையில் துணைக்கோள்களை செலுத்தவல்ல ஜிஎஸ் எல்வி ஏவுகணையை நாளை விண்ணில் இந்திய நேரம் 4:21 மணிக்கு அனுப்ப இன்று மதியம் 2 மணியிலிருந்து எண்ணிக்கை குறைப்பு ஆரம்பமானது. இந்த ஏவுகணை இந்திய தொலைதொடர்பிற்கான துணைக்கோள் இன்சாட்-4CR ஐ ஏற்றிச் செல்லும். இந்த துணைக்கோளில் வீட்டிற்கு நேரடி தொலைக்காட்சி (DTH), வழங்க ஏதுவாக 12 அதிக சக்தி Ku பட்டையில் இயங்கும் ஒளிபரப்பு சாதனங்கள் அமைந்துள்ளன. சென்றமுறை இன்சாட் -4C உடன் செலுத்திய இவ்வித ஏவுகணை பாதியிலேயே தனது சக்தியை இழந்து வீழ்ந்ததின் பின்ன்ணியில் நாளைய விண்ணேற்றம் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப் படுகிறது.
The Hindu News Update Service
Zee News - INSAT-4CR launch put off by a day to Sept 2

குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது

மாநகராட்சியின் குப்பை களையும் பணி முடங்கியிருப்பதால் குமியும் குப்பைகளை எடுக்க முயன்ற அதிமுக எம் எல் ஏ உட்பட அக்கட்சியினரை காவலர்கள் கைது செய்தனர். தி.நகர் எம் எல் ஏ கலைராஜன் திருவல்லிக்கேணியில் குப்பை வாரும்போது ஆவருடன் 29 கட்சியினரையும் காவலர்கள் கைது செய்தனர். இதேபோல நகரின் பலவேறு பகுதிகளில் , பெண்கள் உட்பட, 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் நலனுக்காக குப்பை வாரும் பணியை கையிலெடுத்தக் கட்சியினரை கைது செய்ததை அதிமுக தலைவர் ஜெ ஜெயலலிதா கண்டித்துள்ளார். குப்பையை களையும் பணியைக் கூட கையாள முடியாத அரசு எவ்வாறு மக்களின் குறைகளை களையப் போகிறது என்று கேள்வி எழுப்பினார்.

இது பற்றிய The Hindu News Update Service

சற்றுமுன்:கௌஹாத்தி மார்க்கெட்டில் குண்டுவெடிப்பு

கௌஹாத்தியின் மைய சந்தையில் பயங்கர குண்டுவெடிப்பு இன்று மதியம் நடந்துள்ளது. இதனால் பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிகிறது. மேல் விவரங்கள் இல்லை.

Blast rocks Guwahati market - Yahoo! India News

கடைசியில் கிடைத்த விவரங்கள்:DNA - India - One killed, 12 injured in Guwahati blast - Daily News & Analysis

தலைக்கவசம் கட்டாயம்: உயர் நீதிமன்றம் அங்கீகாரம்.

வாகன சட்டத்தை நடைமுறைப்படுத்தி இரு சக்கர வாகனங்களை ஓட்டுபவர்களும், பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி உத்தரவை பிறப்பித்தது. கடந்த ஜுன் மாதம் 1-ந் தேதி முதல் சென்னை உள்பட 6 மாநகராட்சிகளிலும், ஜுலை 1-ந் தேதி முதல் பிற இடங்களிலும் இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை விலக்கம் செய்யவேண்டும் என்று பொறியாளர் நிம்முவசந்த் என்ற பெண், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார். இரு சக்கர வாகனங்களினால் மிக குறைந்த அளவில் தான் விபத்துக்கள் ஏற்படுவதால் தலைக்கவசம் அணிய வேண்டிய கட்டாயமில்லை என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் முகோபாத்தியா, என்.பால்வசந்தகுமார் ஆகியோர் நேற்று தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார்கள்.

வாகனச்சட்டம் 129ம் பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ள இச்சட்டம், சுதந்திரமாகச் செல்ல வழி வகுக்கும் அரசியல் சட்டப்பிரிவு 21 க்கு எதிராக அமையவில்லை
என்பது தீர்ப்பின் சாரமாக இருந்தது.

செய்தி மூலம்: மாலைமலர்

சென்னை: தவற விட்ட பெட்டியால் பாதிக்கப்பட்ட போக்குவரத்து

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் நாராயண உன்னி. இவர் இராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். ஓணம் பண்டிகையைக் கொண்டாட இவர் மனைவி, குழந்தைகளுடன் கேரளா வந்து இருந்தார்.

மீண்டும் பணியில் சேருவதற்காக நாராயண உன்னி திருவனந்தபுரத்தில் இருந்து வரும் கோரமண்டல் விரைவு தொடர்வண்டியில் புறப்பட்டார். இன்று அதிகாலை அந்த வண்டி பேசின் பிரிட்ஜ் நிலையத்துக்கு வந்தது. சமிக்ஞை கிடைக்காததால் நீண்ட நேரமாக அவ்வண்டி நின்றுக் கொண்டிருந்தது.

இதையடுத்து சென்னை மத்திய நிலையத்துக்கு தானியில் சென்று விடலாம் என்று நாராயண உன்னி முடிவு செய்தார். எனவே தன் பெட்டிகளுடன் அவசரம், அவசரமாக இறங்கினார். பிறகு குடும்பத்தினருடன் ஒரு தானியில் ஏறி மத்திய தொடர்வண்டி நிலையத்துக்குச் சென்றார்.

போகும்போது அவர் மறதியாக ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டார். அந்த பெட்டி கேட்பாரற்று பேசின் பிரிட்ஜ் நிலைய நடைபாதையில் கிடந்தது. நீண்ட நேரமாக அந்தப் பெட்டி கிடந்ததால் பயணிகள் சந்தேகம் அடைந்தனர்.

அதில் வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று கருதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து காவலர்களும் வெடிகுண்டு நிபுணர்களுடனும் மோப்ப நாயுடனும் விரைந்து அருகில் சென்று சோதனை நடத்தினார்கள்.

இந்த பரபரப்பால் பேசின் பிரிட்ஜ் பகுதியில் பீதி தொற்றிக் கொண்டது. மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொது மக்கள் திணறியபடி கடும் அவதிக்குள்ளானார்கள்.

இதற்கிடையே உலோக நுண்ணாய்வுக் கருவி (மெட்டல் டிடெக்டர்) மூலம் சோதித்த பின், அப்பெட்டியில் வெடிபொருள் எதுவும் இல்லை என்று உறுதி செய்தனர். பிறகு பெட்டியை உடைத்துத் திறந்து பார்த்தனர். அதற்குள் துணிகள்தான் இருந்தன.

பரபரப்பு ஏற்படுத்திய பெட்டியைத் தவற விட்டப் பயணி யாராக இருக்கும் என்று காவல் துணை ஆய்வாளர் தங்கவேலு விசாரணை நடத்தினார். அப்போது நாராயண உன்னி பதறியபடி அங்கு வந்தார்.

மத்திய நிலையம் சென்ற பிறகே அவருக்கு ஒரு பெட்டியைத் தவற விட்டு விட்டோம் என்பது தெரிந்து அதே தானியில் அவர் உடனே திரும்பி வந்தார்.

வெடிகுண்டு பரபரப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விட்டதால் அவரால் உடனே பேசின் பிரிட்ஜ் நிலைய பகுதிக்குள் வர இயலவில்லை. இதை அவர் காவல் அதிகாரிகளிடம் விளக்கி கூறி மன்னிப்புக் கேட்டு கொண் டார். இராணுவ அதிகாரி என்பது தெரிய வந்ததும் காவல் அதிகாரிகள் அவரிடம் பெட்டியை ஒப்படைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

செய்தி மூலம்: மாலைமலர்

பள்ளிக்கல்விக்காக ரூ6000 கோடி தமிழக அரசு திட்டம்

மாநிலத்தின் ஆரம்பக்கல்வி மற்றும் அடிப்படைக்கல்வி வளர்ச்சிக்காக ரூபாய் ஆறாயிரம் கோடிவரை அரசு செலவிட திட்டமிட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார். மதுரை அருகே அலங்காநல்லூரில் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வாயுஅடுப்புக்களையும் வினியோகிக்க நடந்த ஒரு விழாவில் அமைச்சர் பேசும்போது இவ்வாறு கூறினார். இதில் 50 விழுக்காடு வரை நடுவண் அரசின் சர்வ சிக்சா அபியான்(SSA) மூலம் கிடைக்கும் என்றார். தரம் உயர்த்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் ் இவ்வருடமே சரியான எல்லைச்சுவர்களும் வகுப்பறைகளும் கட்டித் தரப்படும் என்றார்.

425 பேருக்கு தொலைக்காட்சிப்பெட்டிகளும் 241 பேருக்கு இலவச வாயு அடுப்புக்களும் அமைச்சர் கொடுத்தார்.

The Hindu News Update Service

கார் விபத்தில் அடிகளார் தப்பினார்

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தின் தலைவரான பொன்னம்பல அடிகளார் திண்டுக்கல் அருகே நடந்த கார்-டிரக் மோதலில் காயமெதுவும் இன்றி தப்பினார்.
திருப்பூருக்குச் சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே இவ்விபத்து நிகழ்ந்ததாக மடத்து அதிகாரிகள் கூறினர். கார் மிகவும் சேதமடைந்தபோதும் அடிகளாருக்கோ உடன் சென்றவருக்கோ ஒட்டுனருக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை எனக் கூறினர். மற்றொரு காரில் அடிகளார் தமது திருப்பூர் பயணத்தை தொடர்ந்தார்.

The Hindu News Update Service

அணுசக்தி : சீனா இந்தியாவுடன் ஒத்துழைக்கும்

இந்திய அமெரிக்கா அணுசக்தி ஒத்துழைப்பினை குறித்த தனது எதிர்மறை கொள்கையை சீனா மாற்றிக் கொள்வதாகத் தெரிகிறது. அனைத்துலக அணுசக்தி கழகத்தின் (IAEA) மேற்பார்வையில் அணுசக்தியை அமைதிப்பணிகளுக்கு பயன்படுத்துவது குறித்து அனைத்து நாடுகளுடன் கூட்டுறவு கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து சென்றிருந்த பதினொரு பேர் அடங்கிய பிரபல மனிதர்கள் குழு சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜீச்சியை வெள்ளியன்று சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறாவிடினும் சென்ற வருடக்கடைசியில் சீன அதிபர் ஹு ஜினடோவின் இந்திய வருகையின்போது இந்தோசீன அணுசக்தி கூட்டுறவு குறித்து பேச்சு வார்த்தை நிகழ்ந்ததாகத் ் தெரிகிறது.


China hints at N-cooperation with India

மதக் கலவரம்: அலகாபாத்தில் ஊரடங்கு

நேற்று வெள்ளி இரவு கரேலி காவல்நிலைய பகுதியில் ஒரு மத வழிபாட்டுதலத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நூலொன்று இழிவுபடுத்தப்படிருந்ததை ஒட்டி துவங்கிய பிரச்சினை காவலர்களின் உறுதிமொழியை அடுத்து அடங்கியது. ஆனால் இன்று காலை காவல்நிலையத்தின் மீது ஆத்திரமடைந்த கும்பல் கல்லெறிந்து கலாட்டா செய்ததில் பன்னிருவருக்கும் அதிகமான காவலர்கள் காயமடைந்தனர். தடியடியிலும் கண்ணீர்புகையும் கூட்டத்தைக் கட்டுபடுத்தமுடியாத நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெருத்த காவலர்படையும் துணை இராணுவப்படையினரும் அமைதியை மீட்க அமர்த்தப் பட்டுள்ளனர். தவிர சாகஞ்ச், கோத்வாலி,குல்டாபாத், அதார்சுயா தூமன்க்ஞ்ச் காவல் சில பகுதிகள் என இங்கெல்லாம் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.
மேல் விவரங்களுக்கு: Curfew imposed in Allahabad, many injured

அறிவியல் இன்று - 01/09/2007

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு
----------------------------------------------------------------------------------------
2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா பெற்றுவிடும் என்று அந்த நாட்டின் வின்வெளி கழகத்தின் தலைவர் அணாடோலி பெர்மினோவ் (Anatoly Perminov) கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து 2027-2032-க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் சென்று இருக்கும்படியான தளம் அமைக்கவும் திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட நாஸா (NASA) நிறுவனத்தை அனுகியதாகவும்,ஆனால் அந்த யோசனையை நாஸா நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
சீனா,ஜப்பான்,இந்தியா போன்ற மற்ற நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இங்கே

தட்பவெட்ப மாறுதல்களால் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்,ஐ.நா விஞ்ஞானி கருத்து.
-------------------------------------------------------------------------------------
-----
உலகில் மாறி வரும் தட்பவெட்ப நிலையினால் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப்பற்றாகுறை ஏற்படலாம் என்று ஐநா சபையின் வானிலை பிரிவின் மூத்த விஞ்ஞானி எம்.வி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 6.3 பில்லியன் மனிதருக்கு உலகின் 11 விழுக்காடு உள்ள விலைநிலங்களின் மூலம் உணவு உற்பத்தி செய்து வருகிறோம்,2020-இல் உலகத்தின் மக்கட்தொகை 8.3 பில்லியன் ஆகும்போது இப்பொழுதிருப்பதை விட குறைந்த விலைநிலங்கள் கொண்டு எப்படி உணவளிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
விலைநிலங்களில் உப்புத்தன்மை அதிமாவதும்,நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதும் ஏற்கெனவே நடந்து வருவதாகவும் ,இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பை உணர ஆரம்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.


ஆதாரம்:
http://www.cbc.ca/technology/story/2007/08/31/science-russia-moon.html
http://www.reuters.com/article/scienceNews/idUSL3191845020070831

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி எதிர்வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது. முதல்வர் டாக்டர் எம்.ஷேக் முஹம்மது, முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இ. ஜாபர் சித்திக்கை 050 5489609 எனும் அலைபேசியிலோ அல்லது hejaf@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொண்டு தங்களை பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

-o❢o-

b r e a k i n g   n e w s...