.

Sunday, September 2, 2007

சென்னையில் குப்பைகளை அகற்றும் பணி - செய்தித் தொகுப்பு

3,000 குப்பைத் தொட்டிகளை உடைத்தது அதிமுக அரசு: கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே ஆர். தியாகராஜன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில நாள்களாக சென்னையில் நிலவி வரும் குப்பை பிரச்சினை தாற்காலிகமானது தான். மாநகராட்சியின் போர்க்கால நடவடிக்கைகளால் அடுத்த ஓரிரு நாள்களில் நிலைமை சீராகி விடும்.

கடந்த காலத்தில்...: உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னையில் மூன்று மண்டலங்களில் குப்பை அள்ளும் பணிக்காக ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அப்போதும் இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் ஏற்பட்டு, அவை சரி செய்யப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து திறம்படச் செயல்பட்ட ஓனிக்ஸ் நிறுவனத்தை விரட்ட பல வழிகளில் அதிமுக அரசு முயற்சித்தது. 26.1.2003-ல் குப்பைகளுடன் கட்டட இடிபாடுகளையும் சேர்த்து அள்ளி, ஓனிக்ஸ் கணக்குக் காட்டுவதாகக் கூறி, அந்த நிறுவனத்தின் 10-க்கும் மேற்பட்ட குப்பை லாரிகளை மாநகராட்சி நிர்வாகம் சிறை பிடித்தது.

பல தரப்பட்ட குப்பைகளை அள்ளுவது என ஓனிக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை அப்போது நான் சுட்டிக் காட்டினேன். அதையடுத்து, அந்தப் பிரச்னை தீர்ந்தது.

ஓனிக்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்த காலம் முடிந்தவுடன் புதிய ஒப்பந்தங்கள் கோரப்பட்டு, குறைந்த விலைப்புள்ளி அடிப்படையில் தான் நீல் மெட்டல் நிறுவனத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. புதிய நிறுவனம் செயல்படும் போது சில நாள்களுக்குப் பிரச்னைகள் ஏற்படுவது சகஜம்.

~0~


குப்பையை காவல்துறையினர் அகற்றியது அறிந்து கருணாநிதி அளவற்ற மகிழ்ச்சி

கேள்வி: சென்னையில் குப்பை மலைகள் உருவாகிடும் முன்பே அவை மேடுகளாகக் கூட வளர விடாமல், சென்னை மாநகரக் காவல்துறையினர் 'மக்கள் நண்பன்' என்பதை நிரூபிக்கும் வண்ணம், ஒரே நாளில் ஓடியாடி உழைத்து சென்னையை சீர்படுத்திவிட்டார்களே; அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கருணாநிதி பதில்: அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்கள் கடமை உணர்வுடன் நடந்து கொண்டதையும், அவர்களின் மனித நேயத்தையும் வியந்து, 'சட்டம், ஒழுங்கு பராமரிப்பதைப் போலவே சென்னை நகரை தூய்மையாக்குவதும் தங்கள் கடமைகளில் ஒன்று என்பதை சென்னை மாநகரக் காவலர்கள் சாதித்துக் காட்டினர்' என்று ஒரு நாளேடு சபாஷ் போட்டிருப்பதைப் படித்தபோது, என் கண்களில் ஆனந்தகண்ணீர் துளிர்த்தது.

கேள்வி: சென்னை மாநகரில் குப்பைகளை அள்ளுவது குறித்து நிறுவனம் மாற்றப்பட்ட காரணத்தால் ஒரு சில நாட்கள் குப்பைகள் சேர்ந்ததும், அவற்றை அகற்ற உடனே அரசின் சார்பில் முதலமைச்சரே தலையிட்டு, குப்பைகளை அகற்ற ஏற்பாடு செய்துவிட்ட நிலையிலும், ஒருசில கட்சியினர் தாங்களே நேரில் வந்து குப்பைகளை அள்ளப் போவதாக அறிக்கை விடுக்கிறார்களே?

பதில்: அவர்கள் எல்லாம் கட்சி நடத்துவதை பிறகு எப்படித்தான் நாட்டுக்குக் காட்டிக் கொள்வது? அவர்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை, கிடைத்த குப்பையைக் கூட அள்ளவிட மாட்டேன் என்கிறீர்களே?

~0~


எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க வேண்டுகோள்- எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல்

சென்னையில் குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இப் பணியில் ஆர்வமும், பொதுநல நோக்கமும் கொண்ட எக்ஸ்னோராவிடம் ஒப்படைக்க அரசு முன்வர வேண்டும் என்று எக்ஸ்னோரா தலைவர் எம்.பி. நிர்மல் சனிக்கிழமை தெரிவித்தார்.

விழுப்புரத்தில் ஊராட்சித் தலைவர்களுக்கு ஆளுமை மேம்பாட்டு பயிற்சி அளிக்க வந்த அவர் கூறியது:

சென்னையில் குப்பைகள் அகற்றுவதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. ஓனிக்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்த பிறகு, இப்பணி ஒப்படைக்கப்பட்ட நீல் மெட்டல் நிறுவனம் குப்பைகளை அகற்றுவதற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவில்லை. இன்னும் தயாராகவுமில்லை. குப்பைகளை அகற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தேவையில்லை. இதை சேவையாக தன்னார்வத்துடன் மேற்கொள்ளும் அமைப்பு தேவை என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். குப்பை அகற்றுவதை வர்த்தகமாக்குவது, இயற்கை சமநிலையைப் பாதிக்கும்.

சென்னையில் ஏற்கெனவே எக்ஸ்னோரா அமைப்பினர், வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்ததால், குப்பைகளை மக்கள் வீதியில் கொட்டுவதில்லை. குப்பைகளை குறைக்கவும், அவற்றை உரமாக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தியதால், மக்கள் ஈடுபாட்டுடன் இதில் ஆர்வம் காட்டினர் என்றார் நிர்மல்.

~0~


கருணாநிதி உத்தரவு எதிரொலி: சென்னையில் அசுர வேகத்தில் குப்பைகள் அகற்றும் பணி - ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் ஈடுபட்டனர்

சென்னையில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், மைலாப்பூர் ஆகிய 3 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி நீல்மெட்டல் பனால்கா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்களால் குப்பைகளை முழுமையாக அள்ள முடியாததால் குப்பைகள் தேங்கின.

கடலூருக்கு சென்று சென்னை திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி குப்பைகள் பற்றிய செய்திகளை பத்திரிகைகளில் படித்தவுடன், உடனடியாக முதல்-அமைச்சர் கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன், கமிஷனர் ராஜேஷ் லக்கானி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் ஆகியோரை வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அப்போது, 'சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியில் அசுர வேகத்தில் ஈடுபடுங்கள். இதில் எந்த தொய்வும் இருக்கக்கூடாது. மேயர், உயர் அதிகாரிகளில் இருந்து ஊழியர்கள் வரை அனைவரும் ஒரே நேரத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

சென்னையில் குப்பைகள் அகற்றும் பணி குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ஓனிக்ஸ் நிறுவனத்தினர் தொட்டிகளை வைத்து குப்பை அள்ளும் பணிகளையும், நீல்மெட்டல் நிறுவனத்தினர் குப்பை அகற்றும் பணிகளையும், மாநகராட்சி 150 தனியார் லாரிகள் மூலம் இந்த பகுதிகளில் முழுமையாக குப்பைகளை அகற்றி வருகிறது. தெருக்களில் விழும் குப்பைகளும் முழுவீச்சில் அள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், மண்டல அலுவலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் ஆகியோர் தொடர்ந்து இந்த பகுதிகளில் பார்வையிட்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

~0~


நீல் மெட்டல் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்க :: மாநகராட்சி கவுன்சிலர்கள் வற்புறுத்தல்

குப்பையை சரி வர அள்ளாத நீல் மெட்டல் நிறுவனத்தின் ஒப் பந்தத்தை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். நேற்று முன்தினம் நடந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தில் திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று மண்டலங்களில் துப்புரவு பணியை ஒப்பந்தம் பெற்றுள்ள நீல்மெட்டல் பனால்கா நிறுவனம் சரிவர பணி செய்யாததை சுட்டிக் காட்டி கவுன்சிலர்கள் பேசினர்.
- தினமலர்

~0~


முந்தைய சற்றுமுன்:
1. குப்பையை வாரிய அதிமுக கட்சியினர் கைது
2. விஜயகாந்த் 2 நாள் கெடு
3. துப்புரவு பணியில் புதிய நிறுவனம் தோல்வி - ஒப்பந்தம் ரத்தாகிறது



The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage cleared with police assistance
The Hindu : Tamil Nadu / Chennai News : Garbage issue generates heat at council meet

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...