சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 4,000 விளம்பரப் பலகைகள் திங்கள்கிழமை ஒரே நாளில் அகற்றப்பட்டன என்று மாநகர காவல் ஆணையர் நாஞ்சில் குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை கூறியதாவது:
சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலையோரங்களிலும், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் விளம்பரப் பலகைகள் அதிக எண்ணிக்கையில் நிறுவப்பட்டுள்ளன.
அனுமதியின்றி மிகப் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள இந்த விளம்பரப் பலகைகளால் வாகன விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் சாலையை மறைத்து வைக்கப்படும் இந்த மின்னணு விளம்பரப் பலகைகளால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.
இதுதவிர மழைக்காலத்தில் காற்று வீசுவதால் விபத்து ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதையடுத்து அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை அகற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அனுமதியின்றி நிறுவப்பட்டிருந்த விளம்பர அட்டைப்பலகைகள் , துணிப்பலகைகள் (பேனர்) மற்றும் மின்னணு விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டு வருகின்றன. திங்கள்கிழமை மட்டும் நகரில் இருந்த 4,000 விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறையினரின் இந்நடவடிக்கைகள் தொடரும்.
அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் சார்பாக நிறுவப்படும் விளம்பரப் பலகைகளை 2 முதல் 5 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என்ற விதி உள்ளது.
இந்த காலவரம்பிற்குள் விளம்பரப் பலகைகளை நீக்காவிட்டால், உடனடியாக அப்புறப்படுத்தப்படும்.
உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவு பெற்ற நிறுவனங்களைத் தவிர இதர நிறுவனங்களின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளுடன் காவல்துறையினர் இணைந்து புறநகர்ப் பகுதிகளிலும் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
விதிகளை மீறி விளம்பரப் பலகைகளை வைத்திருந்தாலும், புதிதாக நிறுவினாலும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் தீவிரவாதிகள் ஊடுருவல் ஏதும் இல்லை. எனினும் நகரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார் நாஞ்சில் குமரன்.
தினமணி
Tuesday, September 4, 2007
சென்னை: ஒரேநாளில் 4000 விளம்பரப் பலகைகள் அகற்றம்
Posted by வாசகன் at 5:58 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment