.

Tuesday, May 29, 2007

சேதுசமுத்திர திட்டம் :ராம.கோபாலன் வழக்கு விசாரணை.

ராமரே அழித்து விட்டார்! ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு.


ராமர் சேது பாலமே இல்லையென்று கூறிவந்த மத்திய அரசு, தற்போது அந்த பாலத்தை ராமரே அழித்து விட்டதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறியிருக்கிறது. இது தமிழக அரசின் கெஜட்டில் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறை வேற்றும் போது ராமர் பாலத்தை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலனும், ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமியும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவர்களுடைய மனுக்கள் இம்மாதம் 15ம் தேதி விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு 29ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிபதிகள் ஜோதிமணி, சுதாகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று முதலாவதாக சுப்பிரமணியசாமியின் வழக்கு விசாரணைக்கு வந்தபோது அவரே நேரில் ஆஜரானார். மத்திய அரசின் சார்பில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் வில்சன் ஆஜரானார்.
மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணையை ஜூன் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன் பின்னர் ராமகோபாலன் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை செயலர், இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல், சேதுசமுத்திர திட்டத் தலைவர் உள்ளிட்ட 5 பேர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தே மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றத் தொடங்கி உள்ளது. மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் தடையில்லா சான்று வழங்கி இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.சேது சமுத்திர திட்டம்
உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஆயினும் உச்சநீதிமன்றம் தடை எதையும் வழங்கவில்லை. ராமர் பாலம் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படவில்லை; கற்பனையானது. ஆதம்பாலத்தை ஆழப்படுத்த 230 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆதம்பாலம் என்பது மணல் திட்டுக்களே. அது ராமர் பாலம் அல்ல.
இலங்கையில் இருந்து ராமர் திரும்பிய பிறகு தன் வில்லை ஏவி அவர் அமைத்த பாலத்தை அவரே அழித்து விட்டதாக தமிழ்நாடு கெஜட்டில் கூறப்பட்டுள்ளது. இல்லாத பாலத்தை இருப்பதாக கூறுகிறார்கள். எனவே இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...