.

Saturday, August 4, 2007

சான் டியாகோ: சானியா,வீனஸ் தோல்வி

சாண்டியகோவில் நடைபெறும் அகூரா கிளாசிக் டென்னிஸ் போட்டியில் இன்று மரியா சரபோவா இந்தியாவின் சானியா மிர்சாவை 6-2,6-1 என்ற கணக்கில் வென்று அவரது தொடர்வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இருப்பினும் சானியா டென்னிஸ் வீராங்கனைகள் சங்கத்தின் (WTA) தரவரிசையில் முப்பதிற்கு கீழ்வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது அவரது யுஎஸ் ஓப்பன் ஆட்டதொடரில் பங்கேற்பதற்கு பேருதவி புரியும்.

மற்றொரு கால் இறுதிப் போட்டியில் விம்பிள்டன் சாம்பியன் வீனஸ் வில்லியம்ஸை உருசிய வீராங்கனை அன்னா சக்வெதட்ஸ் விறுவிறுப்பான மூன்று செட் ஆட்டத்தில் 6-7(5),7-6(3),6-2 என்ற கணக்கில் வென்று பரபரப்பை உண்டாக்கினார். அடுத்த சுற்றில் சரபோவாவுடன் மோதுவார்.

மற்ற அரையிறுதிப் போட்டியாளர்களும் நிச்சயமாகியுள்ளது. பட்டி ஸ்னைடரும் எலெனா டெமெந்தீவாவும் ஆடுகிறார்கள். ஸ்னைடர் நாடியா பெற்றோவாவை 6-2,6-4 என்ற கணக்கிலும் டெமெந்தீவா மாரியா கிரிலென்கோவை 6-2,6-4 என்ற கணக்கிலும் வென்றனர்.

Acura Classic

செவ்வாய் பயணத்தை துவங்கியது பீனிக்ஸ்

நாசா நிறுவனம் தனது கேப் கானவெரால் நிலையத்திலிருந்து டெல்ட்டா இராக்கெட் மூலமாக பீனிக்ஸ் என்று பெயரிடப்பட்ட ஆய்வுக்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு செல்லுமுகமாக இன்று கிழக்கு அமெரிக்க நேரப்படி காலை 0526க்கு ஏவியது. ஒன்பது மாதங்கள் பயணித்து செவ்வாய் கிரகத்தை இக்கலம் அடையும். அங்கு தரையை அகழ்ந்து முந்தைய,தற்போதைய உயிர் வாழ்வைப் பற்றி ஆய்வு மேற்கொள்ளும். பூமியின் அலாஸ்காவைப் போன்ற ஒரு தரைபிரதேசத்தில் இதனை தரையிறக்க திட்டமிடப் பட்டுள்ளது. அந்தப் பகுதியில் சில செ.மீ ஆழத்திலேயே தண்ணீர் உறைந்து ஐஸாக இருப்பதாக நம்பப் படுகிறது.

இது பற்றிய BBC NEWS செய்தி துணுக்கு | Science/Nature | Lift off for Nasa's Mars probe

திடீரென கொந்தளித்தது மெரினா.

சாலைக்கு வந்த தண்னீரால் சுனாமி பீதி
சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சாலை வரை தண்ணீர் வந்தது. இதனால் சுனாமி வருகிறதோ என்று மக்கள் பீதியடைந்தனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆசிய நாடுகளை சுனாமி அலைகள் புரட்டிப் போட்டன. அதன் பின்னர் அவ்வப்போது கடல் கொந்தளிப்புகளும், சீற்றங்களும், கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதும் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் நேற்று காலையில், சென்னையில் மெரீனா, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பெரும் சீற்றத்துடன் அலைகள் எழுந்தன. பெரும் சத்தத்துடன் பொங்கி எழுந்த அலைகளால் மக்களிடையே பெரும் பீதி எழுந்தது. சீறிப் பாய்ந்த கடல் நீர் மெரீனா கடற்கரையைத் தாண்டி சாலை வரை வந்தது. இதனால் சுனாமி வந்து விட்டது என்று மக்கள் பீதியடைந்து கடற்கரையிலிருந்து ஓடினர். ஆனால் சாதாரண கடல் கொந்தளிப்புதான் எனத் தெரிய வந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்த கடல் சீற்றத்தில் சிக்கி நொச்சிக்குப்பம் பகுதியில், இரு படகுகள் அடித்துச் செல்லப்பட்ன. கடல் கொந்தளிப்பால் கடல் நீர் உட் புகுந்ததால் கடற்கரை மணலில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கிக் காணப்பட்டது. இதேபோல காசிமேடு எண்ணூர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் கடற்கரையோர மக்கள், மீனவர்கள் பீதியுடனேயே காணப்பட்டனர். ஆடிமாதத்தில் இது போன்று கடல் கொந்தளிப்பது வாடிக்கைதான் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்.

கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தாவிலிருந்து தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். ஆனால் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

கழிப்பறை ஏன் மூடப்பட்டுள்ளது என்று பயணிகள் கேட்டதற்கு விமான ஊழியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அத்தனை பயணிகளும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் சென்னைக்கு வந்து சேர்ந்ததும், விமான ஊழியர்கள், ஒரு பயணியை ரகளை செய்ததாக கூறி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதைப் பார்த்ததும் மற்ற பயணிகள் திரண்டு வந்து மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர்.

கழிப்பறைக் கதவு ஏன் மூடப்பட்டிருந்தது என்று கேட்பது குற்றமா, அதற்காக தண்டனையா என்று ஆவேசமாக கேட்டபடி மேலாளரை முற்றுகையிட்டு கோபத்துடன் பேசினர். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அத்தனை பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் வருத்தம் கேட்டனர். இதுபோல இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக கடைப்பிடித்து வருகிறது.

பிரதமர் மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

மக்களை பிளவுபடுத்தும் அரசியல் கொள்கையை பாஜக எப்போதும் கடைப்பிடித்து வருகிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். பெங்களுரில் நேற்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மன்மோகன்சிங் பேசினார்.

அரசியலில் பிளவுபடுத்தும் கொள்கையை கொண்டிருப்பது பாஜகவின் முக்கிய கொள்கையாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, 5 ஆண்டுகளில் நாட்டை பல்வேறு வழிகளில் பிளவுபடுத்தி வைத்திருந்தது. அதை கடந்த 3 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீர்படுத்தியுள்ளது. மேலும், முதலீடு, சேமிப்பு ஆகியவை நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 35 சதவீதமாக அதிகரிக்கச் செய்துள்ளன. இதனால் இந்தியாவை உலக நாடுகள், பொருளாதாரத்தில் மிகவேகமாக வளர்ந்துவரும் நாடு என்று அங்கீகரித்துள்ளன.

இது இந்தியாவுக்கு பெருமையைத் தந்துள்ளது என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார்.

நன்றி: தமிழன் செய்திகள்

அப்பவியான மதானிக்கு நஷ்ட்டஈடு வழங்கவேண்டும்.

பழ.நெடுமாறன் வேண்டுகோள்!
கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

3000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்கள்

பழனியை அடுத்துள்ள சத்திரப்பட்டி, புதுக்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கோழியூத்து என்னும் சிறிய நீரூற்று உள்ளது. இந்த நீரூற்றுக்கு அருகில் 'அலகல்லு' (அலகல்லு என்றால் அலையின் எழுச்சியைப் போல என்று பொருள்) என்னும் பாறையின் மேல் பழமையான ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பாறை ஓவியங்கள் 11 மீட்டர் நீளத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் காணப்படுகின்றன இவை அடர்த்தியான வண்ணப்பூச்சு மற்றும் இரு வண்ணப் பூச்சு முறையைப் பயன்படுத்தி வரையப்பட்டுள்ளன. இது 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது என பாறை ஓவிய வல்லுநர்கள் பவுன்ராஜ், கந்தசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஓவியங்களில் கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை இணைந்த கலவை மற்றும் வெள்ளை மட்டும் என மூன்று வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு நிறம் தீயை விளக்காக்கி பெறப்படும் கருப்பு, பச்சை நிற மூலிகைச் சாறு, விலங்குகளின் கொழுப்பு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கருப்பு வண்ணம் அதிகமாகக் கிடைப்பது இதுவே முதல்முறை.

இங்கு மனிதன் வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டுள்ளதையும், அதற்கு விலங்குகள் மேல் ஏறி ஆயுதத்தைக் கையாள்வதையும் ஓவியமாக வரைந்துள்ளனர். நாய், குதிரை, யானை, மாடு, புலி போன்ற விலங்குகளும், மனிதனின் சடங்குகள், வழிபாட்டு முறைகள், பெரிய உருவத்தைக் கண்டு பயப்படுதல், நடனம், உறங்குதல் போன்ற பல காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், நிலவு, சூரியன் போன்றவையும், இடியுடன் கூடிய மழை, அலங்கார வளைவுகள் போன்றவையும் உள்ளன. இத்தகைய ஓவியங்கள் ஊட்டி அருகே மோயர் பள்ளத்தாக்கில் கண்டறியப்பட்டாலும், இவ்வளவு ஓவியங்கள் மொத்தமாக ஓரிடத்தில் இல்லை. தொல்லியல் நிபுணர்கள் இங்கு ஆய்வு மேற்கொண்டால் மேலும் பல அரிய விஷயங்கள் வெளியாகும்.

தினமணி

குறைந்தது பணவீக்கம்

புதுடில்லி: கடந்த ஜூலை 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 4.36 சதவீதமாகக் குறைந்தது.
உணவு தானியங்கள் மற்றும் பழங்களின் விலை குறைந்ததால், கடந்த ஜூலை 21ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்க விகிதம் 4.36 சதவீதமாகக் குறைந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்க விகிதம் 4.41 சதவீதமாக இருந்தது. கடந்தாண்டு இதே காலகட்டத்தில் பணவீக்க விகிதம் 4.72 சதவீதமாக இருந்தது. உணவு தானியங்கள் விலை குறைந்தாலும், காய்கறிகள் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை தற்போது குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



நன்றி: தினமலர்

சோனியாவைச் சந்தித்தார் சஞ்சய் தத் சகோதரி

நடிகர் சஞ்சய் தத்தின் சகோதரியும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரியா தத், இன்று புதுடெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்துப் பேசினார்.

மறைந்த சுனில் தத்தின் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் பிரியா தத். முன்னதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலையும், இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலையும் பிரியா தத் சந்தித்தார்.

சஞ்சய் தத்தை வெளியே கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்து தமது குடும்பத்தினர் ஆலோசித்து வருவதாக சோனியாவைச் சந்திக்கும் முன் பிரியா தத் குறிப்பிட்டார்.

MSN Tamil

NDTV.com: Sonia Gandhi backs Sanjay Dutt

அகல ரயில் போக்குவரத்து துவக்க விழா ஒத்திவைப்பு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அகல ரயில்பாதை போக்குவரத்து துவக்க விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் அகல ரயில் பாதையை காங்., தலைவர் சோனியா வரும் 6ம் தேதி ராமேஸ்வரத்தில் துவக்கி வைப்பார் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக உயர் அதிகாரிகள் மற்றும் நுõற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் ராமேஸ்வரம் வந்து இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டனர். விழா மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி துவங்கியது. மூன்று நாட்களில் ராமேஸ்வரத்திலிருந்து அகல ரயில் ஓடும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே 6ம் தேதி துவக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பங்கேற்க ஒப்புதல் கிடைக்காததால் நிகழ்ச்சி மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், விரைவாக நடந்து வந்த பணியிலும் தொய்வு விழுந்தது. வரும் 12 ம் தேதி ஆடி அமாவாசை, 15ம் தேதி சுதந்திர தினம், தொடர்ந்து சில நாட்களில் துணை ஜனாதிபதி தேர்தல் என முக்கிய நிகழ்வுகள் இருப்பதால் இம்மாத இறுதியில் விழா நடைபெற வாய்ப்புள்ளது.

- நன்றி: தினமலர்

-o❢o-

b r e a k i n g   n e w s...