.

Wednesday, August 22, 2007

39 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த விமானப்படை வீரரின் சடலம்.

இமயமலைப் பகுதியில் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் நடந்த விமான விபத்தில் பலியான இந்திய வீரரின் சடலம் நேற்று முன் தினம் கண்டெடுக்கப்பட்டு, பின்னர் தகனம் செய்யப்பட்டது.

காஷ்மீரில் லே பகுதியில், கடந்த 1968ம் ஆண்டு, பிப்., 7ம் தேதி, விமானப் படைக்கு சொந்தமான ஏ.என். 12 என்ற விமானம் விபத்துக்குள்ளானது. இமயமலையை அடுத்துள்ள சந்திரபாகா மலைப் பகுதியில் ஆறாயிரத்து 264 மீட்டர் உயரத்தில் விபத்து நடந்ததால், அந்த விமானத்தில் இருந்த ராணுவ மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 102 பேரும் இறந்து விட்டதாக கருதப்பட்டது.இந்நிலையில், கடந்த 2003ம் ஆண்டு ஜூலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சிய பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டன.

அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும், கோடைக் காலத்தில், விமானத்தின் வேறு பாகங்களோ அல்லது வீரர்களின் உடல்களோ கிடைக்குமா என்று ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வந்தது.அதன்படி, இந்த ஆண்டும் கடந்த 2ம் தேதி முதல் தேடுதல் வேட்டை தொடங்கியது. அப்போது, பனி மலையால் மூடப்பட்ட நிலையில், மூன்று சடலங்களை இந்திய ராணுவம் கண்டு பிடித்தது. அவற்றில், ஒரு சடலம் ராணுவ சீருடை மற்றும் அடையாள அட்டையுடன், அப்படியே இருந்தது. அந்த அடையாள அட்டையில் இருந்த குறிப்புகளைக் கொண்டு, அப்போது 20 வயதாக இருந்த மகேந்திர நாத் புகோன்வாஸ் என்னும் வீரருடைய சடலம் என்று கண்டுபிடிக்கப்பட்டது.அவரது குடும்பம் குறித்து விசாரித்ததில், அசாம் தலைநகர் கவுகாத்தியில் இருந்து, 360 கி.மீ., தொலைவில், தியோதாய் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வருவது தெரியவந்தது. அதனால், மகேந்திர நாத் உடல், தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டியில் வைத்து, கடந்த திங்கட்கிழமை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. நேற்று, முழு ராணுவ மரியாதையுடன், ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில், மகேந்திர நாத் உடல் தகனம் செய்யப்பட்டது.

ராணுவ வீரர் மகேந்திராவின் உடன் பிறந்தவர்கள் மொத்தம் மூன்று சகோதரர்கள். அவர்களில் இரண்டாவது சகோதரர் துபேன் திருமணம் கடந்த 1967ல் நடந்தது. அப்போது தான், மகேந்திரா, தனது சொந்த ஊருக்கு வந்து, குடும்பத்தினருடன் சேர்ந்து இருந்தார்.இதுகுறித்து துபேன் கூறுகையில், "எங்கள் குழந்தைகளிடம் காட்டுவதற்கு, துரதிர்ஷ்டவசமாக மகேந்திராவின் போட்டோ கூட எங்களிடம் இல்லை. கடைசியாக அவனை சடலமாக பார்ப்பதற்கு, எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது' என்றார்.

துர்காநாத் என்ற இளைய சகோதரர் கூறும் போது, "எனது சகோதரர் பயணம் செய்த விமானம், கடந்த 39 ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கியது. அந்த இடத்தில் இருந்து, தற்போது சடலம் கிடைத்து இருப்பதை, எங்களால் நம்பவே முடியவில்லை. இதை தெய்வாதீன செயல் என்று தான் கூற வேண்டும். இது கனவு போல இருக்கிறது. எனினும், எனது அன்பு தம்பியின் சடலம் கிடைத்து, அதற்கு இறுதி மரியாதை செய்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்' என்றார்.மூத்த சகோதரர் ஜித்தன் கூறுகையில், "விமான விபத்து நடந்தது குறித்து கேள்விப்பட்டு, நாங்கள் சில நாட்கள் காத்திருந்தோம். ஆனால், அதன் பிறகு, நாங்கள் இறுதிச் சடங்கு செய்து விட்டோம். தற்போது, இரண்டாவது முறையாக, இறுதிச் சடங்கு செய்கிறோம்' என்றார்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...