.

Saturday, April 21, 2007

நாசா கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி.

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி கட்டடத்தில் இயங்கும் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தில், பில்டிங் 44 என்ற கட்டடத்தில் ஒருவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இந்த சம்பவத்தில் இருவர் பலியானதாகவும் தகவல்கள் வெளியாயின.கட்டடத்திற்குள் புகுந்த மர்ம மனிதன், விஞ்ஞானி ஒருவரை சுட்டுக் கொன்றதாகவும், பின்னர் தன்னைத் தானே சுட்டு கொன்றதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. கையில் துப்பாக்கியுடன் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவன் நாசா கட்டடத்திற்குள் புகுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவ பரபரப்பு அடங்குவதற்குள், நாசா கட்டடத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், அமெரிக்க மக்களிடையே பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.

பெரியார் சிலை உடைப்பு:முத்துப்பேட்டையில் பதற்றம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலயை சில மர்ம ஆசாமிகளால் உடைத்ததின் எதிரொளியாக அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகிஉள்ளது இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Friday, April 20, 2007

சற்றுமுன் : 'அபிஷேக் ஏமாற்றி விட்டார்' து. நடிகை தற்கொலைக்கு முயற்சி!!

ஏப்ரல் 20, 2007

மும்பை: நடிகர் அபிஷேக் பச்சன் தன்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டு ஏமாற்றி விட்டு தற்போது ஐஸ்வர்யா ராயைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி இந்தி துணை நடிகை ஜான்வி கபூர் என்பவர் அமிதாப் பச்சன் வீட்டின் முன்பு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அபிஷேக்பச்சனுடன் தஸ் என்ற படத்தில் இணைந்து சிறு வேடத்தில் நடித்தவர் துணை நடிகை ஜானகி கபூர். இன்று காலை அவர் அமிதாப் பச்சனின் வீட்டுக்கு வந்தார். வீட்டின் முன்புறம் திடீரென தனது கையின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துக் கொண்டார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்தபோது அவர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தது தெரிய வந்தது.

மேலும் முன்னுக்குப் பின் முரணாகவும் அவர் பேசினார். அவருக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் கூறியுள்ளார்.

போலிஸில் ஜான்வி கபூர் அளித்த வாக்குமூலத்தில், நானும், அபிஷேக் பச்சனும் காதலித்தோம். என்னைக் கல்யாணம் செய்து கொள்வதாக அபிஷேக் உறுதியளித்திருந்தார்.

கடந்த ஆண்டு சில நண்பர்கள் முன்னிலையில் எனக்கு அவர் சிந்தூர் (குங்குமம்) வைத்தார். இதனால் எங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதாகத் தான் அர்த்தம்

இதையடுத்து பலமுறை என்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார்.

ஆனால் இப்போது என்னை ஏமாற்றி விட்டு ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து கொள்ள அவர் முடிவெடுத்துள்ளார். இது எனக்கு மிகுந்த மன வேதனையைத் தந்தது. அதனால்தான் தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார் கபூர்.

ஜான்வி கபூர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் விவாகரத்து ஆனவர் என்றும் கூறப்படுகிறது. இவரது நிஜப் பெயர் நைனா ரிஸ்வி.

வெறும் பரபரப்புக்காக அவர் இப்படி நடந்து கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த விஷயத்தில் பச்சன் குடும்பத்தினர் இதுவரை வாய் திறக்க மறுப்பது தான் மர்ம முடிச்சாக உள்ளது.

நன்றி : தட்ஸ் தமிழ்.காம்

சற்றுமுன் : நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்

நைஜீரியாவில் நெய்வேலி என்ஜீனியர் கடத்தல்

ஏப்ரல் 20, 2007

நெய்வேலி: நெய்வேலியைச் சேர்ந்த பொறியாளர், நைஜீரியா நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார். அவரை மீட்க தமிழக அரசும், மத்திய அரசும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்தவர் திவாகரன். இவரது மகன் ராமச்சந்திரன் (36). நைஜீரியாவில் உள்ள குளோபல் ஸ்டீல் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 மாதங்களாக இப்பணியில் அவர் உள்ளார்.

இந்த நிலையில், தீவிரவாதிகள் ராமச்சந்திரன் உள்ளிட்ட இரு இந்தியப் பொறியாளர்களைக் கடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ராமச்சந்திரனின் குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியிலும், சோகத்திலும் மூழ்கியுள்ளனர்.

ராமச்சந்திரனை மீட்க துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு கோரி பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு பெற்றோர் திவாகரன், சாந்தம்மாள், சகோதரர் ராதாகிருஷ்ணன், சகோதரி ராதாமணி ஆகியோர் தந்தி அனுப்பியுள்ளனர்.


நன்றி : தட்ஸ் தமிழ்.காம்

Thursday, April 19, 2007

ஈராக் குண்டுவெடிப்பு பலி 172 ஆக உயர்வு.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது.ஈராக்கின் மத்திய மற்றும் புறநகரில் ஷியா பிரிவு மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நேற்று அடுத்தடுத்து 5 இடங்களில் தொடர்ச்சியாக சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவினர் அதிகமிருக்கும் சத்ரியா என்ற இடத்தில் உள்ள மார்க்கெட்டில் பஸ் ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்து 90 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இதுபோன்ற பல்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களால் பலியானவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பை குண்டுவெடிப்பு : தண்டனை இன்று அறிவிப்பு?

1993ம் ஆண்டு நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்ட 100 குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் பல கட்டங்களாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு நடந்த பயங்கர தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பலியானார்கள். பலர் காயமடைந்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை தடா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் டைகர் மேமன் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ஆனால் இவர்களது குற்றங்களுக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், குற்றவாளிகள் 100 பேரும் மும்பை தடா கோர்ட்டில் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளனர்.இதையடுத்து, குற்றவாளிகளின் தண்டனை இன்று முதல் அறிவிக்கப்படலாம் என நீதிமன்றத்தில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோகநாதன் குடும்பத்தினர் அமெரிக்கா கிளம்பினர்: வாஷிங்டன்- விர்ஜினீயா செல்ல சிறப்பு விமானம்.

தென் கொரிய மாணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட பேராசிரியர் லோகநாதனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக அவரது பெற்றோர் உள்பட 9 பேர் நேற்று நள்ளிரவு அமெரிக்காவுக்குக் கிளம்பிச் சென்றனர். லோகநாதனின் உடல், அவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த விர்ஜீனியா டெக் பல்கலைக்கழக வளாகத்திலேயே அவரது விருப்பப்படி அடக்கம் செய்யப்படவுள்ளது

லோகநாதனின் தாயார் சக்கர நாற்கலியில் அமர்ந்தபடி செல்கிறார்கள்.
இதில் கலந்து கொள்வதற்காக லோகநாதனின் பெற்றோர் உள்ளிட்ட 9 பேர் அமெரிக்கா செல்ல முடிவு செய்யப்பட்டது. அவர்களில் லோகநாதனின் பெற்றோர் வாசுதேவன், கண்ணம்மாள், சகோதரர் செங்கோட்டுவேலவன், அண்ணி செந்தமிழ்ச் செல்வி, இன்னொரு சகோதரர் பழனிவேல், அண்ணி நிர்மலா ஆகியோருக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லை. இதையடுத்து இவர்கள் நான்கு பேருக்கும் முதல்வர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் ஒரு மணி நேரத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதேபோல 9 பேருக்கும் அமெரிக்க தூதரகம் உடனடியாக விசாவும் வழங்கியது.

Wednesday, April 18, 2007

போலி மனைவியுடன் கனடா செல்ல முயன்ற பாஜக எம்.பி கைது!


பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா


மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா கைது செய்யப்பட்டார். குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா. தாஹோத் தொகுதியிலிருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இன்று காலை 7.30 மணிக்கு கனடா தலைநகர் டொரண்டோவுக்கு செல்வதற்காக ஒரு பெண்ணுடன் டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார் கத்தாரா.
அந்தப் பெண்ணின் பாஸ்போர்ட்டை குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதித்தபோது, அதில் அந்தப் பாஸ்போர்ட்டுக்குரியவர் கத்தாராவின் மனைவி சாரதா பென் இல்லை என்பது தெரிய வந்தது. கத்தாராவுடன் வந்த பெண்ணின் பெயர் பரம்ஜித். இதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கத்தாரா விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங். அதில் கத்தாரா தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கத்தாராவை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். குடியேற்றத் துறையினரால் பிடிக்கப்பட்ட கத்தாரா மற்றும் பரம்ஜித் ஆகிய இருவரும் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்


உத்தரபிரதேசம்: ராகுல் காந்தி 5ம் கட்ட பிரச்சாரம்.

உத்தரபிரதேச சட்டசபைக்கான மூன்றாம் கட்டத் தேர்தல் நடந்து வரும் நிலையில்,காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகன் ராகுல் காந்தி தனது 5ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை அமேதி தொகுதியில் இருந்து இன்று துவக்கியுள்ளார்.

Tuesday, April 17, 2007

50 கோடி 'அலேக்' - இரண்டே நிமிடத்தில்

மிகப் பாதுகாப்பான நகரெனக் கருதப்படும் துபாய் நகரின் பளபளப்பும் படோடபமும் நிறைந்த வாஃபி வணிக வளாகத்தில் நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இயந்திரத் துப்பாக்கிகளோடு நுழைந்து அங்கிருந்த வைர நகைககடையில் இருந்த சுமார் 50 மில்லியன் திர்ஹாம் (50 கோடி இந்திய ரூபாய்) மதிப்புள்ள வைர நகைகளை அள்ளிச் சென்றிருக்கிறது.
மிகத் தெளிவாகத் திட்டமிடப்பட்ட இந்தச் சம்ப்வம் மொத்தம் இரண்டே நிமிடங்களீல் நடந்து முடிந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் நடந்த இந்தச் சம்பவம் துபாய் நகரை உலுக்கியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். இத்தனை துணிகரமான் கொள்ளை நடந்திருப்பது காவல்துறையை தனியார் காவல் ஊழியர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்குவது பற்றி யோசிக்க வைத்திருக்கிறது

'பலியான வி ஏ ஓ குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிதி !

காஞ்சிபுரத்தில் வேன் மீது ரயில் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் பலியான விஏஓ (கிராம நிர்வாக அலுவலர்) குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காஞ்சிபுரம் மாவட்டம் வட்டம் கோவிந்தவாடி அகரம் கிராம அருகே செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், ஆளில்லாத லெவல் கிராசிங்கில் வேன் மீது மோதிய விபத்தில் வேனில் பயணம் செய்த 22 பேர்களில் 11 பேர் பலியானார்கள். அதில் 9 பேர் கிராம நிர்வாக அலுவலர்கள். ஒருவர் கிராம நிர்வாகி ஒருவரின் மகன் மற்றொருவர் ஓட்டுனராவார். விபத்து செய்தி கிடைத்ததும்,காஞ்சிபுரம் அமைச்சர் அன்பரசனையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தேன். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் முதல்வர் நிவாரண நிதியில் இருந்தும்,இறந்த அரசு அலுவலர் குடும்பங்களுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியாக ரூ. ஒரு லட்சமும் சேர்த்து ரூ. இரண்டு லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு, அவர்களின் காயத்தின் தன்மைக்கேற்ப மாவட்ட கலெக்டர் பரிந்துரையின் பேரில் நிவாரண வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்தார்.

Monday, April 16, 2007

ச: அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் துப்பாக்கிச்சூடு : 22 பேர் பலி

வாஷிங்டன் : அமெரிக்காவில் வெர்ஜினியா பல்கலை.,யில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் பற்றி அதிபர் புஷ் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்


- "CNN-IBN", தினமலர்

சற்றுமுன்: வேன்மீது மீது ரெயில் மோதி பயங்கரம்: 11 கிராம அதிகாரிகள் பலி

காஞ்சீபுரம், ஏப். 16-

சென்னையில் இன்று மாலை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பேரணி நடை பெற உள்ளது. முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவித்து இந்தபேரணி நடை பெறுகிறது. இதில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து கிராம நிர்வாக அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இருந்து 22 கிராம நிர்வாக அதிகாரிகள் இந்த பேரணியில் பங்கேற்க இன்று அதிகாலை ஒரு வேனில் சென்னை புறப்பட்டனர்.

வேலூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் சங்கத் தலைவர் சண்முக பரணி தலைமையில் அவர்கள் புறப் பட்டு வந்தனர். காஞ்சீபுரம் அருகே வந்ததும் சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள குருஸ்தல மான தட்சிணாமூர்த்தி கோவிலுக்கு செல்ல அவர்கள் முடிவு செய்தனர்.

காலை 9.40 மணி அளவில் வேன் கோவிந்தவாடி அகரம் கிராமத்தை நெருங்கி யது. அங்குள்ள ரெயில்வே கேட்டை வேன் கடக்க முயன்றது. அது ஆள் இல்லாத ரெயில்வே `கேட்' ஆகும்.

அந்த சமயத்தில் தூரத்தில் செங்கல்பட்டில் இருந்து அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் மின் னல் வேகத்தில் வந்து கொண் டிருந்தது. `ரெயில் தூரத்தில் தானே வருகிறது அதற்குள் கடந்து போய் விடலாம்'' என்ற எண்ணத்தில் வேன் டிரைவர் `கேட்'டை கடக்க முயன்றார்.

அதற்குள் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கி விட்டது. கண் இமைக்கும் நேரத்துக்குள் அந்த ரெயில் வேன் மீது மோதியது.

மோதிய வேகத்தில் பலத்த சத்தத்துடன் வேன்தூள்- தூளாக நொறுங்கியது. வேனின் பின் பகுதி முழுமையாக நொறுங்கிச் சிதறியது. உடைந்த வேனின் ஒரு பகுதியை ரெயில் 15 மீட்டர் தூரத்துக்கு இழுத் துச் சென்று நின்றது. வேனில் இருந்த 23 பேரும் சின்னா பின்னமாகி

சிதறினார்கள்.இதில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் துண்டு, துண்டாகி சிதறி பலியானார் கள். அவர்களது உடல்கள் ரெயில் தண்டவாளத்தில் ஆங் காங்கே சிதறிக் கிடந்தன. அந்த பகுதியே ரத்த ஆறு ஓடியது போல காட்சி அளித்தது.

மற்ற 11 கிராம அதிகாரிகள் உடல் நசுங்கி படுகாயங்களு டன்துடி துடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் நின்றவர்கள் ஓடி வந்தனர்.

சம்பவ இடத்துக்கு ரெயில்வே ஐ.ஜி. ராஜா உத் தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ராதிகா மற்றும் போலீசாரும் மீட்பு படை யினரும் வந்தனர். உயிருக் குப் போராடிக் கொண் டிருந்தவர்களை மீட்டு, மருத் துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தென்னக ரெயில்வே அதிகாரிகளும் சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தனர்.

காயம் அடைந்தவர்கள் காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு

வருகிறது.இதில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் பலியா னோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

6 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் புதுப்பாக் கத்தில் உள்ள ஆள் இல்லா ரெயில்வே கேட்டில் சென்னை - திருமால்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஆட்டோ மீது மோதி 17 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாக்கம் விபத்தில் 17 உயிர்கள் பறிபோனதுமே ரெயில்வே அதிகாரிகள் ஆள் இல்லா ரெயில்வே கேட் பகுதிகளில் கவனம் செலுத்தி இருந்தால் இன்று நடந்த பரிதாப உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம்.


வேனில் வந்த 23 பேர் விபரம்

1. சண்முகபரணி

(செங்காநல்லூர்)

2. புருஷோத்தமன்

(அத்திïர்)

3. மனோகரன்

(அடுக்கம்பாறை)

4. தாண்டவராயன்

(செம்பேடு)

5. பிரபாகரன்

(சேன்பாக்கம்)

6. நாராயணசாமி

(விரிப்பாச்சிபுரம்)

7. நடராஜன் (அரிïர்)

8. தாமோதரன்

(கரடிக்குடி)

9. மதிவாணன்

(மேல்மணவூர்)

10. வெங்கடேசன்

(பெல்லூர்)

11. ராமமூர்த்தி (வல்லம்)

12. எஸ்.குணசேகரன்

(வேலம்பாடி)

13. எம்.குணசேகரன்

(பாலமதி)

14. செல்லபாண்டியன்

(ஊனைவாணியம்பாடி)

15. துரைசாமி

(கனிகனியான்)

16. மேகநாதன்

(மேல் அரசம்பட்டு)

17. பாலகிருஷ்ணன்

18. குமாரசாமி

(இலவம்பாடி)

19. பன்னீர்செல்வம்

(அணைக்கட்டு)

20. நந்தகுமார்

(பெருமுகை)

21. ரவி

(ராமமூர்த்தி மகன்)

22. மோகன்

23. குமார்

(வேன் டிரைவர்)

=மாலைமலர்.

மேலும் தட்ஸ்தமிழ்

சட்டசபையில் இன்றும் அதிமுக வெளிநடப்பு.

4 அதிமுக எம்எல்ஏக்களை இந்த பட்ஜெட் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை எதிர்த்து இன்றும் அதிமுக வெளிநடப்பு செய்தது. முன்னதாக அதிமுக துணைதலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கடந்த ஏப்ரல் 5ம் தேதி சட்டசபையில் ஏற்பட்ட பிரச்சனையில் (செருப்பை காட்டி கலாட்டா செய்தது) 4 அதிமுக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கடந்த 10 நாட்களாக அவர்கள் தங்கள் கடமையை செய்வதிலிருந்து விலகி வைக்கப்பட்டுள்ளனர். புரட்சித் தலைவரை விமர்சித்து பேசியதால் உணர்ச்சிவசப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆளுங்கட்சிகாரர்களும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும்தான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.எனவே சபாநாயகர் இதுகுறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார்.

சிகரெட் விலை உயர்வு-"ஊதுவோர்" டென்ஷன் !

பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், சிகரெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் புகை பிடிப்போர் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 2007-2008 க்கான மத்திய பொது பட்ஜெட்டில் புகையிலை தொடர்பான பொருட்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து சிகரெட்டுகளின் விலையையும் அதன் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. வில்ஸ் சிகரெட்டின் விலை நேற்று முதல் திடீரென உயர்த்தப்பட்டது. ரூ.3க்கு விற்கப்பட்ட ஒரு சிகிரெட்டின் விலை இப்போது ரூ. 3.50க்கு விற்கப்படுகிறது. முன்னதாக ஒரு பாக்கெட் வில்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 33 ஆக இருந்தது. இப்போது ரூ. 34 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, கிங்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 3.50லிருந்து ரூ. 4 ஆக அதிகரித்துள்ளது. கத்திரி சிகரெட் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளால் புகை பிடிப்போர் டென்ஷனாகி உள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

-o❢o-

b r e a k i n g   n e w s...